யாருக்கு யார் போட்டி: அண்ணாமலைக்கு எடப்பாடி பதில்!

Published On:

| By christopher

யாருக்கு யார் போட்டி என்பது வரும் மக்களவைத் தேர்தலின் போது தெரியும். அண்ணாமலை சொல்வது அவரது கருத்து என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம்‌ வந்தடைந்த எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ எடப்பாடி பழனிசாமி இன்று(அக்டோபர் 6) செய்தியாளர்களை சந்தித்தார்‌.

ADVERTISEMENT

அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தான் பிரதான எதிர்க்கட்சி. இதற்கு மக்கள் கூட எளிதாக பதில் சொல்லி விடுவார்கள்.

யாருக்கு யார் போட்டி என்பது வரும் மக்களவைத் தேர்தலின் போது தெரியும். அண்ணாமலை சொல்வது அவரது கருத்து. வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக – பாஜக போன்ற கருத்துக்களை அவர் கூறிவருகிறார்.

ADVERTISEMENT

கூட்டணி குறித்து வி.பி. துரைசாமி கூறுகின்ற கருத்திற்கு நாங்கள்‌ பொறுப்பாக முடியாது. எங்களுடைய நிலைப்பாட்டையும்‌ தீர்மானத்தையும்‌ நாங்கள்‌, தெளிவாக அறிவித்து விட்டோம்‌.

சிறுபான்மையினருக்காக அதிமுக!

ADVERTISEMENT

தமிழக மக்களின் உரிமைகளைக் காப்பதில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது.  எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுக தான் சிறுபான்மையினர் நலனுக்காக போராடி வருகிறது. நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த கைதிகளை விடுவிப்பதற்கு எந்தெந்த வகைகளில் உதவவேண்டுமோ அந்தந்த வகைகளில் நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்.

பல மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை முன் வைக்காமலேயே தேர்தலைச் சந்திக்கின்றனர். பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே பலமுறை தெளிவுப்படுத்திவிட்டோம். அதனையடுத்து தற்போது சிறுபான்மையின மக்கள் நிறைய பேர் கட்சியில் தினமும் இணைந்து வருகின்றனர்.

பொய் வழக்கு போடும் திமுக!

இந்த அரசாங்கம்‌ ஒரு சர்வாதிகார போக்கில்‌ உள்ளது.  நாட்டில்‌ நிலவுகின்ற பிரச்னையை சமூக வலைத்தளங்களில்‌ எடுத்துச்‌ சொன்னால்‌ அதனை பொறுத்துக்‌ கொள்ள முடியாமல்‌ தொடர்ந்து பொய்‌ வழக்குகள்‌ போடுவது தான்‌ இந்த அரசின்‌ வாடிக்கையாக உள்ளது. இதற்கெல்லாம்‌ திமுக பதில்‌ சொல்ல வேண்டிய காலம் வரும்.

ஒட்டுமொத்தமாக தமிழக  அரசாங்கமே குளறுபடியாக தான்‌ உள்ளது. அதனால்தான்‌ காவல்‌ துறையும்‌ குளறுபடியாக உள்ளது. தினம்தோறும்‌ கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல்‌ வன்கொடுமை போன்றவை எல்லாம்‌ தான்‌ அன்றாட நிகழ்வாக இருக்கிறது. பொம்மை முதல்வர்‌ ஆளுகின்ற நாட்டில்‌ இது போன்ற நிலைமை தான்‌ நிலவும்‌.

ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்!

ஆசிரியர்கள் விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் தலைமை சரியாக இருந்திருந்தால் பிரச்சனை ஏற்பட்டிருக்காது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி, இடைநிலை, பகுதிநேர, டெட் தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை.

ஒபிஎஸ் – டிடிவி தினகரன் குறித்து… 

பல நீதிமன்றங்களில் எங்களுக்கு சரியான தீர்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டுவழக்கிலும் எங்களுக்கு சாதகமான சூழல் அமையும்.

டிடிவி தினகரனின் கட்சி இந்த தேர்தலுடன் முகவரி தெரியாமல் போய்விடும். மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அமமுக என்ற கட்சியே இருக்காது. டிடிவி தினகரனை நாங்கள் பொருட்படுத்துவதே கிடையாது” என்று  எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்!

சீனியர்களின் கனவில் மண்ணைப் போட்ட அண்ணாமலை: கமலாலய விசும்பல்! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share