கோவையில் மதுபோதையில் தனியார் பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
கோவை நகரின் முக்கியமான பேருந்து நிலையங்களில் காந்திபுரம் பேருந்து நிலையமும் ஒன்று. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று (மே 15) காலை தனியார் பேருந்து ஒன்று காந்திபுரம் பேருந்து நிலையத்திற்குள் வந்தது. அப்போது பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பின்னோக்கி நகர்த்தியுள்ளார். பின்னால் மற்றொரு பேருந்தும் நின்றுகொண்டிருந்தது. பேருந்தை கடந்து செல்ல முயன்ற ஒருவர், இரண்டு பேருந்துகளுக்கும் இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
உடனடியாக அங்கு இருந்த சக பேருந்து ஊழியர்கள் பேருந்தை நிறுத்தி ஓட்டுனரை கீழே இறக்கியதில் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஓட்டுனரை சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த திருநாவுக்கரசு, என்றும் விபத்தில் பலியானவர் நீலகிரி மாவட்டம் தெங்கு மரஹடா கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருநாவுக்கரசு மீது கோவை காந்திபுரம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கொளுத்தும் வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்: 13 மாவட்டங்களில் இன்று கனமழை!