தலைமை செயலகத்தில் அரசியல் கட்சியினர் மாற்றுக் கட்சியில் இணையும் நடவடிக்கையில் ஈடுபட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது என திமுக எம்.பி வில்சன் கண்டனம் தெரிவித்தார்.
அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமாரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் இன்று ராஜினாமா செய்தனர். பின்னர் தலைமை செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து தவெகவில் இணைந்தனர்.
இந்தநிலையில் திமுக எம்.பி.வில்சன் தனது எக்ஸ் பக்கத்தில், “தேர்தல் முடிந்து 21 நாட்களுக்குள், கட்சித் தாவல் புகாருக்கு உள்ளான மூன்று தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இருந்து தப்பிப்பதற்காகத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, உடனடியாகத் தலைமைச் செயலக வளாகத்திலேயே தவெக கட்சியில் இணைந்துள்ளனர்.
அரசுத் தலைமைச் செயலக வளாகமும், அறைகளும் ஒரு அரசியல் கட்சியில் இணைவதற்கான இடங்களாக மாறியிருப்பதும், அனைத்துவிதமான அறநெறிகள் காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக இந்த மூன்று தொகுதிகளின் மக்கள் மீதும் இப்போது தேர்தல் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. ஆறு மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டிய இடைத்தேர்தலுக்காக, கணிசமான அளவு பொதுமக்களின் பணமும் காலமும் வீணடிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
