அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவும், எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளர் ஆனதும் சட்டப்படி செல்லும் என்று உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.
இதனைக் கேட்ட எடப்பாடி ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே கொண்டாட்டத்தை தொடங்கினர். ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இதேபோன்று எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தின் அருகிலேயும் காலை முதலே தொண்டர்களும், நிர்வாகிகளும் காத்திருந்தனர்.
தீர்ப்பு வந்த உடன் எடப்பாடி பழனிசாமிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அவரது ஆதரவாளர்களான தம்பிதுரை, கே.பி.முனுசாமி, வளர்மதி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும், மாவட்டச் செயலாளர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமி இல்லத்தின் முன்பு காத்திருக்கும் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவான கோஷங்களையும் எழுப்பினர். இதேபோன்று எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் உள்பட தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கலை.ரா
எடப்பாடிக்கே ஆதரவு – ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் : வழக்கறிஞர்கள் பேட்டி!
