தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நாளை ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் மொத்தம் 4,023 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.
மொத்தம் 75,064 வாக்குச் சாவடிகளில் நடைபெறும் இந்த வாக்குப் பதிவுக்காக சுமார் 83,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 300-க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். ப
தற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆளும் திமுக கூட்டணி, எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி, புதிதாக களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், மற்றும் நாம் தமிழர் கட்சி எனப் பலமுனைப் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி யாருக்கு என்பதை அறிய மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
வாக்களிக்க வாக்காளர் அட்டை இல்லாத நிலையில் கீழ்க்கண்ட ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தலாம்
- ஆதார் அட்டை
- பான் (PAN) அட்டை
- ஓட்டுநர் உரிமம் (Driving License)
- கடவுச்சீட்டு (Passport)
- புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக சேமிப்பு புத்தகம்
- MNREGA பணி அட்டை
- ஓய்வூதிய ஆவணம்
- அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டை
- தேர்தல் ஆணையத்தின் ஸ்மார்ட் கார்டு
- மருத்துவக் காப்பீட்டு அட்டை
- எம்.பி., எம்.எல்.ஏ. அடையாள அட்டை
- UDID கார்டு (மாற்றுத்திறனாளிகள்)
வாக்குப் பதிவை முன்னிட்டு, நாளை (ஏப்ரல் 23) தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெற ஏப்ரல் 21 மாலை முதல் ஏப்ரல் 23 நள்ளிரவு வரை மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், தொகுதிக்குத் தொடர்பில்லாத வெளிநபர்கள் அனைவரும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி மற்றும் தன்னார்வலர்களின் உதவி போன்ற சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்குப் பதிவு சதவீதம்
1952ஆம் ஆண்டில் சுமார் 1.99 கோடிக்கும் குறைவாக இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 2021ஆம் ஆண்டு நிலவரப்படி 6.28 கோடியாகப் பல மடங்கு உயர்ந்துள்ளது. இது மாநிலத்தின் மக்கள் தொகை பெருக்கம் மட்டுமன்றி, 1989ஆம் ஆண்டு முதல் வாக்குரிமைக்கான வயது 21இலிருந்து 18ஆகக் குறைக்கப்பட்டதும், புதிய தலைமுறையினர் ஜனநாயகச் செயல்பாடுகளில் ஈடுபடக் கிடைத்த வாய்ப்பும் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன.
வாக்கு சதவீதத்தின் ஏற்ற இறக்கங்கள்
1952-1962-ல் சுதந்திரப் போராட்டத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு குறைவால் வாக்குப்பதிவு சதவீதம் 50%ஐ ஒட்டியே இருந்தது.
1952- 56.41%
1957- 46.84%
எனப் பதிவானது.
பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்களின் தீவிர அரசியல் 1967 முதல் 1984 வரையிலான காலங்களில் இருந்தது. அந்த கால கட்டங்களில் வாக்குப்பதிவை 70% முதல் 76% வரை நிலைபெறச் செய்தது.
எதிர்பாராத சில அரசியல் நிகழ்வுகளால், 1991இல் 63.92% எனவும், 2001இல் 59.07% எனவும் வாக்குப்பதிவு சதவீதம் சற்று குறைந்திருந்தது.
2011-ம் ஆண்டு தேர்தலில் பதிவான 78.12% வாக்குகள், தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே மிக உயர்ந்த சதவீதமாகும்.
கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விடப் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்து வருவது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். குறிப்பாக, நலத்திட்டங்கள் மற்றும் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள், பெண் வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு அதிக அளவில் ஈர்க்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.
நகர்ப்புறங்களில் உள்ள இடப்பெயர்வுகள் மற்றும் தொழில்சார் அழுத்தங்கள் குறைந்த வாக்குப்பதிவுக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
2014ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ‘நோட்டா’ (NOTA) விருப்பம், 2016 மற்றும் 2021 தேர்தல்களில் சுமார் 1% முதல் 1.3% வாக்காளர்களை ஈர்த்துள்ளது. மேலும், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற மாற்று அரசியல் சக்திகளின் வருகையும், இளைஞர்களிடையே புதிய அரசியல் விழிப்புணர்வைத் தூண்டியுள்ளது.
இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சராசரியாக 70%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாவது ஒரு வலுவான மற்றும் ஆரோக்கியமான ஜனநாயகத்தைக் காட்டுகிறது. வாக்காளர்களின் தீவிரப் பங்கேற்பு, தமிழக அரசியலின் தனிச்சிறப்பாகவே இன்றும் நீடிக்கிறது.
1952-ம் ஆண்டு முதல் இதுவரை பதிவான வாக்குகள் சதவீதம்
| தேர்தல் ஆண்டு | மொத்த வாக்காளர்கள் | வாக்குப்பதிவு சதவீதம் (%) |
| 1952 | 1,99,58,669 | 56.41% |
| 1957 | 1,75,14,993 | 46.84% |
| 1962 | 1,86,10,721 | 70.65% |
| 1967 | 1,91,90,992 | 76.57% |
| 1971 | 2,30,64,385 | 71.82% |
| 1977 | 2,71,80,873 | 61.58% |
| 1980 | 2,81,73,498 | 70.74% |
| 1984 | 3,09,45,103 | 73.47% |
| 1989 | 3,98,50,386 | 69.69% |
| 1991 | 3,99,09,767 | 63.92% |
| 1996 | 4,24,84,653 | 66.95% |
| 2001 | 4,74,94,423 | 59.07% |
| 2006 | 4,66,02,575 | 70.82% |
| 2011 | 4,71,16,217 | 78.12% |
| 2016 | 5,81,95,728 | 74.81% |
| 2021 | 6,29,35,736 | 72.81% |
SIR-க்குப் பின் வாக்குப் பதிவு உயரும்?
தமிழ்நாட்டில் SIR பணிகளுக்கு முன்பு 2025-ல் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.
SIR பணிகளுக்கு பின் இறுதி வாக்காளர் பட்டியலில் இரட்டை வாக்குரிமை கொண்டவர்கள், இறந்தவர்கள், வெளியூர் சென்றவர்கள் என 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
இதனையடுத்து 23.02.2026-ல் நிலவரப்படி தமிழ்நாடு வாக்காளர் எண்ணிக்கை
- மொத்தம்: 5,67,07,380
- ஆண்கள்: 2,77,38,925
- பெண்கள்: 2,89,60,838
- 3-ம் பாலினத்தவர்: 7,617
- முதல் முறை வாக்காளர்கள்: 12.51 லட்சம்
- மாற்றுத்திறனாளிகள்: 4.63 லட்சம்
- மூத்த குடிமக்கள் 3.99 லட்சம்
அதாவது தமிழ்நாட்டில் தற்போது ‘ஆக்டிவ்’ வாக்காளர்கள் எண்ணிக்கை 5.67 கோடி.
கடந்த காலங்களில் இரட்டை வாக்காளர்கள், இறந்தவர்கள் வாக்காளர்களாக பட்டியலில் இருந்த நிலையிலேயே 70 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த முறை வாக்காளர் பட்டியலில் அத்தகைய வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் வாக்குப் பதிவு சதவீதம் இயல்பாகவே 80%-க்கும் அதிகமாக இருக்கக் கூடும் என்பது எதிர்பார்ப்பு.
