தங்கம் வாங்காதீங்க- சமையல் எண்ணெய் குறையுங்க – வீட்டில் இருந்து வேலை செய்யுங்க.. ஆன்லைன் க்ளாஸ் நடத்துங்க.. மோடி மீண்டும் வேண்டுகோள்

Published On:

| By Mathi

PM Modi Appeal

மேற்கு ஆசிய போர்ச் சூழலை கருத்தில் கொண்டு தேச நலனுக்காக பொதுமக்கள் தங்கம் (Gold) வாங்குவதை தள்ளி போட வேண்டும் ;சமையல் எண்ணெய் (Cooking Oil) பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வேண்டுகோள்களை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார்.

குஜராத் மாநிலம் சோம்நாத்தில் நேற்று மே 11-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு மத்தியில் மற்றொரு விஷயம் மிக முக்கியமானதாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக உலகம் நிலையற்ற நிலையில் உள்ளது.

ADVERTISEMENT

கொரோனா காலம் போல எதிர்கொள்வோம்

முதலில் கொரோனா, பிறகு உலகளாவிய பொருளாதாரச் சவால்கள், இப்போது மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றம். இந்தச் சூழல் உலகையே பாதித்துக் கொண்டிருக்கிறது, இந்தியாவும் அதிலிருந்து தப்பவில்லை.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் அண்மைக்காலத்தின் பெரிய நெருக்கடிகளில் ஒன்று. நாம் கொரோனாவை இணைந்து எதிர்கொண்டது போல, இதையும் நிச்சயமாக வெல்வோம்.

மக்களின் மீது இதன் தாக்கம் குறைவாக இருக்க வேண்டும் என்று அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால், இத்தகைய காலத்தில் ‘மக்கள் பங்கேற்பு’ மிகவும் அவசியம். இந்தியக் குடிமகனாக நமது கடமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்த வேண்டாம்

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்காக இந்தியா பல லட்சம் கோடி அந்நியச் செலாவணியைச் செலவிடுகிறது. இப்போது அந்தப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது, சப்ளை செயினும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, வெளிநாட்டிலிருந்து வரும் பொருட்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும்.

ADVERTISEMENT

இந்தியாவின் இறக்குமதியில் பெரும்பகுதி கச்சா எண்ணெய் (Crude Oil). துரதிர்ஷ்டவசமாக, நமக்கா கச்சா எண்ணெய் வழங்கும் பகுதி இப்போது போரில் சிக்கியுள்ளது. எனவே சூழல் சரியாகும் வரை நாம் ஒரு சிறிய உறுதி மொழி எடுக்க வேண்டும்.

எனது வேண்டுகோள்கள்:

  • பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறையுங்கள்.
  • மெட்ரோ, மின்சார பேருந்து மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்.
  • அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ‘வீட்டிலிருந்தே வேலை’ (Work From Home) மற்றும் மெய்நிகர் கூட்டங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
  • சமையல் எண்ணெய்- (Cooking Oil) பயன்பாட்டைக் குறையுங்கள், இது ஆரோக்கியத்திற்கும் நல்லது.
  • தங்கம் வாங்குவதைத் தள்ளிப்போடுங்கள். தங்கம் இறக்குமதிக்காக நாட்டின் பெரும்பணம் வெளியே செல்கிறது.
  • ‘Vocal for Local’: வெளிநாட்டுப் பொருட்களுக்குப் பதில் உள்ளூர் தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்.
  • விடுமுறை வந்தவுடன் குழந்தைகளை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வதும், வெளிநாடுகளில் திருமணங்கள் நடத்துவதும் ஒரு நாகரிகமாக மாறிவிட்டது. இதற்கு அதிக அந்நியச் செலாவணி செலவாகிறது. இந்தியாவில் இல்லாத இடங்களா? உங்கள் திருமணங்களை இந்தியாவிலேயே நடத்துங்கள்.
  • குஜராத் மக்களுக்கு நான் சொல்வது – நீங்கள் ‘ஒற்றுமைக்கான சிலையில்’ (Statue of Unity) திருமணங்களை நடத்தலாம். அங்கே சர்தார் படேலின் ஆசி உங்களுக்குக் கிடைக்கும்.

இந்த முயற்சிகள் சிறியதாகத் தோன்றலாம், ஆனால் 140 கோடி மக்களும் இணைந்து ஒரு படி எடுத்து வைத்தால், அது தேசத்தின் மிகப்பெரிய சக்தியாக மாறும். நாம் மீண்டும் ஒருமுறை ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக தெலுங்கானா மாநில அரசு நிகழ்ச்சியில் பேசுகையிலும் பிரதமர் மோடி இதேபோல வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share