மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் அலிப்பூர் பகுதியில் உள்ள அரசு அலுவலகக் கட்டிடத்தில் நேற்று (ஜூன் 12) மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் 4,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) முழுமையாக எரிந்து சாம்பலாகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தாவின் அலிப்பூரில் அரசு கட்டிட வளாகத்தில் 8, 9-வது தளங்களில் தேர்தல் தொடர்பான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Control Units, Ballot Units மற்றும் VVPATs) பாதுகாப்பாக வைக்கப்பட்ருந்தன. நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்து, தேர்தல் அலுவலகங்கள் இருந்த தளங்களுக்குப் பரவியதால் அங்கு வைக்கப்பட்டிருந்த 4,000 இயந்திரங்களும் தீயில் சிக்கி நாசமாகின.
மேற்கு வங்க மாநில தீயணைப்புத் துறை அமைச்சர் கெளசிக் சௌத்ரி கூறுகையில், ”இந்தத் தீ விபத்து சாதாரணமாகத் தெரியவில்லை. கட்டடத்தின் குறிப்பிட்ட தளங்களில் மட்டும் தீ தீவிரமாகப் பரவிய விதம் சந்தேகத்தை எழுப்புகிறது. இது திட்டமிட்ட சதி வேலையாக இருக்கலாம் எனப் பார்க்கிறோம்,” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் கொல்கத்தா காவல்துறை உடனடியாக ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைத்துள்ளது. தடயவியல் நிபுணர்கள் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து வரும் நிலையில், மின்னணு இயந்திரங்கள் எரிக்கப்பட்டதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து, ஆளும் பாஜக அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. காஸ்பா, ஜாதவ்பூர், பெஹாலா கிழக்கு, பெஹாலா மேற்கு உள்ளிட்ட பல தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரங்களே இதில் அழிந்துள்ளதாகவும், ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
