அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி சொன்ன மெசேஜ்!

Published On:

| By Selvam


எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் மலரச் செய்ய மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 16) கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108-ஆவது பிறந்தநாள் நாளை (ஜனவரி 17) கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளை ஒட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

ADVERTISEMENT

இந்தநிலையில், எம்ஜிஆர் பிறந்தநாளை ஒட்டி அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில்,

“அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 108-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், அதிமுக நிர்வாகிகளுக்கும், எம்ஜிஆர் ரசிகர்களுக்கும், அனைத்துத் தமிழர்களுக்கும், எனது மகிழ்ச்சி கலந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன.

ADVERTISEMENT


உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், எம்ஜிஆர் பிறந்த நாள் என்பது, மகிழ்ச்சியையும், உணர்வுப்பூர்வமான அனுபவங்களையும் மலரச் செய்யும் நாளாகும்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக்குப் பின்னர் தான், அரசாங்கங்கள் ஒரு சாதாரண தனி மனிதனை முன்வைத்து திட்டங்களைத் தீட்ட ஆரம்பித்தன.

ADVERTISEMENT

அந்தத் திட்டங்கள், ஒரு ஜனநாயகம் என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு இலக்கணம் வகுக்கின்ற திட்டங்களாகவும், ஒரு சாதாரண தனி மனிதனுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் அரசாங்கத்தினுடைய முதல் கடமை என்று உணர்த்துகின்ற திட்டங்களாகவும் அமைந்தன.

எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், இலவச வேட்டி சேலை திட்டம் உட்பட ஏழை, எளியவர்களுக்காக தீட்டப்பட்ட பல்வேறு திட்டங்கள்தான் இன்றளவும் வரலாறாய் நிலைத்து நிற்கிறது.

இனி, எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இத்தகைய திட்டங்களைத் தான் அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். இதுபோன்ற திட்டங்களைத்தான் புதிதாக அறிமுகம் செய்ய வேண்டும் என்ற அளவிற்கு, வரலாற்றையே ‘எம்.ஜி.ஆருக்கு முன், எம்.ஜி.ஆருக்குப் பின்’ என்று பிரிக்கும் அளவிற்கு ஆட்சி செய்த புகழுக்குரியவர்.

அவர் விட்டுச் சென்ற அரசியல் பாடமும், அவர் வாழ்ந்து காட்டிய அரசியல் முறையும் தான் நமக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

எம்ஜிஆரை தொடர்ந்து, ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும், எனது தலைமையிலான ஆட்சியிலும், மக்கள் நலன் சார்ந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் எராளம்.

எம்.ஜி.ஆர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், தமிழ்ச் சமூகத்திற்கு என்னவெல்லாம் தொண்டாற்றி இருப்பாரோ, அவற்றையெல்லாம் செய்து முடிப்பதற்காகத்தான், ஜெயலலிதாவிற்கு பிறகு, நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு அதிமுக தொடர்ந்து மக்கள் பணிகளை தொய்வில்லாமல் ஆற்றி வருகின்றது.


தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை, குடும்ப ஆட்சியை விரட்டவும், அதிமுகவை ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமர்த்தவும், தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் மலரச் செய்யும் மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட இந்நாளில் உறுதியேற்போம்.

ஜனநாயகத்தை சீர்குலைக்க, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது.

அந்தப் பயணத்தில் கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாததாகும்.

உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருப்பேன். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

தை மாத நட்சத்திர பலன்கள்: சதயம்

விண்வெளித் துறைக்கு தனி அமைச்சகம்: சோம்நாத் அமைச்சர் ஆகிறாரா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share