பெருவாரியான தொண்டர்களின் ஆதரவை பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக அவர் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று (செப்டம்பர் 2) தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தனது தீர்ப்பில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, “ஒற்றை தலைமை என்ற அதிமுகவின் நோக்கம், அதன் முன்னெடுப்புகள் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.
இதுதான் தொண்டர்களின் விருப்பம், எனவே பொதுக்குழு கூட்டப்பட்டது சட்டப்படி செல்லத்தக்கது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
பெருவாரியான தொண்டர்களின் ஆதரவை எடப்பாடி பழனிசாமி பெற்று இருக்கிறார். எனவே அவர் தலைமையில் நடந்த பொதுக்குழு செல்லும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
அதிமுக சட்ட விதிகளின்படி தான் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
தீர்ப்பின் முழு விவரம் கிடைத்த பிறகே நீதிபதிகள் தங்களது உத்தரவை எதன் அடிப்படையில் பிறப்பித்தார்கள் என்பது தெரியவரும் ” என்று தெரிவித்தனர்.
கலை.ரா
எடப்பாடிக்கு வெற்றி : பொதுக்குழு செல்லும் -உயர்நீதிமன்றம் அதிரடி!
