ஈரோடு மாவட்ட ஆட்சியர் வாகனம் மோதி ஒருவர் பலி.. நிவாரணம் வழங்க கோரிக்கை

Published On:

| By Pandeeswari Gurusamy

கோபிசெட்டிபாளையம் பகுதியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சென்ற வாகனம் மீது இரு சக்கர வாகனம் மோதிய சம்பவத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வரும் கந்தசாமி, தமிழ்நாடு அரசின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் சத்தியமங்கலம் பகுதியில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்றார். பல்வேறு அரசுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்த பின்னர், அவர் தனது அரசு வாகனத்தில் சத்தியமங்கலத்திலிருந்து கோபிசெட்டிபாளையம் வழியாக ஈரோடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

அப்போது, கோபிசெட்டிபாளையத்தை அடுத்த வெள்ளாளபாளையம் பிரிவு அருகே, வெள்ளாளகோயில் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்ற நபர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். எதிர்பாராதவிதமாக, மாவட்ட ஆட்சியரின் அரசு வாகனம் சண்முகத்தின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சண்முகம் பலத்த காயம் அடைந்தார். அப்பகுதியில் இருந்த பொதுமக்களும் காவல்துறையினரும் உடனடியாக மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சண்முகத்தை அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வரை உடன் இருந்தார். மேலும் டாவலி உள்ளிட்ட இருவரை சண்முகத்திற்கு உதவும் வகையில் அனுப்பி வைத்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சண்முகம் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இந்த விபத்து நடந்த சூழ்நிலைகள் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சண்முகம் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கும் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில் விபத்து குறித்து தகவலறிந்த அமைச்சர் செங்கோட்டையன் தவெக நிர்வாகிகளை அழைத்து உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளுக்கு உதவுமாறு உத்தரவிட்டிருந்தார். மேலும் அமைச்சர் செங்கோட்டையன் கோபி செட்டி பாளையம் வரும் போது இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே, விபத்தில் உயிரிழந்த சண்முகத்தின் குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share