7-வது நாளாக குழப்பம்.. சென்னையில் 71 இண்டிகோ விமான சேவைகள் ரத்து

Published On:

| By Mathi

Chennai Indigo Taday

நாடு முழுவதும் 7-வது நாளாக இண்டிகோ விமான சேவைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று டிசம்பர் 8-ந் தேதி 71 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமானிகளுக்கான புதிய பணி நேரக் கட்டுப்பாடுகள் டிசம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தன. விமானிகள் தொடர்ந்து 18 மணி நேரம் பணியாற்றலாம் என்ற விதி 8 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. அதேபோல வார ஓய்வு நேரம் 36 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இப்புதிய விதிகள் அமலுக்கு வந்த நிலையில் இதனை எதிர்கொள்ள இண்டிகோ நிறுவனத்தில் போதுமான எண்ணிக்கையில் விமானிகள் இல்லை. இதனால் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகளில் குழப்பம் ஏற்பட்டு பாதிப்பு அதிகரித்தது.

இதனால் நாடு முழுவதும் 2,000-க்கும் அதிகமான இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இண்டிகோ விமான பயணத்துக்காக காத்திருந்தவர்கள், இண்டிகோ விமானங்களில் தங்களது உடைமைகளை அனுப்பியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் விமான நிலையங்களில் தத்தளிக்கும் காட்சி நெஞ்சை உறைய வைத்தது.

ADVERTISEMENT

அத்துடன் இந்த நெருக்கடியை பயன்படுத்தி விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை 5 முதல் 10 மடங்கு வரை உயர்த்தியது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டுள்ளது. விமான பயணிகளின் கட்டணம் அதிகபட்சம் ரூ18.000 வரை மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய குழப்பமான சூழ்நிலையை சரி செய்வதற்கான செயல் திட்ட அறிக்கையையும் இண்டிகோ நிறுவனத்திடம் மத்திய அரசு கோரியுள்ளது.

ADVERTISEMENT

இண்டிகோ தலைமை செயல் அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இண்டிகோ விமான சேவைகள் டிசம்பர் 10-ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதிக்குள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும்; பயணிகளுக்கு ரூ600 கோடி வரை விமான கட்டணங்கள் திருப்பி தரப்பட்டுள்ளன என கூறியிருந்தார்.

இதனிடையே நேற்று 6-வது நாளாக சென்னையில் 90க்கும் மேற்பட்ட விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. நாடு முழுவதும் 800-க்கும் அதிகமான விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்த குழப்பம் இன்று 7-வது நாளாக நீடித்து கொண்டிருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் 71 இண்டிகோ விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share