இந்தியா முழுவதும் பொதுமக்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு, உணவுப் பொருட்களைச் செய்தித்தாள்களில் பொட்டலமாகக் கட்டி விற்பனை செய்யவோ, பரிமாறவோ மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தடை விதித்துள்ளது.
ஆனாலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகள் 2018 சட்டம் நடைமுறையில் இருந்தும், நாடு முழுவதும் சாலையோரக் கடைகள், தேநீர் கடைகள் மற்றும் வடாபாவ் கடைகளில் சூடான வடை, பஜ்ஜி, போண்டா, சமோசா, சாட் உள்ளிட்ட உணவுகளைச் செய்தித்தாள்களில் கட்டிக் கொடுக்கும் பழக்கம் இன்னும் தொடர்ந்து வருகிறது. இதனை உள்ளூர் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மும்பையில் அதிரடி
இந்நிலையில், மும்பையில் பிரபலமான ஒரு வடாபாவ் விற்பனையாளர் தொடர்ந்து செய்தித்தாள்களில் உணவை விநியோகம் செய்து வந்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, FSSAI மேற்கு மண்டல அதிகாரிகளும் மும்பை மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து அதிரடி சோதனை நடத்தி, விதிமுறையை மீறிய கடை மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, FSSAI உத்தரவை மீறிச் செய்தித்தாள்களில் உணவு வழங்கும் அனைத்து விற்பனையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஏன் ஆபத்து?
செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் அச்சு மையில் ஈயம், கன உலோகங்கள் மற்றும் பல தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதாக FSSAI தெரிவித்துள்ளது. குறிப்பாகச் சூடான உணவுகளைச் செய்தித்தாளில் கட்டும்போது அல்லது வைக்கும்போது, அந்தச் சூட்டின் காரணமாக இந்த நச்சுப் பொருட்கள் உருகி உணவோடு கலந்துவிடுகின்றன. இதனால் நீண்டகாலத்தில் புற்றுநோய், செரிமானப் பிரச்சினைகள், சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம் என மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர்.
