சோதனை முயற்சியின்போது எஞ்சின் இயக்கப்பட்ட சில விநாடிகளில் ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்துச் சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. elon musk SpaceX Starship Explodes during test
விண்ணிலிருந்து பூமிக்கும் தரையிறங்கும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் அடுத்தடுத்து சோதனையை நடத்தி வருகிறது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.
இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று (ஜூன் 19) காலை 9.30 மணியளவில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் விண்ணில் செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ராக்கெட்டின் செயல்பாடுகளில் கட்டுபாடு இழந்த நிலையில், ராக்கெட் ஏவுவதற்கு முன்பே, சோதனை கட்டத்திலேயே வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியில் தீப்பிழம்பு ஏற்பட்டது. இதுதொடர்பான நேரலை வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை!
இதுதொடர்பாக ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கையில், “ஜூன் 18 புதன்கிழமை இரவு 11 மணியளவில், பத்தாவது ராக்கெட் சோதனைக்குத் தயாராகும் ஸ்டார்ஷிப், ஸ்டார்பேஸில் உள்ள ஒரு சோதனை நிலையத்தில் இருந்தபோது கட்டுபாட்டை இழந்து வெடித்து சிதறியது. எனினும் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.
உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து சோதனை தளத்தையும் அருகிலுள்ள பகுதியையும் பாதுகாக்க எங்கள் ஸ்டார்பேஸ் குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சுற்றியுள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை, மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் போது தனிநபர்கள் அந்தப் பகுதியை அணுக முயற்சிக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் நிகழ்ந்த இரு சோதனைகள் தோல்வியடைந்தன. இன்று 3வது முறையாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட சோதனை ஜூன் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படும் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
