குடிபோதையில் விபத்து… பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு!

Published On:

| By Selvam

கள்ளக்குறிச்சி பாஜக மாவட்ட தலைவராக இருக்கும் வி.ஏ.டி.கலிவரதன், குடிபோதையில் கார் ஓட்டி சென்று விபத்துக்குள்ளாக்கியதில் காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய கலிவரதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது,

ADVERTISEMENT

“கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி இரவு 9 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி.கலிவரதன் பி.தேவனூர் பகுதியில் காரில் சென்றுள்ளார்.

அப்போது அந்த சாலையில் முன்னாள் ராணுவ வீரர் ஃபிரான்சிஸ், தனது மகள் பியூலாவுடன் ஸ்கூட்டியில் சென்றுகொண்டிருந்தார்.

ADVERTISEMENT

தடுமாற்றத்துடன் கலிவரதன் ஓட்டி வந்த கார், ஸ்கூட்டியை இடித்து தள்ளியது. இந்த விபத்தில் பியூலா கீழே விழுந்ததால் அவருக்கு காலில் அடிபட்டது.

ஸ்கூட்டியை இடித்துவிட்டு நிற்காமல் சென்ற காரை, முன்னாள் ராணுவ வீரர் ஃபிரான்சிஸ் விரட்டி சென்று மடக்கினார்.

ADVERTISEMENT

அப்போது காரை விட்டு இறங்கிய கலிவரதனை ஃபிரான்சிஸ் சட்டையைப் பிடித்து இழுத்து அடித்துள்ளார்.

அதன்பிறகு ஃபிரான்சிஸ் தன்னை தாக்கியதாக அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்று கலிவரதன் புகார் கொடுக்க சென்றார்.

அவருக்கு பின்னால் அடிபட்ட மகளுடன் அதே அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு ஃபிரான்சிஸும் சென்று புகார் கொடுத்தார். ‘கலிவரதன் முழு குடிபோதையில் காரை ஓட்டி வந்து எங்கள் ஸ்கூட்டியை இடித்துவிட்டு நிற்காமல் சென்றார். அதன்பிறகு அங்கிருந்த மக்கள் உதவியுடன் நான் காரை விரட்டி சென்று மறித்து நிறுத்தினேன். அவர் கீழே இறங்காததால் சட்டையைப் பிடித்து இழுத்து அடித்துவிட்டேன். அதனால் இருவருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

”நான் யார் தெரியுமா? பாஜக மாவட்ட தலைவர். உன்னை பார்த்துக்கிறேன்“ என்று மிரட்டுவிட்டு சென்று காவல் நிலையத்திற்கு வந்திருக்கிறார்’ என்று ஃபிரான்சிஸ் புகார் கொடுத்தார்.

இந்த விஷயம் தெரிந்து ஃபிரான்சிஸிற்கு ஆதரவாக ஊர் மக்கள் கூடியதால், காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கலிவரதன் குடிபோதையில் இருந்ததை உறுதிசெய்த அரகண்டநல்லூர் காவல் நிலைய அதிகாரி, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். விபத்தில் அடிபட்ட சிறுமி பியூலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், பாஜக மாவட்ட தலைவர் கலிவரதன் தனது செல்வாக்கை பயன்படுத்தி புகாரை வாபஸ் வாங்க ஃபிரான்சிஸிடம் சமரசம் பேசி வருவதாக சொல்கிறார்கள்” காவல்துறை வட்டாரத்தில்.

வணங்காமுடி

அண்ணாமலை சாட்டையடி போராட்டம்… பாஜகவினரே ஏற்க மாட்டார்கள் – ஆர்.எஸ்.பாரதி

பாலியல் வன்கொடுமை: அடிக்கடி அண்ணா பல்கலைக்கழகம் சென்ற ஞானசேகரன் – கோவி.செழியன் சொல்வதென்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share