தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று (அக்டோபர் 15) வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை, சேலம், மதுரை, கோவை என பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் குடிமியான்மலையில் 13செமீ மழை பெய்துள்ளது.
கும்மிடிப்பூண்டி, எண்ணூரில் தலா 10 செமீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் இன்று (அக்டோபர் 10) செய்தியாளர்களிடம் கூறுகையில், “நேற்று (14-10-2024) காலை தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (15-10-2024) காலை 0530 மணி அளவில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, இன்று 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், தமிழகத்தில் இன்று (அக்டோபர் 15) முதல் அக்டோபர் 17 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை (அக்டோபர் 16) வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் அக்டோபர் 17ஆம் தேதி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.
சென்னைக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்றே ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய பாலச்சந்திரன், “சூழ்நிலை மாறுவதால் வானிலை அறிவிப்பும் மாறுகிறது” என்று தெரிவித்தார்.
ரெட் அலர்ட்
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம்
ஆரஞ்ச் அலர்ட்
வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம்.
மஞ்சள் அலர்ட்
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், மற்றும் புதுக்கோட்டை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
அவசர போன்.. நள்ளிரவில் கிளம்பிய உதயநிதி.. அதிகாரிகள் பதட்டம் – என்ன நடந்தது?
கொட்டும் மழையில் ஆய்வு : களப்பணியாளர்களுக்கு டீ வாங்கிக் கொடுத்த ஸ்டாலின்