வசந்தமணி எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் வெற்றிவேல். மியா ஜார்ஜ், தம்பி ராமய்யா, பிரபு என திரையுலகில் படு பிஸியாக இருக்கும் புதிய கூட்டணியைச் சேர்த்திருந்தாலும் பழைய கதையை கொடுத்திருக்கிறார்கள்.
‘வாத்தி மவன் மக்கு’ என்ற சொல்லாடலை உண்மையாக்குகிறார் சசிகுமார். பள்ளி ஆசிரியரான இளவரசுவின் மகன் சசிகுமார் கடைவைத்து நடத்தி வருகிறார். மூத்த மகன் இப்படிப் போய்விட்டதை நினைத்து வருந்தும் இளவரசுவின் இரண்டாம் மகன் ஆனந்த் நாகு உருவாக்கும் ஒரு பிரச்னையில் கதையின்போக்கு மாறுகிறது. ஊர் பஞ்சாயத்துத் தலைவர் பிரபுவின் மகளைக் காதலிக்கும் ஆனந்த் நாக், தனது காதலை சேர்த்துவைக்கச் சொல்லி சசிகுமாரிடம் வந்து நிற்கிறார். வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் காதலுக்கு எதிர்ப்புக் கிளம்ப காதலர்களைச் சேர்த்துவைக்க சசிகுமாரும் கிளம்புகிறார். அதன்பிறகு என்ன நடந்திருக்கும்? ட்விஸ்ட்கள், ஆக்ஷன் காட்சிகள், ஒருசில பாடல்கள் என கிளைமாக்ஸ் நோக்கி நகர்த்தப்படுகிறது கதை. இதுதான் நடக்கும் என ரசிகர்களை யோசிக்கக்கூட விடாமல், இதைத்தான் ஏற்கனவே பல படத்தில் பார்த்துவிட்டோமே எனும் அளவுக்கு அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்கள்.
விஜி சந்திரசேகர் கதாபாத்திரமெல்லாம், கோலிவுட் வில்லன்களுக்குச் சவால்விடும் அளவுக்கு அமைத்துவிட்டு, சசிகுமாரை மட்டும் ஆதிகால கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறாரே என்ற சோகம் ஏற்படுகிறது. காதலர்களைச் சேர்த்துவைக்க ‘நாடோடிகள்’ டீம் வருவது நல்ல முயற்சி. இந்தப் படம் சசிகுமாருக்கு மட்டுமே பொருத்தமான படம். ‘சார், சத்தமா பேசுறீங்க. கேமராவைப் பாத்து மக்களை கேள்வி கேக்குறீங்க. சமூகத்துக்கு எதிரியாவும், காதலர்களுக்குத் தேவதூதனாகவும் இருக்கிறீர்கள். கடைசியில், நம்ம காதலை தியாகம் செஞ்சு, அடுத்தவன் காதலை சேத்து வைக்கிறோம்’ என்று கதை சொல்லி, சசிகுமாரை இயக்குநர் கமிட் செய்திருக்க வேண்டும். படத்துக்கு ப்ளஸ் என்று தம்பி ராமய்யாவின் டைமிங் காமெடி, விஜியின் வில்லத்தனம், சசிகுமாரின் காதல் தியாகம் இவற்றைச் சொல்லலாம். தம்பிக்காக பெண்ணை கடத்திக்கொண்டு வருகிறேன் பேர்வழி என்று தவறான பெண்ணைக் கடத்திக்கொண்டு வந்துவிடுகிறார் சசிகுமார். ‘ஒரு நாள் நைட் முழுக்க வெளிய இருந்திருக்கேன், இனி எனக்கு எப்படி கல்யாணம் நடக்கும்’ என, இன்னொரு ஹீரோயின் கதறி அழ சசிகுமாரின் காதல் ஊசலாடுகிறது. குடும்பமாகப் பார்க்க ஏற்ற படம்தான். ஆனாலும் குடும்பமாகப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கே போரடித்த கதைக்களம் என்பதுதான் பிரச்னையே!. சாய்சரண் குரலில் ஆட்டம்போட்டு பாடலும், ஸ்ரேயா கோஷல் குரலில் ‘ஒன்னப்போல’ பாடலும் ஆறுதல் சொல்லிச் செல்கின்றன, இமான் இசையில். கிராமப்புறப் படமாக இருந்தாலும், கலர்ஃபுல்லாகக் காட்டி நம்மை சோர்வடையாமல் பார்த்துக்கொண்டார் எஸ்.ஆர்.கதிர்.
சாதி மறுப்பு திருமணங்களைப்பற்றிச் சொல்லவும், சாதியின் பெயரால் நசுக்கப்படும் காதல், காதலர்களைப் பற்றிச் சொல்லவும், ஆணவக்காரர்களால் நாட்டின் ஒவ்வொரு இடத்திலும் ஒரு சம்பவம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. கதைக்கருவை அவர்களே கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். கதையாக மாற்றி கருத்தாகச் சொல்லத்தான் இயக்குநர்கள் முன்வரவேண்டும்.









