வைஃபை ஆன் செய்ததும் வன்னியர் சங்கத்தை கைப்பற்றிவிட்டாரே டாக்டர் ராமதாஸ் என்ற தகவல் வந்து விழ, மெசேஜை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். Dr.Ramadoss takes control of Vanniyar Sangam
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திய டாக்டர் ராமதாஸ் திடீரென பாமகவின் முதன்மை அமைப்பான வன்னியர் சங்கத்தின் கூட்டத்தையும் இன்று நடத்தினார்.
டாக்டர் ராமதாஸ், 2 நாட்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை அன்புமணியும் அவரது ஆதரவாளர்களும் முழுமையாகப் புறக்கணித்தனர். பாமகவின் சொற்பமான எண்ணிக்கையிலான மாவட்ட, மாநில நிர்வாகிகளே ராமதாஸின் ஆலோசனையில் கலந்து கொண்டனர். இதனால் விரக்தி அடைந்த டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களை முதலில் பாமகவில் இருந்து நீக்கிவிட்டு அன்புமணியையும் நீக்க முடிவு செய்துள்ளதாக நமது மின்னம்பலத்தில் எழுதி இருந்தோம்.
தாம் உருவாக்கிய பாமக, தமது கைகளை விட்டுப் போகிறதே என வருத்தப்பட்ட டாக்டர் ராமதாஸ், உஷாராக பாமகவின் அடிப்படையான அமைப்பான வன்னியர் சங்கத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிவெடுத்தார். இதன் தொடக்கமாகவே தைலாபுரம் தோட்டத்தில் இன்று வன்னியர் சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி முன்னிலையில் டாக்டர் ராமதாஸ் நடத்திய இந்தக் கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் மொத்தம் 180 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்; இவர்களில் 10 பேர் பெண் நிர்வாகிகள். பாமகவின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், மாணவர் அணி அமைப்பாளர் கோபிநாத், புதுவை மாநில அமைப்பாளர் கணபதி, வன்னியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், வைத்தி, தங்க அய்யாசாமி உள்ளிட்டோர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.
வன்னியர் சங்கத்தின் 62 மாவட்ட நிர்வாகிகளில் 55 பேர் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், யார் எங்க போனாலும் கவலை இல்லை.. கட்சி நம்மை விட்டு போகாது. கட்சிக்கு அடி உரமாக இருப்பது இந்த வன்னியர் சங்கம்தான்.. இந்த வன்னியர் சங்கத்தை கீழ்மட்டம் வரைக்கும் பலப்படுத்த வேண்டும். இதற்காக அனைவரும் பாடுபட வேண்டும். அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்.. வன்னியர் சங்கத்தை பலப்படுத்திவிட்டால் பாமகவை யாரும் கையில் எடுத்துவிட முடியாது. பாமக தாமாகவே நம்ம கைகளுக்கு வரும்.. மற்றவர்கள் அனைவரும் தாமாகவே தைலாபுரம் தோட்டத்துக்கு வந்துவிடுவார்கள்.. ஆகையால் வன்னியர் சங்கத்தை பலப்படுத்துவோம்; வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு போராட்டத்தையும் தீவிரப்படுத்துவோம். இதற்கான வேலைகளை செய்வோம் என பேசினார்.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தின் மூலமாக, பாமக நிர்வாகிகளில் 80% பேர் அன்புமணிக்கு ஆதரவு என்கிற நிலைக்கு போட்டியாக வன்னியர் சங்கத்தை கைப்பற்றி என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன் என நிரூபித்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ் என மகிழ்ச்சி அடைகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

மேலும் பாமகவின் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை நிர்வாகிகள் பலரும், சமூக வலைதளங்களில் தமக்கு எதிராகவும் அன்புமணி, அவரது மனைவி சவுமியா அன்புமணி மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு முக்கியத்தும் தரும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டு வருவதும் டாக்டர் ராமதாஸை ரொம்பவே வருத்தப்பட வைத்துவிட்டதாம். இதனால் ராமதாஸின் உதவியாளர் அன்பு கேசவன். பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் ஆக்டிவ் நிர்வாகிகளுக்கு போனைப் போட்டு, இனிமேல் டாக்டர் அய்யாவுக்கு எதிராக பதிவுகளைப் போடக் கூடாது; அது அய்யாவுக்கு வலியைத் தந்துள்ளது; இனியும் பிரச்சனை செய்யாமல் இருங்கள்..என கடுமையான தொனியில் எச்சரித்தார் என்கின்றன பாமக வட்டாரங்கள் என சென்ட் பட்டனைத் தட்டிவிட்டு ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
