நாத்திக கொள்கையை அரசியலமைப்பு பாதுகாக்கிறது: உதயநிதி வாதம்!

அரசியல்

அரசியலமைப்பு சட்டம் மத நம்பிக்கையை மட்டுமல்லாமல் நாத்திக கொள்கையையும் பாதுகாக்கிறது என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 8) வாதம் முன்வைக்கப்பட்டது.

சனாதனத்திற்கு எதிராக பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது இந்து முன்னணி நிர்வாகி கிஷோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, “அமைச்சர் பதவி பிரமாண உறுதிமொழியை மீறி விட்டனர் என்று கூறி உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது.

ஒருவரை அமைச்சராக நியமிப்பதும், நீக்குவதும் முதல் அமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. யார் அமைச்சராக தொடர வேண்டும் யார் தொடரக்கூடாது என்று முதலமைச்சர் தான் முடிவெடுக்க முடியும். நீதிமன்றத்திற்கு இதில் தலையிட அதிகாரமில்லை.

அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 25, மத நம்பிக்கையை மட்டும் பாதுகாக்கவில்லை. நாத்திக கொள்கைகளையும் பாதுகாக்கிறது. நாத்திகத்தை ஏன் ஏற்கிறோம் என்பது குறித்து கருத்து தெரிவிக்கவும் உரிமை வழங்குகிறது. அதனால், சனாதனத்துக்கு எதிராக பேசியதாக இந்த வழக்கே தொடர முடியாது.

சனாதனத்தில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு, தீண்டாமை உள்ளது. அவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளார். பேச்சுரிமை என்பது ஒருவரின் இயற்கையான மற்றும் அடிப்படையான மனித உரிமையாகும். அதை பாதுகாக்க வேண்டும்.

தேவையே இல்லாமல் வழக்கை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் நேரத்தை வீண் அடித்தது மட்டுமல்லாமல், அமைச்சரையும் பதில் மனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர்.

சனாதன ஒழிப்பு மாநாடு ஒரு கூட்டரங்கில் காலை முதல் இரவு வரை நடைபெற்றது. ஏராளமான அறிஞர்கள் பேசினர். அந்த கருத்து பிடிக்கவில்லை என்றால் அதை ஏன் ஒட்டு கேட்க வேண்டும்?

இந்த வழக்கில் வேடிக்கை என்னவென்றால் சனாதனம் மாறி விட்டது என்று கூறும் பொழுது அவர்களின் நிலைப்பாடு மாறி எங்கள் பக்கம் வந்து விட்டார்கள் .எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால், அதை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை நீதிபதி அனிதா சுமந்த் நாளைக்கு ஒத்திவைத்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பெரியார் சிலை அப்புறப்படுத்தப்படுமா?: அண்ணாமலைக்கு திமுக, அதிமுக பதில்!

கோவை ராகிங் சம்பவம்: கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவு!

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *