ADVERTISEMENT

கல்வியில் முதலிடம்: ஈரோடு சாதித்தது எப்படி?

Published On:

| By நா.மணி

நா.மணி

இந்த ஆண்டு நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.87 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, நூறு மாணவர்களில் சராசரியாக ஒரு மாணவர் மட்டுமே தேர்ச்சி அடையவில்லை.

ADVERTISEMENT

இது குறிப்பிடத்தக்க சாதனையே என்றாலும், ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை இது முற்றிலும் புதிய நிகழ்வு அல்ல. 2015 ஆம் ஆண்டு முதல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை ஆராய்ந்தால், மாநில அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் தொடர்ந்து இடம்பெற்று வரும் மாவட்டமாக ஈரோடு விளங்குகிறது.

2022-ஆம் ஆண்டில் மட்டும் 13-ஆம் இடத்திற்கும், அடுத்த ஆண்டு 8-ஆம் இடம் என்ற பின்னடைவை சந்தித்தது. அதனைத் தவிர, தேர்ச்சி விகிதத்தில் தொடர்ந்து முன்னணியில் இருந்துவரும் மாவட்டம்.

ADVERTISEMENT

வெற்றியின் வழித்தடங்கள்

இந்த ஆண்டின் முதலிட வெற்றிக்குப் பின்னால் என்ன காரணங்கள் உள்ளன? அதை எவ்வாறு சாத்தியப்படுத்தினர்? என்பதை அறிய ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மான்விழி அவர்களுடன் மேற்கொண்ட உரையாடலின் அடிப்படையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிர்வாகிகள் இணைந்து செயல்பட்ட விதத்தையும், புதிய கல்வி மேலாண்மை அணுகுமுறைகளையும் இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

தனித்துவமான முதன்மைக் கல்வி அலுவலர்

மான்விழி, அடிப்படையில் கல்வியியல் ஆய்வாளர். மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றியவர். கற்றல்–கற்பித்தல் முறைகள், விளிம்புநிலை சமூகங்களின் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்ட அனுபவம் கொண்டவர். எனவே அவரது அணுகுமுறை வழக்கமான நிர்வாக அணுகுமுறையாக இல்லாமல், ஆய்வு அடிப்படையிலானதாக இருந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தான் ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்ற போதிலும், குறுகிய காலத்தில் பொதுத் தேர்வை எதிர்கொள்ள பல புதுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.

அணுகுமுறை மாற்றம்

பொதுவாக பொதுத் தேர்வை முன்னிட்டு பரிசீலனைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை, “பிரச்சினை அடிப்படையிலான அணுகுமுறை” கையாளப்பட்டது. 10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் மாணவர்கள் பெற்றிருந்த மதிப்பெண்கள் மற்றும் தேர்ச்சி நிலைகள் ஆய்வு செய்யப்பட்டன. எந்தப் பாடங்களில், எந்தப் பகுதிகளில் மாணவர்கள் பின்தங்கியுள்ளனர் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கன்னட மொழி பள்ளிகளில் தமிழ் பயிற்சி

குறிப்பாக, கர்நாடக எல்லைப் பகுதிகளில் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் தேர்ச்சி பெறுவதில் சிரமம் அனுபவித்து வந்தனர். இது மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தையும் பாதித்தது.

இதற்குத் தீர்வாக குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை மையமாகக் கொண்டு எளிய மற்றும் சுருக்கமான கற்றல் கையேடுகள் தயாரிக்கப்பட்டன. சிறந்த தமிழாசிரியர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது.

ஆசிரியர்களுக்கும் கூடுதல் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதன் விளைவாக தமிழ்ப் பாடத்தில் தோல்வியடையும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.

நிறைவு செய்யப்பட்ட மாணவன் தேவை

“ஒரு மாணவன் ஏன் தோல்வியடைந்தான்?” அதனைத் தடுக்க ஏன் ஆசிரியர் தவறினார்?
என்ற கேள்விகளைவிட, “ஒரு மாணவன் தேர்ச்சி பெற என்ன தேவை?” என்ற அணுகுமுறை கையாளப்பட்டது. இதுவே இந்த முயற்சியின் மையக் கருத்தாக இருந்தது.

குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்காக பாடவாரியாக சுருக்கமான எளிதாக புரியும் சிறப்பு கையேடுகள் தயாரிக்கப்பட்டன. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்த தனியார் பள்ளிகளுக்கும் இவை வழங்கப்பட்டன. அப்பள்ளி ஆசிரியர்களுக்கும் அனுபவமிக்க ஆசிரியர்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

பள்ளி மேலாண்மைக் குழு ஆசிரியர்களுக்கு தனிப் பயிற்சி

ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றி வந்த பள்ளிகளும் தனிப்பட்ட கவனத்திற்குள் கொண்டுவரப்பட்டன. அவர்களுக்கு பாடவாரியான பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பாட ஆசிரியருக்கும் தனித்தனி திறன் மேம்பாட்டு பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இது குறிப்பிடத்தக்க புதிய முயற்சியாகும்.

தேர்ச்சி குறைந்த பள்ளிகளுக்கு தனிக் கவனம்

தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்த பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு, அப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுடன் தனிப்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு மாணவரின் கற்றல் நிலையும் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டது.

“ஏன் மதிப்பெண் பெறவில்லை?” என்பதைக் காட்டிலும், “அவருக்கு என்ன உதவி தேவை?” என்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் கற்றல்–கற்பித்தல் முறைகள் மாற்றியமைக்கப்பட்டன. மாணவர்களின் பலவீன நிலைகளை மையமாகக் கொண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. விடைத்தாள்கள் உடனுக்குடன் திருத்தப்பட்டு, குறைகள் சுட்டிக்காட்டப்பட்டு சரிசெய்யப்பட்டன.

இணைய வழி கூட்டங்கள் வழியாக புதிய உத்திகள்

இணைய வழி கூட்டங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டன. குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விடைத்தாள்கள் இணைய வழியாக நேரடியாக முதன்மைக் கல்வி அலுவலரிடம் காட்டப்பட்டு, அவர்கள் எந்தப் பகுதிகளில் சிரமப்படுகின்றனர் என்பது விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டன. இத்தகைய நுணுக்கமான கண்காணிப்பு முறை தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றியது.

ஆசிரியர்கள் அற்பணிப்பு

இத்தனை முயற்சிகளுக்கும் பின்னால் உள்ள மிகப் பெரிய சக்தி ஆசிரியர்களே.கால நேரம் பார்க்காமல் குழுவாக இணைந்து செயல்படுவது ஈரோடு மாவட்ட ஆசிரியர்களின் தனித்துவமான பண்பாகும். ஆசிரியர்கள் தாங்களாகவே சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றனர். யார் எந்த நேரத்தில் சிறப்பு வகுப்புகள் எடுப்பதெல்லாம் அவர்களுக்குள்ளேயே பேசி முடித்து நடைபெறத் தொடங்கிவிடும்.இதை மேலிட உத்தரவாக அல்ல, தங்கள் இயல்பான பொறுப்பாகக் கருதுகின்றனர். இந்த அர்ப்பணிப்பே கல்வி நிர்வாகிகளின் முயற்சிகளுக்கு உயிரூட்டுகிறது.

அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

இந்தச் சாதனையில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம், அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம். கடந்த ஆண்டு 95.9 சதவீதமாக இருந்த அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம், இந்த ஆண்டு 98.24 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் சுமார் மூன்று சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். கல்வி ஆராய்ச்சி மற்றும் கற்றல் கற்பித்தல் துறைகளில் அனுபவம் கொண்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அணுகுமுறையும் இதற்கு ஒரு காரணமாகக் கருதப்படலாம்.

பதிலி எழுத்தர் தேர்வில் புதிய அணுகுமுறை

பதிலி எழுத்தர் (Scribe) உதவி உண்மையில் தேவைப்படும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. திருப்புதல் தேர்வுகளின் போதே கல்லூரி மாணவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக பொதுத்தேர்வில் அவர்களால் சிறப்பாக செயல்பட முடிந்தது. 10 மற்றும் 12ஆம் வகுப்புகள் கற்பிக்காத ஆசிரியர்கள் மட்டுமே பதிலி எழுத்தர்களாகப் பயன்படுத்தப்பட்டனர்.

இருப்பினும், பதிலி எழுத்தர் உதவி பெற்ற மாணவர்களிடையிலும் சிலர் தேர்ச்சி பெறவில்லை. மேலும், கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தேர்வுச் சலுகைகள் வழங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, தேர்வு முறையின் நம்பகத்தன்மை உயர்ந்தது. தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதைவிட, நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது என்பது பாராட்டத்தக்க அம்சம்.

பள்ளி மேலாண்மைக் குழுக்களின் பங்களிப்பு

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், சிறப்பு வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதற்கு பள்ளிகளில் பெரும் ஆதரவளித்தனர்.

தலைமை ஆசிரியர்கள் தனிக் கவனம்

கூடுதல் கவனம் தேவைப்படும் ஒவ்வொரு மாணவரையும் தலைமையாசிரியர்கள் தனிப்பட்ட முறையில் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டனர். ஒவ்வொரு தலைமையாசிரியரும் தங்கள் பள்ளி மாணவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை நன்கு அறிந்திருந்ததால், அவர்களை முறையாகக் கண்காணித்து வழிநடத்த முடிந்தது.

கண்காணிப்பு முறையில் அறிவியல்பூர்வமான அணுகுமுறை

தேர்வறை கண்காணிப்பாளர்களை நியமிக்கும் முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டது. தெரிந்தவர்கள், குலுக்கல் முறையில் அறிவியல் அடிப்படையிலான ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மையும் சமத்துவமும் உறுதி செய்யப்பட்டது.

பழங்குடியினர் பள்ளிகள்

ஈரோடு மாவட்டத்தில் 120 மலை கிராமங்களில் பழங்குடியினர் மற்றும் மலை மக்கள் வசித்து வருகின்றனர். கோட்டமாளம், தாளவாடி,பனஹள்ளி , மள்ளன்குங்குழி ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 269 பேர் தேர்வு எழுதினர். அதில் ஐந்து மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற முடியவில்லை. இப்போது தேர்ச்சி பெற்ற அனைவரையும் உயர்கல்வியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

மாநில அளவில் முதலிடம் பெறுவது என்ற இலக்கை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், கல்வி நிர்வாகத்தில் மாற்று அணுகுமுறைகளை கையாண்டு, கற்றல் தரம், தேர்வுகளில் நம்பகத்தன்மை மற்றும் மாணவர் மையக் கல்வி ஆகியவற்றை ஒருங்கிணைத்து வெற்றியை உருவாக்கியுள்ளார் ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மான்விழி.

இந்த வெற்றி வெறும் தேர்ச்சி விகிதத்தின் வெற்றியல்ல, அது கல்வி நிர்வாகத்தில் சாத்தியமான ஒரு அமைதியான மாற்றத்தின் வெற்றி.

கட்டுரையாளர்

Photo of author
நா.மணி

நா.மணி, பேராசிரியர், மேனாள் தலைவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share