பாஜகவுக்கு திமுக ஆதரவு- இந்திய அரசியலில் திடீர் திருப்பம்!

By Mathi

|

Published on 28 Nov 2026, 7:46 AM

MK Stalin- Modi- Delimitation Bill 2026

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள புதிய அரசியல் சாசனத் திருத்த மசோதாவை சில நிபந்தனைகளுடன் திமுக ஆதரிக்க இருக்கிறது.

தொகுதி மறுவரையறை தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வந்த 2 பிரதான கோரிக்கைகளும் மத்திய அரசின் புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ள பின்னணியில், திமுக இந்த நிலைப்பாட்டை எடுக்கிறது.

ADVERTISEMENT

தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக முன்வைத்த கோரிக்கைகள் என்ன? இக்கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ன? மத்திய அரசின் புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் என்ன?

ADVERTISEMENT

பிப்ரவரி 14, 2024: தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம்

மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிராக 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி தமிழக சட்டசபையில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “தொகுதி மறுவரையறை என்ற திட்டத்தில் தென்னிந்திய மக்களை, குறிப்பாக, தமிழ்நாட்டு மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கக்கூடிய ஆபத்து, சூழ்ச்சி இருக்கிறது. இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் மீது, தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை (delimitation) உள்ளது. அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

இந்திய அரசமைப்பின் 82 மற்றும் 170-ஆம் பிரிவுகளின்படி, ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகும், நாடாளுமன்றம், மாநிலச் சட்டமன்றங்களில் புதிய இடங்கள் உருவாக்கப்படுகின்றன.

ஏற்கனவே உள்ள தொகுதிகளின் எல்லைகள் மறு சீரமைக்கப்படுகின்றன. எல்லை நிர்ணய சட்டத்தின்படி இவை செய்யப்படுகிறது. இந்தச் சட்டத்தின்படி எல்லை நிர்ணய ஆணையத்தைக் (Delimitation Commission of India) ஒன்றிய அரசு அமைத்து வருகிறது.

இதுவரை 1952, 1962, 1972 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் எல்லை நிர்ணய ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 1976-ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகும், மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவை இடங்கள் மறுநிர்ணயம் செய்யப்பட்டு வந்தன.

இவ்வாறு மறுநிர்ணயம் செய்யும்போது, மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவைகளின் இடங்கள் குறைக்கப்படுகின்றன. அதாவது ‘மக்கள்தொகைக் கட்டுப்பாடு’ எனும் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்தி, மக்கள்தொகையைக் குறைத்துக் கொள்ளும் மாநிலங்களுக்குத் தரப்படும் தண்டனையாக இது அமைந்துள்ளது.

இதனால் மக்கள்தொகை குறையும். மாநிலங்களுக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும். மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் ஆர்வம் செலுத்தாத மாநிலங்கள் கூடுதல் பரிசைப் பெறும்; அவற்றுக்கான பிரதிநிதித்துவம் அதிகமாகும்.

இதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை நாம் எதிர்த்தாக வேண்டும்.

மக்கள்தொகை குறைவதால் ஜனநாயக உரிமைகள் மாநிலங்களுக்குக் குறையக் கூடாது என்பதால்தான் அரசியலமைப்பில் 42-ஆவது சட்டத் திருத்தம் செய்யப்பட்டது.

2001-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரை, தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்வதை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருந்தது. அதுபோலவே, அரசியலமைப்புச் சட்டத்தின் 84-ஆவது திருத்தமும் செய்யப்பட்டது. தொகுதிகளின் எண்ணிக்கையில் 2026-ஆம் ஆண்டு வரை மாற்றம் செய்யப்படமாட்டாது என்றும்,

2026-ஆம் ஆண்டிற்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவைகளில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படும் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்தால், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் பின்னடைவைச் சந்திக்கும்.

1971-ஆம் ஆண்டு தமிழ்நாடும் பிகாரும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான மக்கள்தொகையைக் கொண்டிருந்ததால் மக்களவையில் கிட்டத்தட்ட ஒரே அளவிலான தொகுதிகளைக் கொண்டிருந்தன. இன்று தமிழ்நாட்டோடு ஒப்பிடுகையில் பீகாரின் மக்கள்தொகை ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால், மத்திய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டில் தற்போதுள்ள மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டப்பேரவை இடங்களின் எண்ணிக்கை பல வடமாநிலங்களின் எண்ணிக்கையை விட விகிதாசாரத்தில் குறைந்து விடும்.

இதனை நினைத்துப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் உரிமைக்காக இவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதியைக் குறைத்துவிட்டால் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து விடுவார்கள்.

39 எம்.பி.க்கள் இருக்கும் போதே ஒன்றிய அரசிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறோம். இதிலும் குறைந்தால் என்ன ஆகும்? தமிழ்நாடு, கோரிக்கை வைக்கும் பலத்தை இழக்கும். அதன் சக்தியை இழக்கும். அதனால் அதன் உரிமைகளை இழக்கும். இதனால் தமிழ்நாடு பின்தங்கி விடும்.

எனவேதான் தொகுதி வரையறை – மறுசீரமைப்பு என்ற பெயரால் தொகுதிகளின் எண்ணிக்கையை எந்தச் சூழலிலும் குறைக்கக் கூடாது என்கிறோம்.

மக்கள்தொகைக் குறைந்து விட்டதைக் காரணம் காட்டி, தென் மாநிலங்களுக்குத் தொகுதிகளைக் குறைப்பது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை பலவீனம் அடையச் செய்யும். எனவே, அனைத்து மாநிலங்களிலும் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளும் வரை, தொகுதிகளின் எண்ணிக்கையை இப்படியே தொடரச் செய்வதே சரியாகும். இதேபோன்ற பாரபட்சம்தான் நிதி ஒதுக்கீட்டிலும், நிதி பகிர்விலும் காட்டப்படுகிறது.

மக்கள்தொகையைக் காரணமாகக் காட்டி தென்னிந்திய மாநிலங்களுக்கு வரி வருவாயில் பங்கு குறைந்துவிட்டது. மக்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே பிரதிநிதித்துவம் என்று கணக்கிடப்பட்டு, மாநிலங்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டால், புவியியல், மொழி, பொருளாதார, அரசியல் பின்னணிகளைப் புறந்தள்ளும் செயலாகிவிடும். மக்களாட்சியின் ஆதாரப் பண்பையே அது நாசமாக்கிவிடும். இதனால் ஏற்கனவே கனல் வீசிக்கொண்டிருக்கும் எதிர்ப்புணர்வுகளை மேலும் வளர்ப்பது போலாகிவிடும்.

இந்தியாவின் ஒற்றுமையை இதுநாள் வரை கட்டிக்காத்து வரும் கூட்டாட்சித் தத்துவத்தை மீறும் செயல் எதையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளக் கூடாது. அதிக தொகுதிகள் மூலம் ஆதிக்கம் செலுத்துவது கூட்டரசின் தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகிவிடும்.

2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று நாம் வலியுறுத்த வேண்டும்.

தவிர்க்க இயலாத காரணங்களினால் மக்கள்தொகையின் அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தவேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை இந்தச் சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

தொகுதி மறுவரையறை: ஸ்டாலின் முன்னெடுத்த நடவடிக்கைகள்!

தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் இந்த விவகாரம் முடிந்துவிடவில்லை.

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உள்ளிட்ட மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி, முந்தைய திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம், பல்வேறு மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்தல், பிரதமர் மோடிக்குக் கடிதம் என தொகுதி மறுவரையறை விவகாரத்தை தேசிய அளவில் விவாதத்துக்குக் கொண்டு சென்றார் ஸ்டாலின்.

பிப்ரவரி 25, 2025 – தமிழக அமைச்சரவைக் கூட்டம்

முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பினார்.

மார்ச் 5, 2025 – தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டம்

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நாடு முழுவதும் தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் தமிழகத்தின் 39 தொகுதிகள் 31 ஆகக் குறையும் என ஸ்டாலின் எச்சரித்தார்.

ஒட்டுமொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தாலும், தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை ஒதுக்கினால் தமிழகத்தின் பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் பாதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கக் கூடாது; 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி ஒதுக்கீட்டை 2026-ஆம் ஆண்டிலிருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் தென்மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைப்பது, தொகுதி மறுவரையறையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

மார்ச் 7, 2025 – 7 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் இதர மாநிலங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை ஸ்டாலின் மேற்கொண்டார்.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, சிறந்த நிர்வாகத்தை வழங்கிய மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது அநீதியானது என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.

கூட்டு நடவடிக்கைக் குழுவில் இணைய ஒப்புதல் அளிக்குமாறும், ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் மூத்த பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறும் கேட்டுக்கொண்ட ஸ்டாலின், மார்ச் 22-ந் தேதி சென்னையில் நடைபெறும் முதல் கூட்டத்தில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தார்.

மார்ச் 22, 2025 – சென்னையில் மாநில முதல்வர்கள் மாநாடு

இதனடிப்படையில் நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடகா மாநில துணை முதல்வராக இருந்த டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்; மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக, 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கீட்டை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களைப் பாதுகாக்கத் தேவையான அரசியல் சாசனத் திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மையக் குழுவை அமைப்பது, பிரதமர் மோடியிடம் கூட்டாகக் கோரிக்கை மனு அளிப்பது, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சட்டசபைகளில் தீர்மானங்களை நிறைவேற்றுவது, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

மார்ச் 24, 2025 – தமிழக சட்டசபையில் ஸ்டாலின் விளக்கம்

மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, தமிழக சட்டசபையிலும் இது தொடர்பாக ஸ்டாலின் விளக்கமளித்தார்.

தமிழக சட்டசபையில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தொகுதி மறுவரையறை தொடர்பாக தமது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை ஸ்டாலின் விளக்கினார்.

2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக சட்டசபையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.

1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி ஒதுக்கீட்டை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கக் கோரி சென்னையில் நடைபெற்ற மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்குத் துணை நின்ற அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

மார்ச் 27, 2025 – பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

இதன் அடுத்தகட்டமாக, சென்னையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நேரில் வழங்குவதற்காக பிரதமர் மோடியைச் சந்திக்க அனுமதி கோரி ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமரைச் சந்திக்க விரும்புவதாக அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

ஏப்ரல் 2, 2025 – பிரதமருக்கு மீண்டும் நினைவூட்டல்

மார்ச் 27-ந் தேதி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, ஏப்ரல் 2-ந் தேதி மீண்டும் பிரதமரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஏப்ரல் 16, 2026 – நாடாளுமன்றத்தில் 3 மசோதாக்கள்; திமுக எதிர்ப்பு

இவ்வாறு தொகுதி மறுவரையறை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், ஓராண்டுக்குப் பிறகு தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்தது.

131-வது அரசியல் சாசனத் திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேசங்கள் சட்டத் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த 3 மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்கே திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எதிர்ப்பு தெரிவித்தார்.

ஏப்ரல் 17, 2026 – மக்களவையில் கனிமொழி பேசியது என்ன?

மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி, அதற்கு அடுத்த நாள் நடைபெற்ற விவாதத்தில் தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகள் தொடர்பாக 3 வெவ்வேறு கணக்குகளை முன்வைத்து மத்திய அரசிடம் விளக்கம் கோரினார்.

தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீதான விவாதத்தில் ஏப்ரல் 17-ந் தேதி மக்களவையில் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, “தற்போது நம்மிடம் 39 இடங்கள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு பின்பற்றப்படும் என்று கூறும் இந்த மசோதாக்களின்படி, இது 32 இடங்களாக மாறும். 543 இடங்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்று வைத்துக்கொண்டால் இதுதான் நிலை.

நேற்று உள்துறை அமைச்சர் எங்களிடம் கூறியது போல், அதிகபட்ச இடங்கள் 850 ஆக உயர்த்தப்பட்டால், தமிழகம் 48 இடங்களைப் பெறும். ஆனால் உள்துறை அமைச்சர் கூறுவது போல் மாநிலங்கள் முழுவதும் இடங்கள் 50 சதவீதம் உயர்த்தப்பட்டால், அது சுமார் 59 இடங்களைப் பெறும்.

இப்போது நான் உள்துறை அமைச்சரிடம் கேட்கிறேன், மேலே உள்ள சூழ்நிலைகளில் எது நடக்கும்? 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இருக்குமா அல்லது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அதிகரிக்கப்படுமா அல்லது உள்துறை அமைச்சர் சொன்னது நடக்குமா? இவை மூன்று வெவ்வேறு எண்கள். எது நடக்கும் என்பதில் எங்களுக்குத் தெளிவு தேவை” என கேள்வி எழுப்பி இருந்தார்.

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி

ஏப்ரல் 17, 2026 – மக்களவையில் அரசியல் சாசனத் திருத்த மசோதா தோல்வி

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே, மகளிர் இடஒதுக்கீட்டுடன் தொகுதி மறுவரையறையை இணைத்து மத்திய பாஜக அரசு கொண்டுவந்த 131-வது அரசியல் சாசனத் திருத்த மசோதா மக்களவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

மசோதாவுக்கு ஆதரவாக 298 எம்.பி.க்களும், எதிராக 230 எம்.பி.க்களும் வாக்களித்தனர். அரசியல் சாசனத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா தோல்வியடைந்தது.

இதனையடுத்து தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டத் திருத்த மசோதா ஆகிய 2 மசோதாக்களையும் மத்திய அரசு தொடர்ந்து பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

விஜய் ஆட்சியில் தொகுதி மறுவரையறை விவகாரம்

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியல் சாசனத் திருத்த மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியிலும் தொகுதி மறுவரையறை விவகாரம் தமிழக சட்டசபையில் விவாதத்துக்கு வந்தது.

ஆகஸ்ட் 12, 2026 – விஜய் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு; உதயநிதி பேசியது என்ன?

தொகுதி மறுவரையறைக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 12-ந் தேதி தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது பேசிய உதயநிதி, “2026 மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை நிர்ணயித்தால், தென்மாநில எம்.பி-க்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிடும். அதேநேரம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத வடமாநிலங்களில் எம்.பி-க்களின் தொகுதிகள் அதிகரித்துவிடும். எனவே, தொகுதி மறுவரையறை திட்டத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கு நடத்தாமல் நிறுத்தி வைக்க வேண்டும்; 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படியே மக்களவைத் தொகுதிகள் தொடர வேண்டும் என்று நான் அங்கு விளக்கினேன். இதுவே அந்தக் கூட்டத்தின் முக்கிய முடிவாகவும் எடுக்கப்பட்டது.

இதுகுறித்து கடந்த மார்ச் 24-ஆம் தேதி இதே சட்டமன்றத்தில் எங்களது தலைவர் அப்போதைய முதல்வர் விளக்கமாகக் கூறினார். இந்த ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி அந்த மசோதாவின் நகலைத் தமிழ்நாடு முழுவதும் எரித்து எங்களது கடும் எதிர்ப்பை நாங்கள் வெளிப்படுத்தினோம். எங்கள் தலைவரே அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு தொகுதி மறுவரையறை மசோதாவை எரித்தார். அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டதை இந்தத் தீர்மானத்தில் அரசு சுட்டிக்காட்டியுள்ளது. அந்த மசோதாவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் காட்டிய எதிர்ப்பே, அது நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதற்குக் காரணமாகும்.

இந்தச் சூழலில், தொகுதி மறுவரையறை சட்டத் திட்டத்திற்கான மசோதாவை ஒன்றிய அரசு மீண்டும் கொண்டுவரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், 1971-இல் இருந்து 2026 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்தத் தொகுதி மறுவரையறை நடவடிக்கையை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்.

அதற்கான புதிய சட்டத் திருத்தம் இந்த ஆண்டு வரவில்லை என்றால், 2027-இல் மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி-க்களின் தொகுதிகள் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அப்படிச் செய்வதற்கான அதிகாரத்தை அரசியலமைப்பு வழங்கியுள்ளது என்று சட்ட வல்லுநர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம், வரவேற்கிறோம். ஒருவேளை மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்காகத் தொகுதி மறுவரையறை கொண்டுவரப்பட்டால், அதை 1971 மக்கள் தொகை அடிப்படையிலேயே செய்ய வேண்டும்.

அதில் ஏதாவது மாற்றம் வந்தால், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் எம்.பி-க்களின் விகிதாச்சாரம் குறையும். தற்போது உள்ள 7.1 சதவீதத்தைக் குறைக்க அனுமதிக்கக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்தி, தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்தத் தீர்மானத்தை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம்” என்றார்.

காங்கிரஸும் விஜய்யும்

விஜய் அரசு கொண்டுவந்த தீர்மானத்தை திமுக ஆதரித்தபோதும், மக்களவைத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்ந்து விவாதத்துக்குள்ளாகின.

தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆகஸ்ட் 12-ந் தேதி தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானத்தில், தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை நிரந்தரமாக்க வேண்டும்; மாநிலங்களுக்கிடையேயான தற்போதைய தொகுதிப் பகிர்வில் மாற்றம் செய்யக் கூடாது; தற்போதுள்ள தொகுதிகளின் அடிப்படையிலேயே மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 20-ந் தேதி தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்திலும், தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளே தொடர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அதே நாளில் மாமல்லபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், 543 மக்களவைத் தொகுதிகளே நிரந்தரமாகத் தொடர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை.

மாறாக, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய எந்த மாநிலத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ சதவீதமும் குறைக்கப்படாது என்பதற்கு மத்திய அரசு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என விஜய் வலியுறுத்தினார்.

இதனால் தொகுதி மறுவரையறை தொடர்பான விஜய் அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்தது.

ஆகஸ்ட் 21-ந் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மக்களவையின் மொத்தத் தொகுதிகள் 543, தமிழகத்தின் தொகுதிகள் 39 என்ற எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யாமல் மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.

இதே விவகாரத்தை தமிழக சட்டசபையில் எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நிலைப்பாட்டை அமித்ஷா முன்னிலையில் முதல்வர் விஜய் ஏன் தெரிவிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளே மேலும் 25 ஆண்டுகளுக்குத் தொடர வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என விளக்கமளித்தார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்

இத்தகைய அரசியல் பின்னணியில்தான், கடந்த ஏப்ரல் மாதம் அரசியல் சாசனத் திருத்த மசோதாவை நிறைவேற்ற முடியாத மத்திய அரசு, மீண்டும் புதிய மசோதாவைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான புதிய அரசியல் சாசனத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 30-ந் தேதி மக்களவையும், டிசம்பர் 2-ந் தேதி மாநிலங்களவையும் கூடும்; டிசம்பர் 3-ந் தேதி வரை இரு அவைகளின் அமர்வுகளும் நடைபெற வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 13-ந் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. எனினும் கூட்டத்தொடர் முறைப்படி முடித்து வைக்கப்படாததால், அதன் தொடர்ச்சியாகவே இந்தச் சிறப்பு அமர்வுகள் நடைபெற உள்ளன.

நவம்பர் 27, 2026 – திமுகவின் நிலைப்பாடு என்ன? சிபிஎம் கேள்வி

புதிய தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கொண்டுவர உள்ள நிலையில், இந்த மசோதா தொடர்பான திமுகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியும் எழுந்தது.

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக மத்திய அரசுக்கும் திமுகவுக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் கவலை அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

தமிழ்நாடு மற்றும் தென்மாநிலங்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்க வேண்டும் என்றும், யூகங்களுக்கு இடமளிக்காமல் தொகுதி மறுவரையறை தொடர்பான தனது நிலைப்பாட்டை திமுக தலைமை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் பெ.சண்முகம் வலியுறுத்தினார்.

திமுகவின் நிலைப்பாடு இதுதான்: ஸ்டாலின் திட்டவட்டம்

இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு தொடர்பாக எழுந்த கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் வகையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நவம்பர் 27-ந் தேதி அறிக்கை வெளியிட்டார்.

நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், தமிழகத்தின் தற்போதைய 7.18% பிரதிநிதித்துவம் எந்தச் சூழ்நிலையிலும் குறைக்கப்படக் கூடாது என வலியுறுத்தினார்.

1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட மாநிலங்களுக்கிடையேயான தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாச்சாரத்தை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த 2 கோரிக்கைகளிலும் திமுக உறுதியாக இருப்பதாகவும், எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

புதிய மசோதாவில் என்னதான் இருக்கிறது?

இந்நிலையில், நவம்பர் 27-ந் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த 132-வது அரசியல் சாசனத் திருத்த மசோதாவில், தொகுதி மறுவரையறை தொடர்பாகப் பல முக்கியத் திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.

அரசியல் சாசனத்தின் 81-வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி மாநிலங்களுக்கான மக்களவைத் தொகுதிகளின் அதிகபட்ச எண்ணிக்கை 530-லிருந்து 815 ஆகவும், யூனியன் பிரதேசங்களுக்கான தொகுதிகளின் அதிகபட்ச எண்ணிக்கை 20-லிருந்து 35 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

இதன் மூலம் மக்களவைத் தொகுதிகளின் அதிகபட்ச எண்ணிக்கை 850 ஆக உயர்த்தப்படுகிறது.

புதிய மசோதாவின் 9-வது பிரிவின் மூலம் அரசியல் சாசனத்தின் 334A பிரிவு மாற்றியமைக்கப்படுகிறது.

இதன்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும், யூனியன் பிரதேசத்துக்கும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 50% அதிகரிக்கப்படும். அதேபோல மாநில சட்டசபைகளின் தொகுதிகளும் 50% அதிகரிக்கப்படும்.

கடந்த ஏப்ரல் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் வாய்மொழியாக அளித்த 50% தொகுதிகள் அதிகரிப்பு உறுதிமொழி, தற்போது புதிய மசோதாவிலேயே இடம்பெற்றுள்ளது.

அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50% தொகுதிகள் அதிகரிக்கப்பட்ட பின்னர், அந்தத் தொகுதி ஒதுக்கீடும் தொகுதிகளின் எல்லைகளும் 2051-ஆம் ஆண்டு வரை தொடரும் வகையில் அரசியல் சாசனத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

இதன் மூலம் 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட தற்போதைய தொகுதிகளின் விகிதாச்சாரம் அடிப்படையில் பாதுகாக்கப்படும். முழு எண்ணாகத் தொகுதிகளை ஒதுக்கும்போது சிறிய விகிதாச்சார வேறுபாடுகள் ஏற்படலாம்.

தற்போதுள்ள தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகள் 50% அதிகரிக்கப்பட்டால் சுமார் 59 தொகுதிகளாகவும், சட்டசபையின் 234 தொகுதிகள் 351 ஆகவும் உயரும்.

புதிய அரசியல் சாசனத் திருத்தச் சட்டம் அமலுக்கு வரும் நாளில் கிடைக்கக்கூடிய, கடைசியாக வெளியிடப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் தொகுதிகளின் எல்லைகள் மறுவரையறை செய்யப்படும்.

மாநிலங்களுக்கு இடையேயான தொகுதி ஒதுக்கீடு 50% அதிகரிப்பு அடிப்படையிலும், மாநிலங்களுக்குள் தொகுதிகளின் எல்லைகள் மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலும் அமையும்.

புதிய அரசியல் சாசனத் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்படும் முதல் தொகுதி மறுவரையறையைத் தொடர்ந்து மக்களவை மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். மகளிருக்கான தொகுதிகள் சுழற்சி முறையில் ஒதுக்கப்படும். அதற்கான நடைமுறைகளை நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் தீர்மானிக்கும்.

திமுக கோரிக்கைகள் ஏற்பு

2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி தமிழக சட்டசபையில் ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் முதல் நேற்று நவம்பர் 27-ந் தேதி அவர் வெளியிட்ட அறிக்கை வரை திமுக முன்வைத்த கோரிக்கைகளையும், மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள புதிய மசோதாவின் அம்சங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.

தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும் மாநிலங்களின் தற்போதைய பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் பாதிக்கப்படக் கூடாது; தற்போதைய தொகுதிப் பகிர்வு அடிப்படையை மேலும் 25 ஆண்டுகளுக்குப் பாதுகாக்க வேண்டும் என்பவை திமுக முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்.

தற்போதைய புதிய மசோதாவில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50% தொகுதிகள் அதிகரிப்பு, 2051-ஆம் ஆண்டு வரை புதிய தொகுதிப் பகிர்வுக்குப் பாதுகாப்பு ஆகிய 2 அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

அதேநேரத்தில், தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளையே அதிகரிக்காமல் தொடர வேண்டும் என்ற விஜய் அரசு மற்றும் காங்கிரஸின் கோரிக்கைக்கு மாறாக, மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்கப் புதிய மசோதா வகை செய்கிறது.

திமுக ஆதரவு

இந்த நிலையில் சென்னையில் இன்று திமுகவின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதா மீதான திமுகவின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் பிரதான கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்று புதிய அரசியல் சாசனத் திருத்த மசோதாவில் இடம்பெறச் செய்துள்ளது. திமுகவின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்யும்போது, திமுக ஆதரவு தெரிவிக்க இருக்கிறது. திமுகவின் இந்த ஆதரவு, பாஜகவின் தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவுக்கு மட்டும்தானா? அல்லது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் திமுக இடம் பெறுமா? என்பது போன்ற விவாதங்களும் எழத் தொடங்கி இருக்கிறது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel