மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்களில் ஒருவராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், நவம்பர் 6ஆம் தேதி 5 பேரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்களாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவில், “மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில், இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டம் 1959 சட்டப்பிரிவு 46(3)ன் கீழ் திருக்கோயில்கள் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த பி.கே.எம்.செல்லையா,
மதுரை காந்தி நகர் சூமேக்கர் தெருவைச் சேர்ந்த சி.கிருஷ்ணன் மகள் டி.சுப்புலெட்சுமி,
மதுரை சொக்கிகுளம் வல்லபாய் ரோடு சுப்பராயன் மகள் ருக்மணி பழனிவேல்ராஜன்,
மதுரை கே.கே.நகர் ஏரிக்கரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மு.சீனிவாசன்,
மதுரை அரசரடி ஹார்விநகர் 4வது தெருவைச் சேர்ந்த எம்.சேகர் மகள் எஸ்.மீனா ஆகியோர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறங்காவலர்கள் குழுவினர், அரசாணை வெளியிட்டு 30 நாட்களுக்குள் தலைவரை தேர்வு செய்வார்கள் என்றும் இவர்கள் 2 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ருக்மணி பழனிவேல்ராஜன் (83) அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ஆவார். இவர் ஏற்கனவே கோயிலில் அறங்காவலர் உறுப்பினராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்!
அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் வழக்குப்பதிவு!