3 அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்பு: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு!

Published On:

| By Kavi

சட்டமன்றத் தேர்தல் முடிந்து தவெக ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது.

இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண்முகம் எஸ்.பி வேலுமணி ஆகியோர் போர்க்கொடி தூக்கினர்.

ADVERTISEMENT

இதில் இவர்களுடன் சேர்ந்து தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்த 5 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். அற்காடு எஸ். எம். சுகுமார், அந்தியூர் ஹரிபாஸ்கர், சங்கரன்கோவில் ஜெய்சங்கர், காங்கேயம் எம். எஸ். நடராஜன், பண்ருட்டி மோகன் ஆகியோர் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கடிதம் கொடுத்தனர்

அதுபோன்று அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, மதுராந்தகத்தைச் சேர்ந்த மரகதம் குமாரவேல், தாராபுரம் சத்யபாமா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “மூன்று உறுப்பினர்களும் 25.05.2026 முதல் தாங்கள் சட்டமன்ற பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்து முறைப்படி கடிதம் அளித்துள்ளனர். பேரவை விதிகளின்படி இக்கடிதங்கள் முறையாக உள்ளதால் பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

எந்த விதியின் படி அவர்களது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது?

அதாவது கடிதம் அளிக்கின்ற உறுப்பினர் தங்களுடைய கடிதத்தை சொந்த கையெழுத்தின் மூலமாக எழுதி கொடுக்க வேண்டும். டைப் செய்வது கிடையாது. தங்கள் கையெழுத்தினால் எழுதி, தங்கள் கையொப்பமிட்டு நேரிலே வந்து அளிக்கலாம் என்பது ஒரு விதி.  இரண்டாவது,  வேறு யார் மூலமாவது அனுப்பி இருந்தால் அவர்களைப் பற்றி நான் விசாரித்து அது ஏற்புடையதாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். . 

ஆனால் இங்கே மூன்று பேரும் தனித்தனியாக அவர்களே வந்தார்கள். தங்கள் கைப்பட கடிதத்தை எழுதி என்னிடம் அளித்தார்கள். எனவே அதை நான் உடனடியாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

ஒரு உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை கொடுக்கிற போது அவர் காரணம் சொல்ல தேவையில்லை. ‘இன்று முதல் இப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்’ என்கின்ற அந்த வாசகங்கள் இருந்தால் போதுமானது, விதிகளுக்கு உட்பட்டு ஏற்று கொண்டிருக்கிறேன்.

கட்சி மாதிரி ஓட்டு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி எடப்பாடி கொடுத்த மனுவுடைய நிலை என்ன?

எல்லா மனுக்களும் என்னுடைய பரிசீலனையில் உள்ளது. உரிய நேரத்தில் விதிகளின்படி நடவடிக்கை எடுத்து அறிவிப்பேன்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் மன்னிப்பு கடிதம் கொடுத்திருக்கிறார்கள்… அது பற்றி… 

அவர்கள் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அது மன்னிப்பு கடிதமா என அந்த விவரம் பற்றி எல்லாம் நான் இன்னும் முழுமையாக ஆராயவில்லை . கடிதம் கொடுத்து, இதை ஆராய வேண்டும்’ என்று சொல்லிருக்கிறார்கள் . முறைப்படி படித்து பார்த்து விதிகளின்படி நான் என் முடிவை அறிவிப்பேன். 

தலைமை செயலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றுகிறார்கள் என விமர்சனங்கள் எழுந்துள்ளதே? 

சட்டமன்ற பேரவை தலைவர் என்கிற முறையில் என்னுடைய அலுவலகத்தை பற்றி கேள்வி கேட்டால் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share