ஆளுநர் உரையுடன் கூடும் சட்டசபை.. ஜூன் 17-ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

Published On:

| By Mathi

DMK MLAs to meet on June 17 ahead of TN Assembly session

தமிழக சட்டசபை (TN Assembly) ஜூன் 18-ந் தேதி ஆளுநர் அர்லேகர் உரையுடன் கூடுகிறது. இதனையொட்டி ஜூன் 17-ந் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் (DMK) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் ஜூன் 18-ந் தேதி தொடங்குகிறது. புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் அர்லேகர் உரை இடம் பெறும்.

ADVERTISEMENT

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஆளுநர் அர்லேகர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்படுகிறது; பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது; 3-வதாக மட்டுமே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்படும்; நிகழ்ச்சியின் நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்படும்; எந்த ஒரு நிகழ்ச்சியிலும் வந்தே மாதரம் பாடப்பட்டது இல்லை.

ADVERTISEMENT

ஆனால் ஆளுநர் அர்லேகர், பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் வந்ந்தே மாதரத்துக்குதான் முன்னுரிமை தரப்படுகிறது. இது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்தித்த போது, தமிழ்நாட்டில் தமிழ்த் தாய் வாழ்த்து பாட அனுமதி கோரியிருந்தார். இதுவும் விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில் ஜூன் 18-ந் தேதி தமிழ்நாடு சட்டசபை கூடுகிறது. தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநர் அர்லேகர், உரை இடம் பெறுவதால் அங்கும் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டு தமிழ்த் தாய் வாழ்த்து 3-வது பாடப்படுமோ? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியின் 1 மாத காலத்தில் மின்வெட்டு பிரச்சனை தலை தூக்கி உள்ளது; பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஆளும் தவெகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் ஜூன் 17-ந் தேதி திமுகவின் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக திமுக சட்டசபை கொறடா எ.வ.வேலு வெளியிட்ட அறிக்கையில், “ மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 17-06-2026 புதன்கிழமை மாலை 6.00 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கில்” நடைபெறும். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஆளுநர் உரை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனவும் எ.வ.வேலு கூறியுள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share