தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கிராஃபைட் எடுப்பதற்கான மின் ஏல அறிவிப்பை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. government has scrapped the auction of Kurunjakulam Graphite block
கிராஃபைட் உள்ளிட்ட கனிமங்கள் எடுப்பதற்கான மின் ஏலம் கோரும் இணையவழி டெண்டர் அறிவிப்பு ஒன்றிய சுரங்க அமைச்சகத்தின் இணையதளத்தில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.
கிராஃபைட் எனும் கனிமத்தை எடுக்க மின் ஏலம் கோரும் டெண்டர் அறிவிப்பில் தென்காசி மாவட்டம், குருவிக்குளம் ஒன்றியம் திருவேங்கடம் வட்டத்தில் உள்ள குறிஞ்சாங்குளம் கிராமமும் குறிப்பிடப்பட்டு இருந்தது. குறிஞ்சாங்குளம் கிராமப் பகுதிகளில் சுமார் 656.46 ஏக்கர் நிலப்பரப்பில் கிராஃபைட் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, மின் ஏலம் விடப்பட்டது.
அதுமட்டுமின்றி, வெள்ளக்கால் பகுதி, நொச்சிப்பட்டி, வேலம்பட்டி வடக்கு, இலுப்பக்குடி, மண்ணடிப்பட்டி, மாருதிப்பட்டி ஆகிய கிராம பகுதிகளில் வெவ்வேறு வகையான கனிமங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகளுக்கும் மின் ஏலம் விடப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு மதிமுக கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. எம்.பி.யும் மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ,
‘கிராஃபைட் கனிமம் எடுப்பதற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும். இதனால் அந்தப் பகுதியில் விவசாயம் முற்றாக அழியும் நிலை ஏற்படும். நிலத்தடி நீர் மட்டமும் குறையும்.
கிராஃபைட் ஒரு கடினமான கனிமம். இதை உடைத்து எடுப்பதற்கு வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்படும். இதனால் ஒலி மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எழும். மேலும் பல்வேறு வகையான சுற்றுச்சூழல் பிரச்சனைகள் எழுவதுடன் மனிதர்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும். சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் உருவாகும் அபாயம் உள்ளது.
ஆகவே, விவசாய பூமியாக உள்ள திருவேங்கடம் வட்டம் குறிஞ்சாங்குளம் கிராமம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகளின் கருத்துகளை கேட்டறியாமல், மாவட்ட நிர்வாகத்தையோ, தமிழக அரசையோ கலந்து ஆலோசிக்காமல் ஒன்றிய அரசின் சுரங்கத்துறை தன்னிச்சையாக முடிவெடுத்து இருப்பது கண்டிக்கத்தக்கது.
கிராஃபைட் உள்ளிட்ட கனிம வளங்களை எடுக்க தமிழகத்தில் மின் ஏலம் கோரும் இணையவழி டெண்டர் முயற்சியை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மறுமலர்ச்சி திமுக முதல் இயக்கமாக களம் அமைத்து போராடும்’ என போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்
10.12.2023 அன்று சென்னையில் நடைபெற்ற மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக்குழு கூட்டத்திலும் கிராஃபைட் கனிம மின் ஏலம் எடுக்கும் அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.
இந்நிலையில் துரை வைகோ ஜூலை 29 அன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
“தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம் பகுதியில் கிராஃபைட் கனிமத்தை எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ரத்து செய்வதாக நேற்று ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது. காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட்டில் லித்தியம் மற்றும் பொட்டாஷ் எடுப்பதற்கான அறிவிப்பையும் இதனோடு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
மதிமுகவின் குரலுக்கு செவி சாய்க்கின்ற வகையில் தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம் பகுதியில் கிராஃபைட் கனிமத்தை எடுப்பதற்கான மின் ஏலத்தை ரத்து செய்த ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பை மதிமுக சார்பில் வரவேற்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…