கிராமிய வாழ்வையும் மனித உணர்வுகளையும் உண்மைத் தன்மையுடன் வெளிப்படுத்திய பாரதிராஜா படைப்புகள் தமிழ் திரைப்பட உலகில் அழியாத தடம் பதித்துள்ளன என ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள அவரது நீலாங்கரை இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாட்களாக இல்லத்திலேயே மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
பாரதிராஜாவின் மறைவுச் செய்தி கேட்டு, அரசியல் தலைவர்கள் மற்றும் திரை உலகப் பிரபலங்கள் பலரும் அவரது நீலாங்கரை இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று பாரதிராஜாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, நடிகை ராதிகா, இசைஞானி இளையராஜா, இயக்குநர்கள் பி.வாசு, மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக ஆளுநர் இரங்கல்:
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவிற்குத் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைவால் மிகுந்த துயரமடைந்தேன். கிராமிய வாழ்வையும் மனித உணர்வுகளையும் உண்மைத் தன்மையுடன் வெளிப்படுத்திய அவரது படைப்புகள் தமிழ் திரைப்பட உலகில் அழியாத தடம் பதித்துள்ளன. அவரின் குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
