கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 6) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ED conducts raid senthil balaji
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோது அவரது சகோதரர் அசோக் குமார் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்தநிலையில், ஓர் ஆண்டுக்கும் மேல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை தொடர்ந்து அவர் மீண்டும் அமைச்சரானார். செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரி வித்யாகுமார் தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான கரூர் ராயனூரைச் சேர்ந்த கொங்கு மெஸ் உரிமையாளர் மணி, கரூர் ஆத்தூர் கோதை நகரில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக், பழனியப்பா நகரைச் சேர்ந்த பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ்.சங்கர் ஆகியோர் வீடுகளில் இன்று காலை முதல் 20-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகளின் இந்த திடீர் சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ED conducts raid senthil balaji