விண்வெளித் துறைக்கு தனி அமைச்சகம்: சோம்நாத் அமைச்சர் ஆகிறாரா?

Published On:

| By Kumaresan M

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

குறிப்பாக நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் விண்கலத்தை தரையிறக்கி சாதித்தது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா 1 விண்கலத்தை அனுப்பியது என இந்தியா விண்வெளித்துறையில் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அடுத்து, விண்வெளியில் இந்தியாவுக்கு என தனியாக ஸ்பேஸ் ஸ்டேஷனை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக இரு செயற்கைக்கோள்களை டாக் செய்யும் முயற்சியில் இந்தியா இன்று வெற்றியும் கண்டுள்ளது.

ஸ்பேடெக்ஸ் (SpaDex) திட்டத்தின் கீழ், பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட 2 செயற்கை கோள்களை முதலில் 15 மீட்டர் இடைவெளியில் கொண்டு வந்தனர்.

அடுத்ததாக 3 மீட்டர் வரை இரு செயற்கை கோள்களை வெற்றிகரமாக நெருங்கி வரச் செய்துள்ளனர். பின்னர் , இன்று இரு செயற்கைகோள்களும் டாக்கிங் செய்யப்பட்டது. விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் மட்டுமே இரு செயற்கை கோள்களை டாக்கிங் செய்யும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை நிறைவேற்றும் முனைப்பில் இஸ்ரோ உள்ளது. தொடர்ச்சியான வெற்றிகள் காரணமாக இஸ்ரோ சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை பெற்றுள்ளது.

இதனால், இஸ்ரோவுக்கு பல நாடுகளில் இருந்து ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து, இஸ்ரோவை நிர்வகிக்க தனியாக அமைச்சகத்தை ஏற்படுத்தும் முடிவில் மத்திய அரசு இருப்பதாக தெரிகிறது. தற்போது, பிரமருக்கு கீழ் செயல்படும் ஸ்பேஸ் கமிஷன் இஸ்ரோவை நிர்வகித்து வருகிறது.

இனிமேல், ஸ்பேஸ் சயின்ஸ் துறை என்ற பெயரில் தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும். இஸ்ரோ உள்ளிட்ட அமைப்புகளை அந்த அமைச்சகத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரோவில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற சோம்நாத்தை இந்த துறைக்கு அமைச்சராக நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. கடந்த பொது தேர்தலிலேயே பா.ஜ.க சார்பில் கேரளாவில் சோம்நாத் களம் இறங்கவுள்ளதாக தகவல் வெளியானதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்ற விண்வெளி தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளுடன் சோம்நாத்துக்கு நல்ல தொடர்பு உள்ளது. அவரின் திறமையை விண்வெளித்துறையில் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு விரும்புவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

எம்.குமரேசன்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… மகனுடன் கண்டுகளித்த உதயநிதி

தை மாத நட்சத்திர பலன்கள்: திருவோணம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share