அண்ணாமலையின் சாட்டையடி போராட்டத்தை பாஜகவில் இருப்பவர்களே ஏற்க மாட்டார்கள் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (டிசம்பர் 27) தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வேதனைக்குரிய ஒன்று. ஆனால், அதை வைத்து எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் அரசியல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.
பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்கள். அதற்கெல்லாம் எடப்பாடி நடவடிக்கை எடுத்தாரா? அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நேரத்தில் அண்ணாமலை விநோதமாக சாட்டையடித்து போராட்டம் நடத்தியிருக்கிறார். பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை நடக்கும்போது சாட்டை கிடையாதா? லண்டனுக்கு சென்று சாட்டையை கண்டுபிடித்து வந்தமாதிரி புதிதாக சாட்டையை எடுத்து அடிக்கிறார்.
சாட்டை அடித்து நேர்த்திக்கடன் செய்தால், பாஜகவில் பெரிய பதவி கிடைக்கும் என்று ஒரு ஜோசியர் சொன்னதால், அவர் சாட்டையடி போராட்டம் நடத்துகிறார் என்று நினைக்கிறேன். இதை பாஜகவில் இருப்பவர்களே ஏற்க மாட்டார்கள். அண்ணாமலையின் செயலை பகுத்தறிவுவாதிகள் ஏற்க மாட்டார்கள்.
பெரியார் பாணியில் சொன்னால் காட்டுமிராண்டித்தனம். எனது 62 ஆண்டுகால அரசியல் வாழ்வில் எந்த தலைவரும் இதுபோன்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை.
மணிப்பூர், உத்தரபிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்று தினம் தினம் சம்பவம் நடக்கிறது. அங்கெல்லாம் சென்று அண்ணாமலை சாட்டையடி போராட்டம் நடத்துவாரா? அவரது போராட்டத்திற்கு மக்கள் செவிசாய்க்கவில்லை, சிரிக்கத்தான் செய்கிறார்கள்.
திமுக ஆட்சியிலிருந்து அகற்றும் வரை செருப்பு போடமாட்டேன் என்கிறார். அப்படி ஒரு சபதத்தை அவர் ஏற்றால், காலம் முழுவதும் செருப்பே போட முடியாது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாலியல் வன்கொடுமை: அடிக்கடி அண்ணா பல்கலைக்கழகம் சென்ற ஞானசேகரன் – கோவி.செழியன் சொல்வதென்ன?
இளம் வீரருடன் மோதல்: கோமாளி கோலி… ஆஸ்திரேலிய பத்திரிகை விமர்சனம்!