பத்திரப்பதிவு : அரசுக்கு நீதிமன்றம் சரமாரிக் கேள்வி!

Published On:

| By Kalai

பத்திரப்பதிவு துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை, அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

தேனி வீரபாண்டியை சேர்ந்த சரவணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT

அதில், “தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் அரசின் முறையான அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக நிலங்களை பத்திரப் பதிவு செய்து வருகின்றனர்.

உரிய அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகளை மோசடியாக மக்களிடம் விற்பனை செய்வது மட்டுமல்லாமல், அரசுக்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

உள்ளாட்சி துறைகளில் அங்கீகரிக்கப்படாத நிலம், மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சட்டம் உள்ளது.  

ஆனால், சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள உஷாராணி (சார் பதிவாளர்) முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளார்.

ADVERTISEMENT

இவ்வாறு முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும், முறைகேட்டில் ஈடுபட்ட பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 20) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

* அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப் பதிவு செய்த அதிகாரி யார்? அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்?

* தேனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர் மீது வழக்கு பதிவு செய்து வழக்கு நிலுவையில் உள்ளது. இதுவரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்?

* லஞ்ச ஒழிப்புத் துறையில் தேனி பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் வேலை பார்க்கும் சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனுக்கள் கொடுக்கப்பட்டு  நடவடிக்கை எடுக்காதது ஏன்?

* ஆவணங்களுடன் புகார்கள் பெறப்பட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

* தேனி பத்திரப்பதிவுத் துறை அலுவலகத்தில் பணியாற்றும் சார்பதிவாளர் மீது பத்திரப் பதிவுத்துறை ஐஜி உடனடியாக பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

* எவ்வாறு அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது?

மேலும் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திர பதிவு செய்ய கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள்,

இதுபோன்ற நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை இருக்கும் என்று எச்சரித்தனர்.

சார் பதிவாளர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளை மறுநாள் (செப். 22) ஒத்திவைக்கப்பட்டது.

கலை.ரா

போட்டோவுக்காக கேப்டன் சுனில் சேத்ரியை தள்ளிய இல.கணேசன்

ஆ.ராசாவை கண்டித்து கடைகள் அடைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share