2024ஆம் ஆண்டுக்கான ‘வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கான வழிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்தி குறிப்பில், வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வோர் ஆண்டும் தமிழக முதலமைச்சரால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது.
வீர தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்தப் பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவர். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் (சீருடை பணியாளர்கள் உட்பட) மூவருக்கும் இந்தப் பதக்கங்கள் வழங்கப்படும்.
பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை. இவ்விருது ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்)-க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும். இப்பதக்கம் முதலமைச்சரால் 26.01.2024 குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.
2024ஆம் ஆண்டிற்கான ‘வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்’ விருதுக்கு பரிந்துரைகள் கோரப்படுகின்றன.
வீர தீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இந்த நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும்.
வீர தீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இணையதளத்தில் அதற்கென உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளடக்கியதாகவும்,
விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் வீர தீரச் செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை (அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) தெளிவாகவும், தேவையான அனைத்து விவரங்களும் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
வீர தீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15 டிசம்பர், 2023 ஆகும். இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர்கள், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
