இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 21) தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,
“முதலமைச்சர் ஸ்டாலின் மதுரைக்கு அறிவித்த பல திட்டங்கள் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. டைடல் பார்க் அறிவிப்பு வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிய நிலையில், அதற்கு நிதி ஒதுக்கி பணிகள் துவங்கவில்லை. மதுரை விமான நிலையம் ஓடுதளம் விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட மதுரைக்கு குடிநீர் வழங்கும் திட்டம் சுணக்கமாக உள்ளது. திமுக அறிவிக்கும் திட்டங்கள் கானல் நீராக உள்ளது.
பாஜகவில் இருந்து பலரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது அவர்களுடைய ஜனநாயகம்.
அதிமுக ஆட்சியில் விருதுநகரில் ஜவுளி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நாங்கள் கொண்டு வந்த திட்டத்துக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி உள்ளார்கள்.
திமுக தான் வாரிசு அரசியல் செய்கிறது. அது ஒரு குடும்ப கட்சி. திமுக தலைவர் கலைஞர் அவரது மகன் ஸ்டாலின் அதற்கு பின்பு அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இதற்கு பெயர் தான் வாரிசு அரசியல். ஒரு குடும்பத்தின் கையில் கட்சி இருக்கிறது. ஒரு குடும்பத்திற்குள் ஒரு கட்சி போகக் கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை. அதிமுகவில் என்னைப் போன்ற சாதாரண தொண்டன் உயர்ந்த பொறுப்புக்கு வர முடியும்.
தேர்தல் அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து முடிவாகும். நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி தான் வாக்கு கேட்க வேண்டுமா? தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. 2014-ல் ஜெயலலிதா பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி வாக்குகள் கேட்கவில்லை.
திமுகவில் எந்த கூட்டணி அமைந்துள்ளது? கூட்டணி குறித்து தற்போது வரை பேசி தான் வருகிறார்களே தவிர கூட்டணி அமைக்கவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தையில் தான் உள்ளது இன்னும் முடிவாகவில்லை. திமுக கூட்டணியில் இருந்து எத்தனை கட்சிகள் வெளியே செல்கிறார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள்.
இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு, ஓபிஎஸ் ஆசை நிறைவேறாது. அது நிராசையாக தான் இருக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவரிடம், அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “வேறு கட்சியிலிருந்து வந்தவர் அவர். அதிமுகவின் கட்டுப்பாடுகள், விதிகளுக்கு மீறி செயல்பட்டதால் ஏ.வி.ராஜூ ஏற்கனவே கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். அவர் கூறுவதை எல்லாம் பெரிது படுத்தக்கூடாது. பதவி இல்லாத விரக்தியில் பேசுகிறார்” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சீருடைகள்: மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு!
டிராக்டர்கள், ஜேசிபிக்களோடு டெல்லியை நோக்கி விவசாயிகள்! மீண்டும் கண்ணீர்ப் புகை குண்டுகள்!