மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 பேர் விடுதலை ரத்து; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published On:

| By Pandeeswari Gurusamy

Supreme court

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேரை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கூலிப்படையால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் இருந்த, ரூ.10 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கர் நிலம் தொடர்பான தகராறில் இந்த படுகொலை அரங்கேறியது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்த நிலையில், ஐயப்பன் என்பவர் அப்ரூவராக மாறினார். வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் கடந்த 2021 ஆகஸ்டில் பொன்னுசாமி, அவரது மகன்கள் பாசில், போரிஸ் மற்றும் வில்லியம்ஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வ பிரகாஷ் ஆகியோருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம், யேசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

உயர்நீதிமன்ற தீர்ப்பும் மேல்முறையீடும்:

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் கடந்த 2024-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு:

இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவை ரத்து செய்தது. “விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முறையாக ஆய்வு செய்யாமல் உயர்நீதிமன்றம் குற்றவாளிகளின் தண்டனையை ரத்து செய்தது மிகப்பெரிய தவறு” என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

உடனடியாக சரணடைய உத்தரவு:

இந்த வழக்கில் தொடர்புடைய பொன்னுசாமி மற்றும் மேரி புஷ்பம் ஆகியோரைத் தவிர மற்ற அனைத்து குற்றவாளிகளும் உடனடியாக சரணடைய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பொன்னுசாமி மற்றும் மேரி புஷ்பம் இருவரும் தங்களது மகன்களின் தூண்டுதலின் பேரிலேயே இந்த கொலை விவகாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு தண்டனையைக் குறைப்பது தொடர்பாக ஆளுநருக்கு மனு அளிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆளுநர் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை இருவருக்குமான தண்டனையை நிறுத்தி வைக்கவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share