பாஜகவின் ‘ஒரிஜினல் பி டீம்’! காவிக்காக கொள்கையை ’காவு’ கொடுத்த கம்யூனிஸ்டுகள்.. மேற்கு வங்கத்தில் தாமரையை மலர வைத்து மகிழ்ந்த இடதுசாரிகள்!

Published On:

| By Minnambalam Desk

lotus bloom in West Bengal

 – ஆதித்ய நிகாம்

தமிழில்- சேயோன்

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியால் ஏற்பட்ட வெறுப்பு, கம்யூனிஸ்ட் தொண்டர்களை (CPM) எந்த அளவிற்கு பாஜகவின் வலதுசாரி கொள்கைகளை நோக்கி தள்ளியுள்ளது?

ADVERTISEMENT

மே 4 அன்று, மேற்கு வங்காளம் முழுவதிலும் பல தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையின் செயல்முறை குறித்த தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தபோதே, பாஜகவின் பிரச்சாரத்தை வழிநடத்தியவரும் தற்போது மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவருமான சுவேந்து அதிகாரி, திரிணாமுல் தலைவரும் அப்போதைய முதலமைச்சருமான மம்தா பானர்ஜியைத் தோற்கடிக்க உதவியதற்காக சிபிஐ(எம்)-க்கு நன்றி தெரிவித்தார். “பவானிபூரில் சிபிஐ(எம்)-க்கு 13,000 வாக்குகள் இருந்தன; அவற்றில் குறைந்தது 10,000 வாக்குகள் எனக்கு மாற்றப்பட்டன. அங்குள்ள சிபிஐ(எம்) வாக்காளர்களுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் ஊடகங்களிடம் கூறினார்.

சிபிஎம்-ன் (CPM) வாக்கு சதவீத சரிவு

இது முற்றிலும் விசித்திரமாகவும் நம்பமுடியாததாகவும் தோன்றலாம்; ஆனால், மேற்கு வங்கத்தில் வசிப்பவர்களுக்கும், அங்குள்ள அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனிப்பவர்களுக்கும் இந்த உறவுமுறை நன்கு தெரிந்த ஒன்றாகும். 2009ஆம் ஆண்டு  மக்களவைத் தேர்தலில் 33 சதவீத வாக்குகளைப் பெற்றதிலிருந்து சிபிஐ(எம்)-இன் வாக்கு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. 2011 சட்டமன்றத் தேர்தலில் 30 சதவீதமாகக் குறைந்த அக்கட்சியின் வாக்கு வங்கி, 2014-ல் மேலும் சரிந்து 23 சதவீதமானது; அந்த வாக்கு வங்கி ஒருபோதும் கட்சிக்குத் திரும்பாமலே போகலாம்.

ADVERTISEMENT

பாஜகவை (BJP) நோக்கிய சிபிஎம் வாக்குகள்

இருப்பினும், அதிகாரி குறிப்பிட்ட விஷயம் வேறுபட்டது. இந்த வாக்காளர்கள் இப்போதும் CPI(M)-ன் ஆதரவாளர்களாகவே உள்ளனர். CPI(M) வாக்காளர்கள் பெருமளவில் பாஜகவை நோக்கி மாறும் போக்கு, முதலில் 2018 பஞ்சாயத்துத் தேர்தலிலும், பின்னர் 2019 மக்களவைத் தேர்தலிலும் காணப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலின்போது இது மேலும் உறுதிப்படுத்தப்பட்டது; அப்போது “ஏகுஷே ராம், சப்பிஷே பாம்” (2021-ல் ராம், 2026-ல் இடதுசாரிகள்) என்ற முழக்கம் மெல்லிய குரலில் ஒலித்தது.

அன்றே ஒப்புக் கொண்ட யெச்சூரி

உண்மையில், 2019 தேர்தலுக்குப் பிறகு CPI(M) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இதை ஒப்புக்கொண்டார்; அதேவேளையில் “கட்சி உறுப்பினர்கள் யாரும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்” என்றும்  கூறினார். மேற்கு வங்க CPI(M)-ன் நிலைப்பாட்டுக்கு இணங்க திரிணாமுல் ஆட்சியின் கீழ் “தீவிர வன்முறை மற்றும் ஒடுக்குமுறைக்கு ஆளான” “இடதுசாரிகளின் ஆதரவுத் தளத்தினர்”, பாஜகவுக்கு வாக்களிக்கத் தீர்மானித்ததாக அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

திரிபுரா மாணிக் சர்க்கார் சொன்னது என்ன?

2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ​​அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், திரிபுராவின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், பாஜகவை ஆட்சிக்குக் கொண்டுவருவது போன்ற “முதிர்ச்சியற்ற முடிவை” எடுக்க வேண்டாம் என்று வலுவாக அறிவுறுத்தினார். திரிபுராவின் அனுபவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், அங்குள்ள சாமானிய மக்கள் தாங்கள் பெரிய தவறைச் செய்துவிட்டதை உணர்ந்துகொண்டதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக 2014-க்குப் பிறகு CPI(M) வாக்காளர்களிடையே பாஜகவை நோக்கிய பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான்; இது கூர்ந்து ஆராயப்பட வேண்டிய நிகழ்வாகும். உதாரணமாக, மூத்த பத்திரிகையாளர் மோனோபினா குப்தா தனது கள ஆய்வின்போது,தொடர்ந்து ​​ஒரு விசித்திரமான சூழலை எதிர்கொண்டார்: அதாவது, தங்கள் சிபிஐ (எம்) பின்னணியைக் குறித்துப் பெருமை கொண்டவர்கள், அதே வேளையில் பாஜகவுக்கு வாக்களிப்பதன் மூலம்  தாங்கள் இந்துக்கள்தான் என்று அறுதியிட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கருதினர்.

ஆர்.எஸ்.எஸ். ஆக உருமாறும் இடதுசாரிகள்

ஆர்எஸ்எஸ் (RSS) அமைப்பின் முக்கிய நிர்வாகி ஒருவர் மோனோபினா குப்தாவிடம், தனது தாயார் வழி குடும்பத்தினர் இடதுசாரி இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறிய நிகழ்வையும் அவர் சுட்டிக்காட்டினார். “பிரிவினைக்கு முந்தைய ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த என் தாயார், 1964-ல் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு CPI(M)-ல் இணைந்தார்.” அரசியல் ரீதியாக அவரது தந்தையும் இடதுசாரி ஆதரவாளராகவே இருந்தார். ஆனால், தனக்குள் இருந்த இந்து உணர்வை இறுதியில் தட்டியெழுப்பியது தன் தாயார்தான் என்று அவர் குறிப்பிட்டார்.

இது ஏதோ ஒரு தனிப்பட்ட நிகழ்வு மட்டுமல்ல. இடதுசாரி கட்சிகளின் மக்கள் ஆதரவுத் தளம் செய்லளவில் மிக வேகமாகத் தன்  அரசியல் விசுவாசத்தை மாற்றிக்கொண்ட விதம் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்ததாக குப்தா அவதானித்தார்.

குப்தா நேர்காணல் செய்தவர்களில் ஒருவர், ஹரே கிருஷ்ண கோனார், ப்ரோமோத் தாஸ்குப்தா மற்றும் ஜோதி பாசு போன்ற மார்க்சிய ஆளுமைகள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். ஆனால், 2021 தேர்தலுக்குச் சற்று முன்பு உரையாடல் தற்போதைய சூழலுக்கு மாறியபோது, ​​அவர் தனது மற்றொரு முகத்தை வெளிப்படுத்தினார்: “ஒரே ஒரு விஷயத்திற்காக மட்டுமே நான் பாஜகவை ஆதரிப்பேன்; அது பாஜக ஒரு ‘இந்துவாதி’ (இந்து ஆதரவு) கட்சி என்பதுதான். அவர்கள் முஸ்லிம்களைச் திருப்திப்படுத்த மாட்டார்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே, நான் தயக்கமின்றி அவர்களை ஆதரிப்பேன்.”

வலதுசாரிகளாக மாறிய இடதுசாரிகள்

இடதுசாரியிலிருந்து வலதுசாரிக்கு மாறும் இத்தகைய திடீர் மாற்றங்கள் பாசிசத்தின் எழுச்சி, அண்மைக் காலங்களில் ஐரோப்பாவில் ‘புதிய வலதுசாரி’ (New Right) இயக்கங்களின் வளர்ச்சி ஆகியவற்றின் போதும் காணப்பட்டுள்ளன; இவை இன்னும் கூர்ந்து ஆராயப்பட வேண்டியவை.

ஒரு வகையில், இத்தகைய நிகழ்வுகள் தத்துவஞானி அன்டோனியோ கிராம்சி குறிப்பிட்ட ‘மேலாதிக்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி’ (crisis of hegemony) என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இதில், அரசியல் விசுவாசம் என்பது புதிய மற்றும் இதுவரை சோதிக்கப்படாத சக்திகளை நோக்கி — அதாவது ‘விதிவசத்தால் வந்த தலைவர்களை’ (men of destiny) நோக்கி — திடீரான, பெருமளவிலான மாற்றங்களுக்கு உள்ளாகிறது. வேறொரு நிலையில் சிந்தித்துப் பார்த்தால், அந்த ‘மேலாதிக்கம் (hegemony) உருவான சூழலும் அதன் குறிப்பிட்ட வடிவமும் மிக முக்கியமானதாகிறது. இருப்பினும், இந்தக் கட்டுரையின் வரம்பிற்குள் அந்த விவாதத்தை மேற்கொள்ள இயலாது.

சிபிஎம் வழங்கிய அறிவுரை என்ன?

அவப்பேறாக, இந்தக் கதை முழு உண்மையைச் சொல்லவில்லை. இந்த மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கான முழுப் பழியையும் இடதுசாரிகளின் ஆதரவுத் தளத்தின் மீது மட்டும் சுமத்திவிட்டு, கட்சியை அதிலிருந்து விடுவிப்பது நேர்மையானதாக இருக்காது. உதாரணமாக, கட்சியின் வாட்ஸ்அப் குழுக்களில் பரவிய ஒரு செய்தியை எடுத்துக்கொள்வோம். சில மாவட்டங்களில் உள்ள குழுக்களுக்கு அனுப்பப்பட்ட அந்த நீண்ட செய்தியின் தொடக்க வரிகள் மட்டும் இங்கே குறிப்பிடப்படுகின்றன: “2026-இல் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சிக்கு வந்தால், 2031-இல் இடதுசாரி முன்னணி (Left Front) மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இந்த எதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு, கீழ்மட்டத் தொண்டர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்: தயவுசெய்து உங்கள் வாக்கை வீணாக்காதீர்கள். திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிராக வாக்களியுங்கள்.”

அரசியலில் நிரந்தர நண்பர்களோ அல்லது எதிரிகளோ இல்லை என்பதை விளக்கும் வகையில் அந்தச் செய்தி தொடர்கிறது: “நினைவில் கொள்ளுங்கள், பாஜக மீதான உங்கள் கொள்கைரீதியான எதிர்ப்பு எப்போதும் இருந்து வந்துள்ளது, அது எதிர்காலத்திலும் தொடரும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிபிஎம், திரிணாமுல் காங்கிரஸ்

பாஜக ஆட்சிக்கு வருவதாக இருந்தாலும் சரி, எப்படியாவது தோற்கடிக்கப்பட வேண்டிய முக்கிய எதிரியாகத் திரிணாமுல் கட்சியை அடையாளம் காண்பதில் சிபிஐ (எம்)-இன் மேற்கு வங்க) மாநிலக் கட்சித் தலைமை எடுத்துள்ள நிலைப்பாட்டுடன்  மேற்சொன்ன செய்தியின் சாராம்சம் மிக நெருக்கமாக ஒத்துப்போகிறது. இந்த இரு சக்திகளையும் ‘சமமானவை’ என்று கருதுவது குறித்தும்,  எது ‘பெரிய தீமை’ ,எது  ‘சிறிய தீமை’ என்பன குறித்தும் சமூக ஊடகங்களில் நடைபெறும் தீவிர விவாதங்களே அந்த நிலைப்பாட்டிற்குச் சான்றாக உள்ளன.

மாநிலத்தில் இடதுசாரிகளின் முக்கிய எதிரியாகத் திரிணாமுல் கட்சியை அடையாளம் காண்பதில் எந்த முரண்பாடும் இருக்க முடியாது – குறிப்பாக 2011-இல் இடதுசாரிகளை ஆட்சியிலிருந்து அகற்றியது அந்தக் கட்சிதான் என்பதால். ஆனால் விசித்திரமான விஷயம் என்னவென்றால், பாஜகவின் அச்சுறுத்தல் ஏதும் இல்லாத 2011-ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி, மேற்கு வங்கத்தில் பாஜகவின் திட்டங்கள் மிகத் தெளிவாகத் தெரிந்த 2016-க்குப் பிறகும் கூட, இந்தச் சொல்லாடல் தடையின்றித் தொடர்ந்து வருகிறது. முக்கிய எதிரி யார் என்பது குறித்த இடதுசாரிகளின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

மேற்கு வங்கத்தைக் கவனிப்பவர்களுக்கு ஒரு விஷயம் தெரியும்: 2014-க்குப் பிறகும், குறிப்பாக 2016-க்குப் பிறகும், அங்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் (RSS) அமைப்புகள் ராம் நவமி பேரணிகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இந்தப் பேரணிகளில் குழந்தைகள் உட்படப் பங்கேற்பாளர்கள் வாள் மற்றும் திரிசூலங்களை ஏந்தி, ‘ஜிஹாதிகளுக்கு’ எதிராக இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி வன்முறையான முழக்கங்களை எழுப்புகின்றனர்.

பாஜகவைப் பொறுத்தவரை, மேற்கு வங்கம் ஒரு முக்கிய சாதகமான சூழலைக் கொண்டுள்ளது; அது  (இந்தியா- பாகிஸ்தான்) பிரிவினையைச் சந்தித்த மாநிலம் என்பதுதான் அந்தச் சூழல். பிரிவினைக்கால வன்முறையின் அச்சத்தை எளிதாகத் தூண்டிவிட்டு, ஆர்எஸ்எஸ்-இன் மத ரீதியாகப் பிளவுபடுத்தும் அரசியலை முன்னெடுக்க இது உதவுகிறது.

விவேகமற்ற எண்ணங்கள்

இவை எதுவும் பாஜக அல்லது திரிணாமுல் குறித்த மேற்கு வங்க சிபிஐ(எம்)-இன் பார்வையையோ, அல்லது அது அவர்களின் தேர்தல்-அரசியல் உத்தியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்த புரிதலையோ மாற்றவில்லை. சொல்லப்போனால், 2021-ல் “எகுஷே ராம், சப்பிஷே பாம்” (2021-ல் ராம், 2026-ல் இடதுசாரிகள்) மற்றும் 2026 தேர்தலின் போது “எபார் ராம் போரே பாம்” (முதலில் ராம், பிறகு இடதுசாரிகள்) போன்ற முழக்கங்கள், தங்கள் அலுவலகங்களை திரிணாமுலின் பிடியிலிருந்து விடுவிக்க உதவும் ஒரு வரப்பிரசாதமாகவே பாஜகவின் எழுச்சியைத அவர்கள் தொடர்ந்து கருதுவதைக் காட்டுகின்றன. எனவே, வங்காளிகளின் உணவுமுறை, தெய்வங்கள், மொழி என அவர்களின் வாழ்க்கையையே அடியோடு மாற்ற பாஜக விரும்புகிறது என்பது தெளிவாகத் தெரிந்த பிறகும், “திரிணாமுல் பயங்கரவாதத்திலிருந்து” பாஜக தங்களைக் காப்பாற்றும் என்ற இடதுசாரிகளின் நம்பிக்கை குறையாமல் தொடர்ந்தது.

இந்த வக்கிர நிலைப்பாட்டின்  ஒரே நோக்கம், சிபிஐ(எம்)-ஐ அதிகாரத்திலிருந்து அகற்றியதற்காக திரிணாமுல்  கட்சியைப்  பழிவாங்குவது மட்டுமே என்று தோன்றுகிறது. மாநிலம், அதன் முஸ்லிம் சிறுபான்மையினர், மொழி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு என்ன நேர்ந்தாலும் அது அவர்களுக்குப் பெரிய விஷயமல்ல என்ற முடிவுக்கு வராமல் இருக்க முடியவில்லை. இறுதியில் அவர்கள் பழிவாங்கிவிட்டார்கள்.

மத்திய துணை ராணுவப் படைகள், மத்திய அதிகாரிகள் ஆகியோரின் நேரடியாகக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட ஒரு  மாநிலத்தில் நடக்கும்  தேர்தலில், 27 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படாத நிலையிலும், சிபிஐ(எம்) அந்த  நிகழ்முறையை எந்த வகையிலும் குறிப்பிடத்தக்க அளவில் எதிர்க்கவோ அல்லது விமர்சிக்கவோ இல்லை.

அதற்குப் பதிலாக, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே மாநிலச் செயலாளர் முகமது சலீம் வெளியிட்ட அறிக்கை இவ்வாறு தொடங்கியது: “மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், திரிணாமுலின் எல்லையற்ற ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளதை தெளிவுபடுத்துகின்றன. மாநில மக்கள் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் வீழ்ச்சியை விரும்பினர். இந்தக் கோபாவேசத்தை  பாஜக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது.” இது மத்திய அரசின் அப்பட்டமான தலையீட்டை அங்கீகரிப்பதாகவும், மாநிலம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கைப்பற்றப்பட்டதையும், தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் மீறப்பட்டு நடத்தப்பட்டதையும் கண்டுகொள்ளாமல் விடுவதாகவும் அமைந்தது. மீண்டும் வன்முறையில் பற்றி எரிந்துகொண்டிருந்த மணிப்பூர் விவகாரத்தைக் கவனிப்பதை விட மேற்கு வங்கத் தேர்தலே முக்கியம் என்று முடிவு செய்த உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒவ்வொரு நாளும் கடைப்பிடித்த  நேரடி மேற்பார்வையில் மம்தா பானர்ஜி அரசு வீழ்த்தப்பட்டதைக் கண்டு  மாநில சிபிஐ(எம்) தலைமை தனது மகிழ்ச்சியை மறைக்கவே இல்லை.

சிபிஐ (எம்) கட்சியின் மாநிலத் தலைவர்களின் இந்த  நிலைப்பாடு கேள்விக்குட்படுத்தப்படும் போதெல்லாம், 1999-ல் பாஜகவை மேற்கு வங்கத்திற்குள் அழைத்து வந்ததே திரிணாமுல் செய்த “மூலத் தீவினை” என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் அடிப்படையில் அவர்கள் , இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து ஒரு “புரிதல்” மற்றும் “ஒப்பந்தம்” (setting) இருப்பதாக ஒரு முழுமையான கோட்பாட்டையே முன்வைக்கின்றனர்; திரிணாமுல் கட்சியை பாஜகவின் ‘பி-அணி’ (B-team) என்று அழைப்பதோடு, 2021 தேர்தலுக்கு முன்பே உருவாக்கப்பட்ட “பிஜேமுல்” (Bijemul) என்ற சொல்லையும் இதற்காகப் பயன்படுத்துகின்றனர்.

உண்மையில், 1999 நாடாளுமன்றத் தேர்தலின்போதுதான் திரிணாமுல் கட்சி அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பகுதியாக இருந்த காலத்தில்தான், மேற்கு வங்கத்தில் பாஜக தனது தேர்தல் கணக்கைத் தொடங்கியது.

இடது முன்னணி மற்றும் சிபிஐ(எம்) (இவை 1990-ல் மம்தா மீது கொலைவெறித் தாக்குதலையும் நடத்தியிருந்தன) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில், மம்தா ஒரு “மகாஜோட்” அல்லது “பெரும் கூட்டணியை” அமைக்குமாறு அழைப்பு விடுத்தார். அப்போது பாஜக இரண்டு மக்களவைத் தொகுதிகளை வென்றதுடன், 11 சதவீதத்திற்கும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றது. இருப்பினும், இடது முன்னணி ஆட்சியின் 13-வது ஆண்டான 1991-லும் பாஜக இதே சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாஜக அப்போதே அந்த மாநிலத்தில் “நுழைந்து”விட்டது.

சந்தர்ப்பவாதக் கூட்டணிகள்

நிச்சயமாக, 1999-ல் பாஜகவுடன் மம்தா அமைத்த கூட்டணியை ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணியாகக் கருதலாம். அது தவறானதாக இருந்தால், சிபிஐ(எம்) இப்போது செய்து வருவதிலிருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது? இரண்டு தரப்பினரும் பாஜகவின் உதவியைப் பெற்று ஆட்சியில் உள்ள கட்சியை அகற்றவே முயன்றனர்/முயல்கின்றனர். உண்மையில், திரிணாமுல் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தபோது, ​​வங்காளத்திற்கும் அதன் சிறுபான்மையினருக்கும் இருந்த அச்சுறுத்தல் தற்போதைய நிலையை விட மிகக் குறைவாகவே இருந்தது என்று வாதிடலாம். மம்தா பாஜகவுக்கு அதிகபட்சம் இரண்டு இடங்களை வெல்ல உதவினார்; ஆனால் 2026-ல், 2031-ல் பாஜகவை வெளியேற்றிவிடலாம் என்ற மாயையில், அந்த ‘காவி நிறக்’ கட்சி (பாஜக) மாநிலம் முழுவதையும் கைப்பற்ற சிபிஐ(எம்) உதவியுள்ளது.

சிபிஐ(எம்) தலைவர்கள் மீண்டும் மீண்டும் முன்வைக்கும் ஒரு கருத்து “திரிணாமுல் காங்கிரஸ் பயங்கரம் ” பற்றியது; இதற்குச் சிறந்த உதாரணமாக, 2011ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு நூற்றுக்கணக்கான சிபிஐ(எம்) அலுவலகங்களை திரிணாமுல் கைப்பற்றியதாகக் கூறப்படும் நிகழ்வைக் குறிப்பிடலாம். இது குறித்த விரிவான விவாதம் தேவைப்பட்டாலும், ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டலாம்: 2006-07 வரை – அதாவது நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான சிங்கூர் மற்றும் நந்திகிராம் போராட்டங்களுக்குப் பிந்தைய காலம் வரை – கிராமப்புற மேற்கு வங்கம் சிபிஐ(எம்)-இன் அசைக்க முடியாத கோட்டையாக இருந்தது. எந்தவொரு கட்சியும் அங்கு நுழைந்து அதன் ஆதிக்கத்தை எதிர்த்துப் போட்டியிடத் துணியவில்லை.

அந்த ஆதிக்கம் கருத்தியல்ரீதியான மேலாதிக்கத்தால் அல்லாமல், அமைதியான ஆனால் ஆழமான பயங்கரத்தின் மூலமே தக்கவைக்கப்பட்டது என்பது பல்வேறு பத்திரிகை மற்றும் கல்விசார் பதிவுகளில் காணப்படுகிறது. உதாரணமாக, பஞ்சாயத்துத் தேர்தல்களில் எதிரணியினர் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்காதது போன்ற சம்பவங்கள் ஊடகங்களில் அடிக்கடி செய்தியாக வந்தன. தொடக்கக் காலங்களில், கிராமப்புற அதிகாரச் சமன்பாடுகளை மாற்றுவதில் பஞ்சாயத்துகள் முக்கியக் கருவிகளாகத் திகழ்ந்தன; ஆனால் 1990-களுக்குள், அவை ஆதிக்கத்தையும் மாற்றுக்கருத்துகளை ஒடுக்குவதையும் நோக்கமாகக் கொண்ட அமைப்புகளாக மாறிவிட்டன. ஒவ்வொரு சிறிய கொடுக்கல்-வாங்கல்களுக்குகூட சிபிஎம் (ஐ) கட்சிக்கு ஒருவிதமான “வரி” செலுத்த வேண்டிய சூழல் நிலவியது.

உதாரணமாக, 2009-ல் பிர்பும் (Birbhum) மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் ‘தெஹல்கா’ (Tehelka) நிருபர்களிடம், “பயிரை வளர்ப்பதற்கும் அறுவடை செய்வதற்கும் முன்பாகவே நாங்கள் வரி செலுத்த வேண்டியிருந்தது,” என்று கூறினார். கிராமங்களில் நடைபெறும் திருமணம் போன்ற சமூக நிகழ்வுகள் கூட CPI(M)-ன் கட்டுப்பாட்டிலிருந்து தப்பவில்லை. அதே விவசாயி, தனது மகளின் திருமணத்தின்போது விருந்து அளிப்பதற்காக “சிபிஐ (எம்)-க்கு 750 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது” என்றும் குறிப்பிட்டார்.

மேலும், உள்ளூர் கட்சி அலுவலகங்கள் ‘சாலிசி’ (salisi) எனப்படும் மத்தியஸ்தம் அல்லது தீர்ப்பளிக்கும் இடங்களாக மாறின; அங்கு உள்ளூர் கட்சித் தலைவர்கள் தகராறுகளைத் தீர்த்து வைத்தனர். இத்தீர்ப்புகள் பெரும்பாலும் கட்சியின் நலன்களுக்கு உகந்த சமரசங்களாகவே அமைந்தன.

எனவே, 2009 மக்களவைத் தேர்தல் மற்றும் 2011 மாநிலத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு, மாநிலத்தின் மீதான கட்சியின் இரும்புப் பிடி தளர்ந்தபோது, ​​மக்களின் கோபம் வெடித்துக் கிளம்பியது. அதிகாரச் சமநிலை மாறிய சூழலில், உள்ளூர் சிபிஐ (எம்) பலசாலிகளாலும் அடியாட்களாலும் ஆதரிக்கப்பட்டவர்கள் ஒரே இரவில் திரிணாமுல் கட்சிக்குத் தங்கள் விசுவாசத்தை மாற்றிக்கொண்டனர்; இதன் மூலம், அதுவரை கிடைக்காத கிராமப்புற மேற்கு வங்காளத்திற்கான நுழைவு திரிணாமுல் கட்சிக்குக் கிடைத்தது.

நிச்சயமாக, சில இடங்களில் சிபிஐ (எம்) அலுவலகங்கள் வன்முறை மூலம் கைப்பற்றப்பட்டன; ஆனால் பல இடங்களில்  அதைச் செய்த்து முன்பு  சிபிஐ (எம்) வசமிருந்த அதே நபர்கள்தான், கட்சிக் கொடிகள் மட்டுமே மாறின. இப்போது பாஜகவின் உதவியுடன் அத்தகைய அலுவலகங்கள் பல மீட்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த சிபிஐ (எம்) இயந்திரம், திரிணாமுல் கட்சிக்கு முன்னால் இவ்வளவு பலவீனமான நிலைக்கு எப்படித் தள்ளப்பட்டது என்பதுதான் பலரும் கேட்காத கேள்வியாக உள்ளது. ஒரு காலத்தில் அக்கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த பலசாலிகள் தங்கள் விசுவாசத்தை மாற்றிக்கொண்டதே இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

மாநில சிபிஐ (எம்) இன்ன் தற்போதைய நிலைப்பாட்டையும், பாஜகவுடனான அதன் நலன் சார்ந்த ஒருங்கிணைப்பையும் புரிந்துகொள்ள வேண்டுமானால், அதிகாரச் சமன்பாடுகள் மாறிய இந்தச் சூழலை உற்றுநோக்க வேண்டும். நாட்டின் பிற பகுதிகளில் இடதுசாரி இயக்கத்தை வரையறுக்கும் “கருத்தியல்” நிலைப்பாட்டிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது – அந்தப் பகுதிகளில் கூட அத்தகைய கருத்தியல் பெருமளவு சிதைந்து போயிருந்தாலும் கூட. இருப்பினும், ஒரு கட்சி தன்னை ஏதோ ஒரு வகையில் “இடதுசாரி” என்று உரிமை கோரிக்கொண்டிருக்கும் வரை, ஒரு முக்கியமான கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது: 1920-களின் பிற்பகுதியிலும் அதற்கு முன்னரும் ஜெர்மனியில் நாஜிசம் எழுச்சி பெற்றபோது ஏற்பட்ட பேரழிவுகரமான அனுபவத்திலிருந்து அத்தகைய கட்சி ஏன் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை? அக்காலகட்டத்தில் கம்யூனிஸ்டுகள், நாஜிக்களை விடவும் ஆபத்தானவர்கள் என்று தாங்கள் கருதிய சமூக ஜனநாயகவாதிகள் (Social Democrats) மீது தங்கள் கோபத்தைத் திருப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Courtesy: Frontline

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share