“சிங்கப்பெண் அதிரடிப் படையின் முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?” – எடப்பாடி பழனிசாமி சாடல்!

Published On:

| By Kavi

தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்த ஸ்ரீவைகுண்டம் பகுதி நிர்வாகிகளான பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. சரவணன் பெயரைச் சொல்லி வேலை வாங்கித் தருவதாக இளம்பெண்ணை காரில் கடத்திச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து  பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள  இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

ADVERTISEMENT

அந்தவகையில் இன்று (ஜூன் 11) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ”தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ சரவணன் ஆதரவில் ,இந்த கொடூரத்தை ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது.

ADVERTISEMENT

மேலும், இதனை மறைக்க, தவெக எம்.எல்.ஏ சரவணனே அந்த பெண்ணிடம் “அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக” சமரசம் பேசியதாக செய்திகள் வருகிறது.

சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?
அதுவும், ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ  இப்படி கேடுகெட்டத்தனமான செயலுக்கு சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா?

ADVERTISEMENT

உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில், உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளதை உணர்கிறீர்களா?

“அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும்” என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ?

சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் Single Take-ல் பேசிய வசனங்களை எல்லாம் உங்கள் கட்சியினரைப் பார்த்து பேசுங்கள்

பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி MLA-வை பதவி ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா?

மேலும், வேறொரு பெண்ணுக்கும் இக்கொடுமை நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

அதனால், இந்த வழக்கை எந்த அரசியல் இடையூறுக்கும் இடமின்றி விசாரித்து, குற்றம் இழைத்தவர்கள் மீதும், குற்றத்திற்கு துணை போனோர் அனைவர் மீதும், அது யாராக இருந்தாலும் சரி, எந்த MLA-வாக, அமைச்சராக இருந்தாலும் சரி, கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என  வலியுறுத்தியுள்ளார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share