அம்மா உணவகங்களுக்கு தேவையான சமையல் உபகரணங்களை கொள்முதல் செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அதிமுக அரசின் முக்கிய திட்டமான அம்மா உணவகம் பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான சவால்களையும் விவாதங்களையும் சந்தித்தது.
இத்திட்டத்திற்கான நிதி முறையாக ஒதுக்கப்படுவதில்லை எனவும் சில இடங்களில் அம்மா உணவகங்கள் மூடப்பட்டதாகவும் அதிமுக குற்றம்சாட்டியது. பல உணவகங்களில் மிக்ஸி, கிரைண்டர், குளிர்சாதனப் பெட்டிகள் பழுதடைந்து இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “ தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.
சமீப காலங்களில் இவ்வுணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அவர் உரிய அரசுத் துறை செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.
இந்த மறுசீரமைப்பிற்கும், பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
