அன்புமணி மகள்கள் மருத்துவர் ராமதாஸை நான் பார்க்க விட வில்லை என்று சொல்வது நாடகம் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இரண்டு அணியினரும் தனித்தனியாக தேர்தலை சந்தித்து வருகின்றனர். அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் பெண்ணாகரம் தொகுதியில் பாமக வேட்பாளர் பாடி செல்வத்தை ஆதரித்து அன்புமணி ராமதாஸின் மகள்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, “எங்கள் குடும்பம் ஐயா (ராமதாஸ்) தலைமையில் ஒற்றுமையாக இருந்தது. ஆனால் இன்று என் 5 மாதக் குழந்தையைக் கூட ஐயா பார்க்க முடியாதபடி ஜி.கே.மணி தடுத்துவிட்டார். தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அவர், எங்கள் குடும்பம் நாசமாகப் போக வேண்டும் என நினைக்கிறார். இவரைப் போன்ற கேவலமான மனிதரைப் பார்க்க முடியாது” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது
இந்நிலையில், நேற்று தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் ராமதாஸ், “அன்புமணி யார் என்று என்னை கேட்டால், அவர் பொய்யர். பொய் பேசுவதிலே வல்லவர் என்று சொல்லுவேன். கூசாமல், யோசிக்காமல் பொய் சொல்லுவார். அவருடைய குடும்பத்தையும் அதுபோன்று பழக்கி வைத்திருக்கிறார். ஆக, அது ஒரு பெரிய நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்று சொல்லுவார்கள். அப்படி இருந்த அந்த குடும்பத்தை சிதைத்து, சின்னாபின்னமாக்கிய பெருமை அன்புமணியினுடைய மனைவி சௌமியா.. அவர் மட்டுமல்ல அந்த குழந்தைகளையும், என் பேத்திகளையும் அதே மாதிரி பழக்கிவிட்டார்” என்று தெரிவித்தார்.
பெரிய அவமானம்
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 18) விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசுகையில் “எனக்கு துரோகி என்ற பட்டத்தை கொடுத்து அன்புமணி அவமானப்படுத்தி தொடர்ந்து வருகிறார். தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் இருந்தனர். அப்படி உருவாக்கப்பட்ட கட்சியை அன்புமணி இன்று சிதைத்து விட்டார்.
முகநூலில் சிலரை வைத்துக் கொண்டு அன்புமணி ராமதாஸ் அவமானப்படுத்துகிறார். எனக்கு இந்த வார்த்தையை சொல்வதற்கே கஷ்டமாக இருக்கிறது. குறிப்பாக அவருடன் இருக்கும் சில பேர், ‘இந்தக் கிழவனை தலையணை வைத்துக் கொள்ளுங்கள், தலை மேல் கல்லை போட்டுக் கொள்ளுங்கள்’ என்றனர். கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது – ‘சிலிண்டரை பற்ற வைத்து இந்தக் கிழவனைக் கொள்ளுங்கள்’. இது எவ்வளவு பெரிய அவமானம்! ஆனால் அதையெல்லாம் பார்த்து அன்புமணி சிரிக்கிறார்.
அன்புமணி ஒரு வார்த்தையை மட்டும் தொடர்ச்சியாகச் சொல்கிறார். அவருடைய மகள்களை விட்டுச் சொல்லச் சொல்கிறார் – ‘ராமதாஸையும் அன்புமணியையும் பிரித்தது ஜி.கே. மணி’ என்று சொல்கிறார். இந்த வார்த்தையை கேட்பதற்கு எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.
மருத்துவமனைக்கு வரவில்லை
அன்புமணியையும் ராமதாசையும் பிரிக்க முடியுமா? எந்த சக்தியால் பிரிக்க முடியும்? ஐயா, உங்கள் மகனைப் பார்க்காதீர்கள் என்று சொல்வதற்கு எனக்கு மனசு வருமா? வளர்த்து ஆளாக்கியவர், மத்திய அமைச்சர் பதவி கொடுத்தவர், தலைவர் பதவி கொடுத்தவர், இவ்வளவு உயரத்திற்கு ஆளாக்கிய அப்பாவைப் பார்ப்பதற்கு மருத்துவமனைக்கு வரவில்லை. என்னையும் எனது அப்பாவையும் குடும்பத்தையும் பிரித்து விட்டார் என்று அன்புமணி சொல்கிறார். அன்புமணி மகள்களை விட்டு, ‘எங்கள் தாத்தாவை, குழந்தைகளைக் கூட பார்க்க விடாமல் ஜி.கே. மணி பிரித்து விட்டார்’ என்கிறார்கள். இதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? இது எவ்வளவு பெரிய நாடகம். இந்த நாடகம் எடுபடாது.
உங்களுக்கு அப்பா வேண்டும், தாத்தா வேண்டும் என்றால் நேரடியாகவே வந்து பார்க்கலாம். நாங்கள் தடையாக இருக்க மாட்டோம்” என கூறினார்.
