ஜார்க்கண்ட்  அமைச்சரை கைது செய்த அமலாக்கத்துறை!

Published On:

| By Selvam

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அலாம்கிர் அலாம் இன்று (மே 15) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அலாம்கிர் அலாம்.

இவரின் தனிச்செயலாளர் சஞ்சீவ் லால், ஊரக வளர்ச்சித்துறையில் டெண்டர் ஒதுக்குவதில் கமிஷன் பெற்றதாக வந்த புகாரையடுத்து  ராஞ்சியில் அவர் தொடர்புடைய இடங்களில் கடந்த மே 6-ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ.35.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து சஞ்சீவ் லாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் அலாம்கிர் அலாமிடம் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அலாம்கிர் அலாமை கைது செய்தனர்.

ஏற்கனவே ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். இந்தநிலையில், ஜார்க்கண்ட்டில் சிட்டிங் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோவை: மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்… விபத்தில் பறிபோன உயிர்!

பெண் போலீஸ் குறித்து அவதூறு: மன்னிப்பு கேட்ட ரெட் பிக்ஸ் நிறுவனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share