அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்கும் கூந்தல் என்பது பலரின் விருப்பமாக இருக்கிறது.
ஆனால், அதற்காக விலையுயர்ந்த ஷாம்புகள் அல்லது எண்ணற்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தலைமுடியை எப்படி கழுவுகிறோம், எந்த வகை தயாரிப்புகளை பயன்படுத்துகிறோம், தினசரி பராமரிப்பு எப்படி இருக்கிறது போன்ற அடிப்படை பழக்கவழக்கங்களே கூந்தலின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன.
சரியான பராமரிப்பு முறைகளை பின்பற்றினால் முடி சேதமடைவதையும், சில வகை முடி உதிர்வையும் தடுக்க முடியும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
முதலில் உங்கள் தலைமுடி வகையை அறிந்து கொள்ளுங்கள்
ஒவ்வொருவரின் தலைமுடியும் வெவ்வேறு தன்மையைக் கொண்டது. சிலருக்கு நேரான முடி இருக்கும்; சிலருக்கு சுருள், அடர்த்தி அல்லது வறண்ட தன்மை இருக்கும். எனவே, உங்கள் தலைமுடி வகைக்கு ஏற்ற ஷாம்பு மற்றும் கண்டிஷனரைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம். தவறான தயாரிப்புகளை தொடர்ந்து பயன்படுத்துவது முடி வறட்சி, உடைதல் மற்றும் பொலிவு இழப்புக்கு காரணமாகலாம்.
தினமும் ஷாம்பு போட வேண்டுமா?

தலைமுடியை தினமும் கழுவ வேண்டுமா என்பது உங்கள் தலையின் எண்ணெய் சுரப்பைப் பொறுத்தது. அதிக எண்ணெய் சுரக்கும் தலையோடு மற்றும் நேரான தலைமுடி உள்ளவர்கள் அடிக்கடி ஷாம்பு பயன்படுத்தலாம். ஆனால் வறண்ட, சுருள் அல்லது அடர்த்தியான தலைமுடி உள்ளவர்கள் தேவைக்கேற்ப மட்டுமே தலைமுடியை கழுவினால் போதுமானது.
மேலும், ஷாம்புவை தலைமுடி முழுவதும் தேய்ப்பதற்குப் பதிலாக, தலையோட்டில் மட்டும் மெதுவாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெய் நீங்கும்; அதே நேரத்தில் தலைமுடி தேவையற்ற வறட்சியிலிருந்து பாதுகாக்கப்படும்.
ஈரமான தலைமுடியை கவனமாக கையாளுங்கள்

தலைமுடி ஈரமாக இருக்கும் போது மிகவும் மென்மையாக இருக்கும். எனவே, அப்போது கடினமான பிரஷ் பயன்படுத்துவதைத் தவிர்த்து, அகலமான பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்துவது நல்லது. தலைமுடியைத் துடைக்கும்போது துணியால் வேகமாக தேய்க்காமல், மெதுவாக ஈரத்தை உறிஞ்சும் வகையில் துடைக்க வேண்டும்.
அதேபோல், ஹேர் டிரையர், ஸ்ட்ரெய்ட்னர், கர்லிங் இயந்திரம் போன்ற அதிக வெப்பம் தரும் கருவிகளை அடிக்கடி பயன்படுத்துவது முடியை சேதப்படுத்தும். அவற்றை பயன்படுத்த வேண்டிய சூழலில், குறைந்த அல்லது நடுத்தர வெப்பநிலையைத் தேர்வு செய்து, ஹீட்-புரொடெக்ஷன் தயாரிப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.
கண்டிஷனர் பயன்படுத்துவது ஏன் அவசியம்?

ஒவ்வொரு முறை தலைமுடியை கழுவிய பிறகும் கண்டிஷனர் பயன்படுத்துவது முடியை மென்மையாக்கவும், சிக்கலின்றி சீவவும் உதவுகிறது. நேரான அல்லது மெல்லிய தலைமுடி கொண்டவர்கள் முடியின் நுனிப்பகுதியில் மட்டும் பயன்படுத்தலாம். ஆனால் வறண்ட அல்லது சுருள் தலைமுடி கொண்டவர்கள் முடி முழுவதும் கண்டிஷனர் பயன்படுத்தலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
