சீனியர்களின் கனவில் மண்ணைப் போட்ட அண்ணாமலை: கமலாலய விசும்பல்!

Published On:

| By Aara

அக்டோபர்  5 ஆம் தேதி சென்னையில் பாஜக மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம்  நடந்தது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன், “தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு அதிமுக சென்றதால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. தேசிய தலைமை 5 மாநில தேர்தல்களில் கவனம் செலுத்தி வருகிறது. அது முடிந்த பிறகு தமிழ்நாட்டின் மீது கவனம் செலுத்தும்” என்று கூறினார். மேலும்,  2014 ஆம் ஆண்டிலேயே திமுக அதிமுக அல்லாத தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் அமைந்திருப்பதாகவும் பொன் ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

இப்படி பத்திரிகையாளர்களிடம் அதிமுகவுடன் கூட்டணி முறிந்ததால் கவலை இல்லை என்று வெளிப்படையாக சொல்லி வந்தாலும்… உள்ளுக்குள் பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எல். முருகன் போன்றோருக்கு நெருக்கமான வட்டாரத்தில்,  “அதிமுக கூட்டணி முறிந்ததால் மத்திய அமைச்சராகும் பொன்னான வாய்ப்பு  போய்விட்டதே” என்ற விசும்பல்களே அதிகமாகக் கேட்கின்றன.

இதுகுறித்து பாஜக நிர்வாகிகள் சிலரிடம் நாம் பேசிய போது,

“அதிமுக- பாஜக கூட்டணி வருகிற மக்களவைத் தேர்தலில் தொடர்ந்திருந்தால் அதிகபட்சம் 10 எம்பிக்களை தமிழ்நாட்டில் இருந்து பெறும் வாய்ப்பு இருந்திருக்கும். திமுக மக்களவைத் தேர்தலுக்காக செலவு செய்வதை விட அல்லது அதற்கு இணையாக பாஜக -அதிமுக கூட்டணியும் செலவு செய்யும் சூழல் கூட உண்டாகியிருக்கும்.
இதையெல்லாம் வைத்து சீனியர் தலைவர்களான பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எல். முருகன் உள்ளிட்டோர் வருகிற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் அதன் மூலம் மோடியின் மூன்றாவது அமைச்சரவையில் இடம் பெறுவோம் என்றும் எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு அதிமுக ஆதரவோடு வெற்றி பெற்று விடலாம் என்று கருதி தேர்தல் வேலைகளைக் கூட ஆரம்பித்துவிட்டார் பொன் ராதாகிருஷ்ணன். இதற்காக அதிமுகவை சேர்ந்தவரும் தனது நண்பருமான தளவாய் சுந்தரத்திடம் தனிப்பட்ட முறையில் தனது விருப்பத்தினை ஏற்கனவே பகிர்ந்திருந்தார்.

அதேபோல தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வானதி சீனிவாசன் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வந்தார். தனது நண்பரும் கோவை மாவட்ட அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியுமான முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியிடம்  இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் பேசியும் வந்திருக்கிறார் வானதி.

இப்போது மத்திய அமைச்சராக இருக்கும் எல். முருகன் ஊட்டி மக்களவைத் தொகுதியில் போட்டியிட போவதாக ஏற்கனவே மாநில தலைவர் அண்ணாமலை  சூசகமாக பேசி இருந்தார். ஆனால் முருகன் தனது சொந்த ஊரான ராசிபுரத்தை உள்ளடக்கிய நாமக்கல் எம்பி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்ற கனவில் இருந்தார். அதற்கான முயற்சிகளையும் டெல்லியில் தொடங்கிவிட்டார்.  நாமக்கல் எம்.பி. தொகுதியில் அதிமுகவின் வாக்குகளும், ஒரு பகுதியில் பாமகவின் வாக்குகளும் கணிசமாக இருக்கின்றன.

இப்படி இந்த மூவரும் அதிமுக கூட்டணி அமையும் பட்சத்தில் வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சராகலாம் என்ற கனவில் இருந்தனர். ஆனால் இதையெல்லாம் அறிந்து கொண்டோ என்னவோ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அதிமுகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றுவது என்பதை ஒரு மிஷனாகவே நடத்தி இன்று சாதித்து விட்டார்.  வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைத்துவிட்டார் அண்ணாமலை.

கூட்டணியை விட்டு  அதிமுக வெளியே சென்றதால் கவலை இல்லை என்று சீனியர்கள் கேமராக்களுக்கு முன்பாக பேசினாலும் உள்ளே அதிமுக கூட்டணியை இழந்ததால் தங்களுக்கு மத்திய அமைச்சர் வாய்ப்பு பறிபோய்விட்டதே என்ற வருத்தத்திலே இருக்கிறார்கள்” என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Asian Games: தங்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியா!

”ரோகிணி தியேட்டர் சேதம்… போலீஸ் காரணம்”: நீதிபதிக்கு அரசு தரப்பில் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share