கோவை அகிலன் தற்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரு ஆசிரியர்களை கைது செய்யும் வரை எங்களது மகனின் உடலை வாங்க மாட்டோம் என்று மாணவனின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை பீளமேடு அருகே உள்ள ஏடி காலனியைச் சேர்ந்த அசோக்குமார் கௌசல்யா தேவி தம்பதியின் மகனான அகிலன், அந்தப் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்தார்.
கடந்த அக்டோபர் 21ஆம் தேதி காலை 8 மணி அளவில் பள்ளிக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் பள்ளிக்கு செல்லாமல் மீண்டும் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது.
தொடர்ந்து தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மதியம் ஒரு மணி அளவில் மாணவனின் தாய் வந்து பார்த்தபோது, அகிலன் அசைவற்ற நிலையில் இருந்ததாக கூறி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தனது மகனின் இறப்புக்கு பள்ளியில் நடந்த சாதிய கொடுமையை காரணம் என்று பெற்றோர்கள் அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்காக யாரெல்லாம் பட்டியல் பிரிவை சேர்ந்தவர்கள் என பள்ளியில் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவன் அகிலன் உட்பட நான்கு பேர் எழுந்துள்ளனர்.
தொடர்ந்து, அகிலனிடம் நீ எஸ்.சி யா? மாட்டிறைச்சி சாப்பிடுவாயா? என்று வகுப்பறையில் ஆசிரியர் கேட்டதாகவும் அதைத்தொடர்ந்து சக மாணவர்கள் இரண்டு பேர் இழிவு படுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அகிலன் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்த நிலையில் அகிலன் படித்து வந்த வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண் குமார், இரண்டு மாணவர்கள் என நான்கு பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண்குமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கே.கே நாயுடு பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசிரியர்கள் இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி மாணவர்களும் அவர்களது உறவினர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், “வாத்தியார்களை சஸ்பெண்ட் செய்து விட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இன்னும் கைது செய்யவில்லை. இரண்டு பசங்களை கைது செய்து இருக்கிறார்கள். ஆனால் வாத்தியார்களை ஏன் கைது செய்யவில்லை என்று தெரியவில்லை. போதிய ஆதாரம் கிடைக்கவில்லை. தேடிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள். விஜயகுமார் சார், அருண்குமார் சார் இரண்டு பேரையும் கைது செய்து விட்டால் எனது மகனை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு போய்விடுவோம். எனது மகனுக்கு ஏற்பட்டது போல் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. இதுதான் எங்களுடைய கோரிக்கை” என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் அகிலன் பயின்ற பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நான், 2024-25 பேட்ச் மாணவன். அருண் சார் கிட்ட தான் படித்தேன். இதுபோல சாதியை வைத்து கார்னர் செய்வது, சாதியை சொல்லி அசிங்கப்படுத்துவது, பசங்களுக்கு மத்தியில் சாதி சண்டையை வளர்த்து விடுவது தான் எல்லாவற்றுக்கும் காரணம்.
குறிப்பாக அருண் சார் மட்டுமே காரணம். அவர்தான் இது எல்லாவற்றையும் தூக்கி நடத்திக் கொண்டு இருக்கிறார். கண்டிப்பாக இந்த அரசாங்கம் நீதி கொடுத்தே ஆக வேண்டும்.
அதற்காகத்தான் ஒரு முன்னாள் மாணவனாக நான் இங்கு வந்து நின்று கொண்டிருக்கிறேன்.
சொல்லப்போனால் நான் முன்னாள் மாணவன் கிடையாது. ட்ராப் அவுட் ஸ்டுடென்ட். அருண் சார் டார்ச்சரை தாங்க முடியாமல் டிராப் அவுட் ஆனேன்.
2024-25 ஆம் கல்வி ஆண்டில் பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது ஆறு மாதம்தான் பள்ளிக்குப் போனேன். அதன் பிறகு அப்படியே பாதியில் நின்று விட்டேன்.
இதற்கு மேல் என்னால் இங்கு படிக்க முடியவில்லை. ஏஜ் பார் ஆகிவிட்டது. இனி எங்கும் படிக்கவும் முடியாது. இதற்குக் காரணம் அருண் சார் தான். எனக்கும் நீதி கிடைக்க வேண்டும் அவ்வளவு தான்.
முன்னதாக இது பற்றி நான் புகார் எதுவும் செய்யவில்லை. அப்போது புகார் செய்யக்கூடிய நிலையில் நான் இல்லை.
ஸ்டேஷன் பக்கம் போனால் உன் டிசியை கிழிச்சிடுவேன். படிப்பே நாசமாகிவிடும். உன்னுடைய வாழ்க்கை நாசமாகிவிடும் என்று இன்றுவரை பயமுறுத்தி வைத்திருந்தார்.
நேற்றும் இன்றும், இரண்டு நாட்களாக பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் எல்லோரும் சேர்ந்து, மாணவர்களை மூளை சலவை செய்து கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து ஆர்பாட்டம் செய்ய வேண்டும். அப்போதுதான் நமது சாரை மீட்டு எடுக்க முடியும் என்று கூறுகிறார்கள்.
அந்த இரண்டு ஆசிரியர்களையும் கைது செய்யாமல் இருப்பது மிகப்பெரிய சட்டவிரோதமான செயல். அவர்களை காப்பாற்ற நினைக்கிறார்கள். காவல்துறை எல்லா ஸ்டாப்பையும் காப்பாற்ற நினைக்கிறார்கள்.
ஒரு வருடத்துக்கு குறைந்தபட்சம் 5 முதல் 8 மாணவர்கள், பள்ளி ஆரம்பித்த சில நாட்களிலேயே டிசி வாங்கிக் கொண்டு போய் விடுகிறார்கள். இதற்கெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
