அதிமுகவில் களைகள் நீக்கம்… பகைவர்கள் கட்சிக்கு வேண்டாம்: தொண்டர்களுக்கு எடப்பாடி கடிதம்!

Published On:

| By Selvam

வரும் அக்டோபர் 17-ஆம் தேதியுடன் அதிமுக தொடங்கி 53-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

எடப்பாடி எழுதியுள்ள கடிதத்தில், “எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுகவின் 53-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். நம்முடைய கட்சி தோன்றிய காலகட்டத்தில் ஏற்பட்ட அரசியல் சூழலையும், தோற்றுவிக்கப்படக் காரணமாக இருந்த வரலாற்று நிகழ்வுகளையும் நினைத்துப் பார்க்கிறேன்.

ADVERTISEMENT

அதிமுக தொடங்கிய காலம் தொட்டு, மக்கள் பணியில் கண் துஞ்சாது கடமையாற்றி 30 ஆண்டுகால மக்கள் ஆட்சியில் மகத்தான தொண்டுகளால், மக்கள் போற்றும் சாதனைகளால் தமிழ் நாடு தலை நிமிர்ந்தது.

மற்றொரு புறம் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, புராண, இதிகாசங்களில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் தந்திரங்களுக்கும், சூழ்ச்சிகளுக்கும் இணையான திரை மறைவு வேலைகளால், சூழ்ச்சிகளால், சதி வலைகளால், உடனிருந்து கொள்ளும் வியாதிகளாய் பதவி சுகம் அனுபவித்துக்கொண்டு அதிமுகவை அழிக்கத் துடிக்கும் எட்டப்பர்கள் இந்த இயக்கத்தையே காட்டிக்கொடுத்து அழிக்கத் துணிந்தார்கள்.

ADVERTISEMENT

எத்தனையோ சூழ்ச்சிகள் நடைபெற்றன. “இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்சி நீடிக்கப்போகிறது?” என்று ஏளனம் பேசியவர்கள் ஒருபுறம். மனசாட்சியை மறைத்துவிட்டு, கபட நாடகங்களை அரங்கேற்றினார்கள். ஆனால், அவர்கள் சூதுமதி பலிக்கவில்லை. சூழ்ச்சிகள் வேலை செய்யவில்லை.

அவர்கள் விரித்த வலையிலே அவர்களே மாட்டிக்கொண்டதை நாடறியும். “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்” என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் சூளுரைத்து சபதம் ஏற்றார்.

ADVERTISEMENT

அவரின் சபதத்தை நிறைவேற்றி, மக்கள் பணியே மகேசன் பணி என்ற அண்ணாவின் கொள்கைகளை நெஞ்சில் ஏற்றி, எண்ணற்ற துரோகங்களை முறியடித்து, ஜெயலலிதா விட்டுச் சென்ற ஆட்சியை சிறப்புடன் நடத்த நம் இருபெரும் தலைவர்களின் ஆசி உங்கள் பேரன்பால் எனக்கு கிடைத்தது.

“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; மீண்டும் தர்மமே வெல்லும்” என்பதற்கு இணங்க ஜெயலலிதாவின் ஆட்சி எனது தலைமையில் மக்களாட்சியாகவே நடந்தது.

என்னுடைய அயராத முயற்சிகளுக்கும், தொய்வில்லாத பணிகளுக்கும் நாள்தோறும் துணை நிற்கும் உங்கள் ஒவ்வொருவரையும் இந்த நாளில் நன்றியோடு நினைக்கிறேன்.

அதிமுக தொண்டர்களின் அர்ப்பணிப்பை, தியாகத்தை நினைத்துப் போற்றுகிறேன். ‘அதிமுக’ இன்று களைகள் எடுத்த தோட்டமாய் செழித்து நிற்கிறது என்ற “வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு” வள்ளுவரின் அறிவுரையை மறக்கலாமா? வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை.

ஆனால், நண்பர்கள் போல் இருந்து உட்பகை கொண்டவர்களின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என்று எத்தனை ஆழமான அறிவுரையை வள்ளுவர் நமக்குத் தந்திருக்கிறார். உட்பகை கொண்டவர்கள் இனி நம் இயக்கத்திற்கு வேண்டாம் என்பதில் உறுதியோடு நிற்போம்.

அதிமுக தொண்டர்களே, “நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்பின் எப்படை வெல்லும்” என்ற வைர வரிகள் நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

இன்னும் 16 மாதங்களில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் வர இருக்கிறது. எம்.ஜி.ஆரின் ஆட்சியை, ஜெயலலிதாவின் ஆட்சியை மலரச் செய்வதற்கு, அதிமுகவிற்கு ஆதரவுதர மக்கள் தயாராகிவிட்டார்கள்.

நமது தோட்டத்தில் களைகள் நீங்கி பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கிறது. பொன்னான வசந்த காலம் நம் கண்ணெதிரே தெரிகிறது. எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், 2026-ல் அதிமுகவின் ஆட்சி அமைந்திடுவதை எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது. அதற்கு, எந்த ஒரு தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

உங்களின் உயர்வுக்காகவும், அதிமுகவின் வெற்றிக்காகவும் என்னையே அர்ப்பணித்து உழைத்து வருகிறேன். “விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பை தரப்போகுது” என்ற எம்.ஜி.ஆரின் வரிகள் நமக்குள் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

2 நாட்களுக்கு ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் அதிகனமழை?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share