ஐசிசி மகளிர் உலகக்கோப்பையில் இன்று (அக்டோபர் 5) துவங்கிய ஆட்டத்தில் டாஸ் போடும்போது பாகிஸ்தான் கேப்டன் மற்றும் இந்திய கேப்டன் இருவரும் கைக்குலுக்காகதது சர்ச்சையாகி உள்ளது.
ஐசிசி 13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவும், தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணியும் இன்று கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதி வருகிறது.
அதன்படி இன்றைய போட்டியில் டாஸ் போட இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், பாகிஸ்தான் அணி கேப்டன் பாத்திமா சனாவும் நடு மைதானத்திற்கு வருகை தந்தனர். இதில் டாஸ் வென்று பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து இரு அணி கேப்டன்களும் கைக்குலுக்குவார்களா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், இருவரும் கைக்குலுக்காமல் அங்கிருந்து சென்றனர்.
சமீபத்தில் அமீரகத்தில் நடந்த ஆண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை 3 முறை சந்தித்த இந்தியா அணி எளிதாக வென்றது. மூன்று போட்டியிலும் பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக டாஸ் போடும் போது பாகிஸ்தான் கேப்டனுடன் கைக்குலுக்குவதை தவிர்த்தார் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ்.
அதே போன்று போட்டி முடிந்தபிற்கும் பாகிஸ்தான் அணியினருடன் கைலுக்குவதை இந்திய அணியினர் தவிர்த்தனர். இது சர்வதேச கிரிக்கெட் களத்தில் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையிலும் அதனை பின்பற்றியுள்ளார் ஹர்மன்ப்ரீத்.
இந்த சர்ச்சைக்கு நடுவே முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய மகளிர் அணியில் துவக்க வீரர்களான ஸ்மிருதி மந்தனா (23) மற்றும் பிரதிகா ராவல் (31) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் 19 ரன்களில் வெளியேறினார்.
இதனால் 25 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கும் 108 ரன்களுடன் இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்து வருகிறது.
