தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி தேர்தல் முடிவு நள்ளிரவு வரை ட்விஸ்ட்டாக இருந்தது. இறுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் 83, 374 வாக்குகள் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என அறிவிக்கப்பட்டது.
இந்தசூழலில் தவெக எம்.எல்.ஏ வெற்றியை எதிர்த்து பெரிய கருப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், ”சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டு விட்டதால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தவெக எம்.எல்.ஏ. நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை விதித்தது.
ஆனால், ’இது மிகவும் கொடூரமானது’ என கூறி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
முன்னதாக 2016 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக எம்.பி இன்பதுரை பெற்ற வெற்றியை எதிர்த்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்திலேயே மறு வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதன் முடிவில், இன்பதுரை வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 10 ஆண்டுகளுக்கு பின் இந்த தீர்ப்பு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
