நாமும் ட்ரெண்டிங் ஆக பேசாவிட்டால் சமூகம் நம்மை புறக்கணித்துவிடும். ஆங்காங்கே பரவலாகப் பேசிக்கொண்டிருப்பது அம்மா வீடியோவையும், அவர் ஜூஸ் குடித்ததும், அதற்கடுத்தடுத்து வரப்போகும் வீடியோக்களையும் பற்றித்தான்.
உண்மைத்தன்மை பற்றி பலவாறு அலசி ஆராய்ந்துகொண்டிருக்கும் நாம் வேறு எதையோ கோட்டை விடுகிறோமோ என்றே தோன்றுகிறது. சரி, அம்மா குடித்த ஜூஸ், என்ன ஜூஸ் என்று ஆராய்ச்சியில் இறங்குவதை விட்டுவிட்டு நாமும் ஒரு ஜூஸ் செய்து சாப்பிட்டு சமூக கடனை ஆற்றுவோம். பப்பாளியும் கேரட்டும் எப்படியும் வீட்டில் இருக்கும். அதை வைத்தே பப்பாளி – கேரட் ஜூஸ் செய்வோமா.
**தேவையான பொருள்கள்:**
பப்பாளிப்பழம் – 1
கேரட் – 1
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
பால் – ஒரு கப்
தண்ணீர் – 2 கப்
தேன் – சுவைக்கு
ஐஸ்கட்டி – தேவைக்கு
**செய்முறை:**
* கேரட், இஞ்சியை கழுவி தோல் நீக்கி பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.
* பப்பாளிப்பழத்தைத் தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
* பப்பாளிப்பழத் துண்டுகளுடன் கேரட் ஜூஸ், தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.
* பருகுவதற்கு முன் காய்ச்சி ஆற வைத்த பால், ஐஸ்கட்டி கலந்து பருகவும்.
* பால், ஐஸ்கட்டி விரும்பாதவர்கள் அதைச் சேர்க்காமலும் பருகலாம்.
* சுவையான பப்பாளி – கேரட் ஜூஸ் தயார்.
**கீர்த்தனா டவுட்ஸ்:**
1) இடது காலை விட வலது கால் பெரியதாக இருப்பது ஏன்?
2) இடது கையால் ஜூஸ் குடிப்பவர் வலது கையால் காலி டம்ளரை வைக்க கூடாது என சட்டமா?
3) காட்டப்படும் வலது கை முட்டி வரை உப்பியும், அதற்குப் பின் சிறியதாகவும் இருப்பது ஏன்?









