நூறு விழுக்காடு உயர்கல்வி : ஓர் ஆட்சியரின் கனவு!

Published On:

| By நா.மணி

நா.மணி

தமிழ்நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் நாட்டின் சராசரியை விட இரண்டு மடங்கிற்கு மேல். பல வளர்ந்த நாடுகளுக்கு இணையாகவும் சில வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் அதிகமாகவும் தமிழ்நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் இருக்கிறது.

ஆனால், இது போதாது, “நூறு விழுக்காட்டை அடையவேண்டும்” என்று தொடர்ந்து பள்ளிக் கல்வி துறையும் அரசும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பள்ளிக் கல்வித் துறை ஒரு கூகுள் படிவம் தயார் செய்து, பள்ளியிலிருந்து கல்லூரி சென்றவர்கள் யார் யார்? என்பதை பட்டியலிடுகிறது. கல்லூரி செல்லாத மாணவர்களை சேர்க்க முயற்சி செய்கின்றனர். இதில் மாவட்ட ஆட்சியர்களின் பங்கு மிக முக்கியமானது.

ADVERTISEMENT

குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப் பணியில் இணையும் அதிகாரிகளுக்கு பல்வேறு துறைகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது.

“எந்தத் துறையும் முக்கியமற்றதல்ல என சில அதிகாரிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை வெறும் நிர்வாகப் பணியாக மட்டும் பார்க்காமல், சமூக மாற்றத்திற்கான கருவியாக மாற்றுகின்றனர். அதில் முத்திரை பதிக்கின்றனர். முன் உதாரணமாக திகழ்கின்றனர். இளம் பகவத் அந்த வரிசையில் கவனிக்கத்தக்கவர்.

ADVERTISEMENT

கொரோனா கால கற்றல் இழப்புகளை சரி செய்ய கொண்டுவரப்பட்ட “இல்லம் தேடி கல்வி” திட்டத்தின் பொறுப்பாளராக பணியாற்றியபோது, ‌அவர் தனது தனித்துவமான அணுகுமுறையை வெளிப்படுத்தினார்.

அடுத்த இலக்கு 100%

ADVERTISEMENT

பின்னர் நூலகப் பொறுப்பு, மாவட்டம் தோறும் முதல்முறையாக புத்தகக் கண்காட்சிகளை அரசு முன்னெடுத்த போது, வாசிப்பு பண்பாட்டை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால், அவரை தனித்துவமாக அடையாளப்படுத்தியது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மேற்கொண்ட “நூறு விழுக்காடு உயர்கல்வி சேர்க்கை” இயக்கமே.

உயர்கல்வி சேர்க்கை என வரும் போது, பள்ளியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கல்லூரியில் சேர வழிகாட்டுவது வரைதான் நிர்வாகத்தின் பொறுப்பாக கருதி வருகிறார்கள். ஆனால் இளம் பகவத் அதற்கும் அப்பால் சென்றார்.

பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஒவ்வொரு மாணவரும் கல்லூரியில் சேர வேண்டும் என்பதையே தனது இலக்காக நிர்ணயித்தார். ஒரு மாணவர் உண்மையில் கல்லூரியில் சேர்ந்தாரா என்பதை உறுதி செய்ய, அவரது மதிப்பெண் சான்றிதழையும் கல்லூரிக் கட்டணம் செலுத்திய ரசீதையும் ஒப்பிட்டு சரிபார்த்தார். ஒரு மாணவருக்காக போலி ரசீது தயாரித்து சமர்ப்பிக்கப்பட்ட நிகழ்வைக் கூட அவர் கண்டறிந்தார். இது இலக்கை அடைவதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

உயர்கல்வி பயில மிகப்பெரிய தடைக்கல்லாக இருப்பது பொருளாதாரச் சிக்கல்தான். தந்தை இழந்தவர்கள், தாயை இழந்தவர்கள், இருவரையும் இழந்தவர்கள், தந்தையர்கள் இருந்தும் இல்லாமல் தவிக்கும் மாணவர்கள், குடும்ப ஆதரவு இல்லாதவர்கள், கடுமையான வறுமையில் வாழ்பவர்கள், குடும்ப சூழ்நிலையால் உயர்  நிலைப் படிப்பைத் தொடர முடியாதவர்கள் என பலர் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தும் கல்லூரி வாசலை அடைய முடியாமல் நிற்கிறார்கள்.

இந்தத் தடைகளை உடைக்கவே அவர் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டார். எந்த மாணவருக்கு எவ்வளவு நிதி தேவை என்பதை முதலில் பட்டியலிட்டார். பின்னர் அரசு உதவித்தொகைகள், முதல் பட்டதாரி திட்டம், வங்கிக் கடன் உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திய பின்னரும் சேர முடியாத மாணவர்களை அடையாளம் கண்டார். அவர்களுக்குத் தேவையான நிதியை சமூகத்திலிருந்து திரட்டினார்.

இதற்காக அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட பல அமைப்புகளை நேரடியாக அணுகினார். “உங்கள் உரிமைகளுக்காக சங்கம் அமைத்து போராடுகிறீர்கள்; அதே ஒற்றுமையை சமூகப் பொறுப்புக்காக ஏன் பயன்படுத்தக்கூடாது?” என்ற அவரது கோரிக்கை  பலரையும் சிந்திக்க வைத்தது. அதன் விளைவாக பல சங்கங்கள் தங்கள் பங்களிப்பை வழங்க முன்வந்தன. அந்த நிதி தேவையுடைய மாணவர்களிடம் சென்றடைந்தது.

இந்த முயற்சியில் மிகவும் நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வு ஒன்று நடந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரும் அளவுக்கு 198.5 ஒற்றைச் சாளர கட்ஆஃப் ‌மதிப்பெண்கள் பெற்றிருந்த ஒரு மாணவர், பொருளாதாரக் காரணங்களால் கவுன்சிலிங்கில் பங்கேற்காமல் வேலைக்குச் சென்றுவிட்டார். இந்த ஆண்டு முழுவதும் உழைத்து சம்பாதித்து  அடுத்த ஆண்டு   படிக்க வேண்டும் என்பதே அவரது திட்டமாக இருந்தது. இந்த கல்வி ஆண்டில் நிச்சயமாக தன்னால் படிக்க முடியாது என்று இருந்த மாணவனை அவன் பணி செய்யும் இடத்திலேயே தேடிக் கண்டுபிடிக்க ஏற்பாடு செய்தார். மறுநாள் காலையில் கவுன்சிலிங். அந்த மாணவனிடம் நேரிடையாக தேவையான அனைத்து செலவுகளுக்கும்  ஏற்பாடுகளை  உடனடியாக செய்தார்.

ஆசிரியர்கள் இருவர் அவருடன் அனுப்பப்பட்டனர். அன்றைய தினமே  அவருக்குத் தேவைப்பட்ட ஒன்றரை லட்சம் ரூபாயை ஆசிரியர் சங்கம் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்தார். அந்த மாணவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரும் வாய்ப்பைப் பெற்றார். கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் 360 பேர் மட்டுமே உயர் கல்விக்கு செல்ல முடியவில்லை. இது வெறும் ஒரு மாணவரின் வெற்றிக் கதை அல்ல, திறமையை வறுமை தோற்கடிக்கக் கூடாது என்ற சமூகத்தின் உறுதிமொழி.

சேலத்திலும் தொடரும் கல்விப் புரட்சி

தற்போது சேலம் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள இளம் பகவத், அதே முயற்சியை அங்கும் முன்னெடுத்து வருகிறார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த சுமார் 36 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் அவரது கவனத்தில் உள்ளது. தினந்தோறும் மாலை நேரத்திற்குப் பிறகும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களை அழைத்து நிலவரம் கேட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உண்மையில், தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளிக் கல்வித் துறையும் மாவட்ட நிர்வாகங்களும் பிளஸ்-2 முடித்த மாணவர்களின் அடுத்தகட்ட கல்விப் பயணத்தை கண்காணித்து வருகின்றன. 

பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள் யார், அவர்கள் கல்லூரிக்குச் செல்கிறார்களா, இடைநிறுத்தம் ஏற்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் அமைப்புகள் உருவாகியுள்ளன. ஆனால், இளம் பகவத் போன்ற அதிகாரிகள் இந்த நிர்வாகச் செயல்பாட்டை சமூக இயக்கமாக மாற்றியிருக்கிறார்கள்.

உயர்கல்வி என்பது தனிநபர் முன்னேற்றத்திற்கான பாதை மட்டுமல்ல, சமூக நீதிக்கான கருவியும் ஆகும். ஒரு ஏழைக் குடும்பத்தின் குழந்தை கல்லூரி வளாகத்தை அடையும் போது, அந்தக் குடும்பத்தின் வரலாறே மாறுகிறது. இதை உணர்ந்த நிர்வாகமும், அதற்கு கைகொடுக்கும் சமூக அமைப்புகளும் இணையும் போது தான் உண்மையான வளர்ச்சி சாத்தியமாகிறது.

தமிழ்நாடு  60 சதவீத உயர்கல்வி சேர்க்கையைப் பெருமையாகக் கொண்டாடுகிறது. ஆனால் நாளைய தமிழ்நாடு, “பள்ளியில் தேர்ச்சி பெற்ற ஒவ்வொரு மாணவரும் உயர்கல்வியில்  சேர்ந்து விட  வேண்டும்” என்ற இலக்கை நோக்கிச் சென்று  கொண்டு இருக்கிறது.  அந்தப் பயணத்தில் இளம் பகவத் போன்ற அதிகாரிகள் காட்டும் பாதை, நிர்வாகத் திறனின் வெற்றியாக மட்டுமல்ல,  சமூக அக்கறையின் புதிய மாதிரியாகவும் விளங்குகிறது.

கட்டுரையாளர்

இயக்குநர், சமூக மேம்பாட்டுக்கான ஆய்வு மையம். 

Photo of author
நா.மணி

நா.மணி, பேராசிரியர், மேனாள் தலைவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share