தொழிலதிபர் அகமது புகாரி நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
2011 – 2012 மற்றும் 2014 -2015 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே இந்தோனேசியாவில் இருந்து தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் அரசுக்கு 487 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக கோஸ்டல் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்தின் மீதும், அதன் இயக்குனர் அகமது புகாரி மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
துபாயில் உள்ள நிலக்கரி மற்றும் எண்ணெய் நிறுவனங்கள், மொரிசியாசில் உள்ள முத்தியரா எனர்ஜி ஹோல்டிங்ஸ், பிரிசியஸ் எனர்ஜி ஹோல்டிங் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராகவும் 2018 ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இந்த மோசடி பணத்தை வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக கூறி அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த சூழலில் அகமது புகாரிக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த வழக்கில் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று சிபிஐ டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2025 ஆம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் அகமது புகாரிக்கு எதிரான வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அகமது புகாரிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த சூழலில் மேற்குறிப்பிட்ட நான்கு நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை இன்று விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஓம் பிரகாஷ், இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றமும் அமலாக்கத்துறை வழக்கை சென்னை உயர்நீதிமன்றமும் ரத்து செய்துள்ளதாக கூறி இந்த நான்கு நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்வதாக தீர்ப்பளித்துள்ளார்.
