முதல்வர் பதவி.. திருமாவுக்கு விட்டுக் கொடுக்காத எடப்பாடி… அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன?

Published On:

| By Mathi

CM Post Thirumavalavan

திமுக- அதிமுக ஆதரவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை முதல்வராக்குவதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்ளாததால் அந்த முயற்சி நிறைவேறவில்லை.

சட்டசபை தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சி அமைக்க போராடி வந்தது. அதே நேரத்தில் திமுக தரப்பில், திருமாவளவனை முதல்வராக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

ADVERTISEMENT

இப்பேச்சுவார்த்தைகளின் அடுத்த கட்டமாக சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுகவின் 47 எம்.எல்.ஏக்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் பங்கேற்க கூட்ட அரங்கத்துக்குள் சென்ற அனைவரது செல்போன்களும் வெளியே வாங்கி பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுகவின் சீனியர்களான கேபி முனுசாமி, சிவி சண்முகம் ,எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர், “திருமாவளவனை முதல்வராக்குவதற்காக நாம் விட்டுக் கொடுக்கலாம்..” என எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினர்.

ADVERTISEMENT

ஆனால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், “நம்ம கட்சியின் பொதுச்செயலாளர் முதல்வராவதற்குதான் நமக்கு முக்கியம்.. அப்படி எல்லாம் முதல்வர் பதவியை விட்டுத் தர வேண்டாம்.. திருமாவளவனுக்குதான் துணை முதல்வர் பதவி தருகிறோம்; அவர்கள் கேட்கிற அமைச்சரவை இலாகாக்கள் கொடுக்கிறோம் என சொல்லி இருக்கிறோம்.. அதை ஏற்காவிட்டால் நாம எப்படி ஒப்புக் கொள்வது?” என அழுத்தமாக பேசினர். இதனையே எடப்பாடி பழனிசாமியும் ஆமோதித்தார்.

இதனையடுத்தே திருமாவளவன் முதல்வராக்கப்படுவதை ஏற்பது இல்லை என்கிற இறுதி முடிவை எடப்பாடி பழனிசாமி திமுக தரப்பிடம் தெரிவித்துவிட்டார்.

ADVERTISEMENT

இந்த முடிவை தெரிவித்த பின்னர்தான் தமது எக்ஸ் பக்கத்தில், “ நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டார்.

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மே 4-ந் தேதியன்று மக்கள் தீர்ப்பை ஏற்பதாக அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி 5 நாட்களுக்கு பின்னர் இன்றுதான் புதிய ஆட்சி குறித்து கருத்தை தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த விட்டுக்கொடுக்காத முடிவு, திருமாவளவனுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்தே விஜய்யின் தவெக ஆட்சி அமைக்க ‘வெளியில் இருந்து ஆதரவு’ என்ற முடிவை திருமாவளவன் எடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share