முழு ‘சங்கி’யாக மாறிய எடப்பாடி.. தமிழ்நாடு பெயரையே பாஜக மாற்றி விடும்.. ஸ்டாலின் எச்சரிக்கை- திருச்சி பேச்சு முழுமையாக!

Published On:

| By Mathi

Trichy Stalin

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முழுமையான ஒரு சங்கியாகவே மாறி சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார்; மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்து வருகிறது என்று திமுக (DMK) தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் (Stalin) கடுமையாக விமர்சித்தார்.

திருச்சியில் நடைபெற்ற இன்றைய (ஏப்ரல் 1) பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: நேற்று மாலை திருவாரூரில் பரப்புரையைத் தொடங்கினேன். இன்று தீரர்கள் கோட்டமாம் திருச்சிக்கு வந்திருக்கிறேன். 3 வாரத்திற்கு முன்னாடிதான் இதே திருச்சியில மாபெரும் மாநில மாநாட்டிற்காக வந்தேன். இப்ப மீண்டும் நம்முடைய வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன்.

ADVERTISEMENT

மீண்டும் மீண்டும் நான் திருச்சிக்கு வர்ற மாதிரி, திராவிட மாடல் ஆட்சியும் மீண்டும் மீண்டும் வரணும். அதுக்கு நீங்க தயாரா?

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய 9 தொகுதிகளையும் நீங்கள் வெற்றியைத் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் தந்த அந்த வெற்றியால் 2 சிறப்பான அமைச்சர்களை தமிழ்நாட்டிற்கு நீங்கள் தந்திருக்கீங்க. இந்த முறையும் திருச்சியில முழு வெற்றி, 100% வெற்றி தருவீங்களா?

ADVERTISEMENT

வேட்பாளர்கள்

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியினுடைய நமது வெல்லும் வேட்பாளர், திருச்சியின் தீரர், மாநாட்டு நாயகர், கழகத்தின் முதன்மைச் செயலாளர், என்னுடைய ஆருயிர் சகோதரர் கே.என். நேரு அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்துல நீங்கெல்லாம் பொன்னான வாக்குகளை வழங்கிட வேண்டும்.

அடுத்து திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியினுடைய நமது வெல்லும் வேட்பாளர், அருமைத் தம்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழி, என்னுடைய ஆருயிர் நண்பன் அன்பில் பொய்யாமொழி அவர்களுடைய அருமை மகன், எப்பவும் சிரிச்ச முகத்தோட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரக்கூடிய தம்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு திருவெறும்பூர் மக்கள் உதயசூரியன் சின்னத்துல உங்களுடைய பொன்னான வாக்குகளை அளித்து அவரை வெற்றி பெற வைக்கணும்.

ADVERTISEMENT

அடுத்து திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியினுடைய நமது வெல்லும் வேட்பாளர் சகோதரர் இனிகோ இருதயராஜ் அவர்கள். சிறுபான்மை மக்களுக்காக என்கிட்ட எப்பவும் பேசி எதையும் சாதிக்கக் கூடிய ஆற்றலைப் படைத்தவர். தொகுதி மக்களுடன் ஏற்கனவே இரண்டறக் கலந்தவர். நல்ல ”வெயிட்டான” வேட்பாளர். சகோதரர் இனிகோ இருதயராஜ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலே வாக்களித்து திருச்சி கிழக்கு மக்கள் அந்த வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்து லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு நமது வெல்லும் வேட்பாளர் பாரிவள்ளல் அவர்கள். அவருடைய பெயருக்கு ஏற்றவாறு மக்களுக்கு நிச்சயம் தொண்டாற்றக் கூடியவர். கழகத்திற்காக உழைத்த தந்தை தங்கவேலு அவர்களுடைய வழியிலே வந்திருக்கக்கூடிய தம்பி பாரிவள்ளலுக்கு லால்குடி மக்கள் உதயசூரியன் சின்னத்திலே ஆதரவு தந்து வெற்றியைத் தேடித் தந்திட வேண்டும்.

அடுத்து மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியினுடைய நமது வெல்லும் வேட்பாளர் கதிரவனுக்கு நீங்கள் ஆதரவு தந்திட வேண்டும். தொகுதி மக்களுக்காக கடந்த 5 ஆண்டுகளாக எண்ணற்ற திட்டங்களும் உதவிகளையும் செய்தவர். அப்படிப்பட்ட தம்பி கதிரவனுக்கு உதயசூரியன் சின்னத்திலே உங்களுடைய பொன்னான வாக்குகளை நீங்கள் அளிக்கணும்.

அடுத்து திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியிலே நமது வெல்லும் வேட்பாளர் எஸ். துரைராஜ் அவர்கள். இவர் தொகுதிக்கு உட்பட்டிருக்கக்கூடிய அந்தநல்லூர் ஒன்றியத்தினுடைய பெருந்தலைவராக 2 முறை சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார். இப்போ திருவரங்கம் தொகுதியிலே போட்டியிடக் கூடிய அவருக்கு நீங்களெல்லாம் உதயசூரியன் சின்னத்திலே அந்த தொகுதி மக்கள் உங்களுடைய பொன்னான வாக்குகளை வழங்கிட வேண்டும்.

அடுத்து மணப்பாறை சட்டமன்றத் தொகுதி. அங்கு நமது வெல்லும் வேட்பாளர் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த சகோதரர் அப்துல் சமது அவர்கள். கூட்டணிக் கட்சியைச் சேர்ந்திருந்தாலும் நமது உதயசூரியன் சின்னத்திலே அவர் போட்டியிடுகிறார். கடந்த முறை போலவே இந்த முறையும் அவருக்கு உங்களுடைய பொன்னான வாக்குகளை அளித்து அவருக்குப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்திலே வெற்றியைத் தேடித் தந்திட வேண்டும்.

அடுத்து முசிறி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் தம்பி கருணை ராஜா அவர்கள். மறைந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ் அவர்களுடைய அருமை மகன். தலைமைச் செயற்குழு உறுப்பினர். பொறியாளர் அணியினுடைய பொறுப்பிலிருந்து பணியாற்றக் கூடியவர். கருணை ராஜாவுக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்திலே முசிறி மக்களாக இருக்கக்கூடிய நீங்கள் உங்களுடைய பொன்னான வாக்குகளை வழங்கிட வேண்டும்.

அடுத்து துறையூர் சட்டமன்றத் தொகுதி. நம்முடைய தோழமை இயக்கமான காங்கிரஸ் இயக்கத்திற்கு அந்தத் தொகுதியை ஒதுக்கி இருக்கிறோம். விரைவிலே நம்முடைய அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் அறிவிக்க இருக்கக்கூடிய அந்த வேட்பாளரை, காங்கிரஸ் கட்சியினுடைய வேட்பாளரை துறையூர் மக்கள் கைச் சின்னத்திலே உங்களுடைய பொன்னான வாக்குகளை வழங்கிட வேண்டும்.

அருமை சகோதரர் ராகுல் காந்தி

இங்கே இந்த மேடையிலே இப்போ நின்று கொண்டிருக்கக்கூடிய இந்த வேட்பாளர்களுக்கும் அதேபோல அறிவிக்கப்போகிற காங்கிரஸ் கட்சியினுடைய வேட்பாளரையும் சேர்த்து திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினுடைய வேட்பாளர் 9 வேட்பாளர்களையும் உங்களுடைய பொன்னான வாக்குகளை வழங்கி வெற்றி பெற வைக்கணும் என்று உங்களையெல்லாம் அன்போடு கேட்கிறேன், பண்போடு கேட்கிறேன், பாசத்தோடு கேட்கிறேன், உரிமையோடு கேட்கிறேன். உங்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கேட்கிறேன்.

வெற்றி உறுதியா? வெற்றி உறுதியா? கொஞ்சம் சத்தமா. வெற்றி உறுதியாயிடுச்சு. வேட்பாளர்கள் உட்காரலாம். உங்களைச் சீட் கொடுத்தாச்சு.

திருச்சிக்கு ரூ26,000 கோடி திட்டங்கள்

இந்த அளவுக்கு ஏன் உரிமையோடு நான் பேசுறேன் என்று கேட்டால், அந்த அளவுக்கு இந்த திருச்சிக்காக பல்வேறு முத்திரை திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் நாம் செய்துகொடுத்திருக்கிறோம். உறுதியா சொல்றேன் நிச்சயமா சொல்றேன், அவற்றையெல்லாம் சொல்ல முடியாது, காரணம் நேரம் இல்ல. வெயிலிலே கடுமையான வெயிலிலே நீங்கள் இங்கே காத்துக்கொண்டிருக்கிறீர்கள். எனவே சுருக்கமா தலைப்பு செய்தியா மிக மிக சிறப்புக்குரிய சிலவற்றை மட்டும் நான் உங்களிடத்தில் லிஸ்ட் போட காத்திருக்கிறேன்.

பக்கத்து மாநிலத்தைச் சார்ந்தவங்க கூட இது என்னப்பா ஒரு பஸ் ஸ்டாண்ட் ஏர்போர்ட்டை மிஞ்சுகிற வகையில் இருக்குன்னு வியந்து போய் வீடியோ போடுகிற திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம். அது பக்கத்திலேயே பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம். அது மட்டுமல்ல திருவரங்கம், லால்குடி மாநகராட்சிகளிலும் புதிய பேருந்து நிலையங்கள். திருச்சி மாவட்டத்தில் மட்டும் 327 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு செஞ்சிருக்கிறோம்.

பள்ளிக்கல்வி துறையை இன்றைக்கு கட்டிக்காத்துக் கொண்டிருக்கக்கூடிய அப்படிப்பட்ட அமைச்சரைத் தந்த உங்க மாவட்டத்துல இரண்டு மாதிரி பள்ளிகளை கட்டியிருக்கிறோம். உங்க மாவட்டத்திற்கு மட்டுமே நம்முடைய அண்ணன் அவர்கள் 9 கூட்டுக்குடிநீர் திட்டங்களையும், 18 மறுசீரமைப்பு குடிநீர் திட்டங்களையும் செஞ்சு கொடுத்திருக்கிறார். திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சூரியூர்ல மினி ஸ்டேடியம் மற்றும் ஜல்லிக்கட்டு மைதானம். துறையூர்ல புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. சமயபுரத்துல 10 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத் தேர் உலா. மணப்பாறையில சிப்காட் தொழிற்பூங்கா.

இது மட்டுமல்ல கூடிய விரைவில் நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சியில் அதனுடைய தொடக்கத்தில் திறந்து வைக்கப்போகும் பெரிய திட்டங்கள் என்னன்னு இப்போ சொல்றேன். டிவிஎஸ் டோல் கேட் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அமைய இருக்கக்கூடிய பிரம்மாண்டமான நூலகம். பஞ்சப்பூரில் டைடல் பூங்கா. சூரியூர்ல மிகப்பெரிய ஒலிம்பிக் அகாடமி ஆகியவற்றைப் விரைவில் நாம் உங்களுடைய அன்போடு ஆதரவோடு வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு விரைவில் அதைத் திறந்து வைக்க இருக்கிறோம்.

நான் சொல்லிருக்கக்கூடிய அனைத்தும் மெகா மகா திட்டங்கள். திருச்சினாலே அது பிரம்மாண்டம் தான். அதனாலதான் உங்க மாவட்டத்தில இருக்கக்கூடிய எல்லாத் தொகுதி மக்களுக்காகவும் இப்படிப் பிரம்மாண்டமான திட்டப்பணிகளை நாம செஞ்சு கொடுத்திருக்கிறோம். இவை தவிர இன்னும் ஆயிரக்கணக்கான திட்டப்பணிகளைத் தொகுதி வாரியாகச் செஞ்சு கொடுத்திருக்கிறோம். தலைநகர் சென்னைக்கே சவால் விடுகிற வகையில் திருச்சி இன்றைக்குத் தரம் உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதை என்னால நெஞ்சு நிமிர்த்திச் சொல்ல முடியும்.

மொத்தமாகத் டோட்டல் போட்டா நான் பெருமையோடு சொல்கிறேன் கடந்த 5 வருஷத்தில இந்த திருச்சிக்காக 26,066 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கு. அதனாலதான் உங்களிடத்துல நான் உரிமையோடு உங்ககிட்ட வாக்கு கேட்க வந்திருக்கேன். 2021 ஆம் ஆண்டு எங்க மேல நீங்கள்ளாம் நம்பிக்கை வச்சு எங்களை ஆதரிச்சு பொறுப்புல உட்கார வச்சீங்க. உங்களுடைய நம்பிக்கையை நான் இன்றைக்குக் காப்பாத்தியிருக்கிறேன். கொடுத்த வாக்குறுதிகளை நாங்கள் இன்றைக்கு நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். கொடுக்காத பல வாக்குறுதிகளையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

திராவிட மாடல் ஆட்சி சாதனைகள்

திராவிட மாடல் அரசு அமைந்ததும் மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பயண வசதி செஞ்சு தருவோம்னு சொன்னேன். முதலமைச்சரான முதல் நாளே பதவியேற்றுக் கொண்டு கோட்டைக்குச் சென்று முதல் கையெழுத்துப் போட்டேன். மகளிர் எல்லோரும் இன்றைக்கு டவுன் பஸ்ல கட்டணமில்லாமல் பயணிக்கிறாங்களா இல்லையா?

சொல்லுங்க, பயனடையறாங்களா இல்லையா? மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத் தொகையா 1,000 ரூபாய் வழங்குவோம்னு சொன்னோம். ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை வழங்குகிறோம். உண்டா இல்லையா?

இப்போ நம்மைப் பார்த்து தான் மத்த மாநிலங்களும் கொடுக்கத் தொடங்கி இருக்காங்க. காலை உணவுத் திட்டம், வாக்குறுதியிலே சொல்லாத திட்டம். 19 லட்சம் பிள்ளைகள் சூடான, சுவையான காலை உணவு சாப்பிட்டு விட்டு வந்து படிக்கிறாங்க.

நான் முதல்வன் திட்டமும் தேர்தல் அறிக்கையில சொல்லப்படவில்லை. 48 லட்சம் திறன் பயிற்சி சான்றிதழ்களை நம்முடைய இளைஞர்கள் நான் முதல்வன் திட்டத்திலே இன்றைக்கு பெற்றிருக்கிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வியைச் சேருவதை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட திட்டம்தான் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள். 9 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நீங்களெல்லாம் சிறப்பாகக் கொண்டாட 3,000 ரூபாய் வழங்கினோம். 3,000 ரூபாய் பொங்கல் பரிசு எல்லாருக்கும் வந்துச்சா? வந்துச்சா?

மகளிர் உரிமைத் தொகையை தேர்தல் காரணம் காட்டி தடுக்க நினைச்சாங்க. அதையும் முன்கூட்டியே தெரிந்து கொண்டு 3 மாதங்களுக்கான தொகையும், கோடைகால சிறப்பு நிதியும் சேர்த்து 2,000-மும் சேர்த்து 5,000 ரூபாய் அட்வான்ஸா கொடுத்தோம். 5,000 ரூபாய் உங்களுக்கு வந்துச்சா இல்லையா?

அரசு ஊழியர்களுடைய நீண்ட காலப் பிரச்சனை, ஏறக்குறைய 23 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி, சொன்னபடியே உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி இன்றைக்கு சாதனை படைத்திருக்கிறோம்.

தமிழகத்தில் ஜாதி கலவரமே இல்லை

இவை எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டில ஜாதிக் கலவரம் இல்லை. பாஜக ஆளுகிற மாநிலத்தைப் போல மதக் கலவரங்கள் இல்லை. உத்தரப்பிரதேசத்தைப் போல கும்பல் வன்முறை இல்லை. மணிப்பூர் மாதிரி தொடர் வன்முறை இல்லை. இப்படி எல்லாம் உருவாக்கணும்னு பாஜக செஞ்ச சூழ்ச்சிகளையும் நாம முறியடிச்சிருக்கோம்.

அமைதியான சூழலும், திறமையான மனித வளமும் நம் ஆட்சியில் இருக்கிற காரணத்தால் தான் இன்றைக்கு முதலீடுகளும் தமிழ்நாட்டில் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போகணும். அதுக்கான தெளிவான செயல்பாட்டு அறிக்கையா திமுக தேர்தல் அறிக்கையை நாங்கள் வெளியிட்டிருக்கிறேன். அதிலே நான் சொல்லியிருக்கக்கூடிய அறிவிப்புகள் எல்லாம் பல இருக்கிறது. ஆனால் நீங்க செய்திகளைப் பார்த்திருப்பீங்க, ஹைலைட்டா பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கக்கூடிய சில வாக்குறுதிகளை மட்டும் நான் சொல்றேன்.

தேர்தல் வாக்குறுதிகள்

மாதந்தோறும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை என்பதை டபுள் மடங்காக்கி இனி 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப் போறோம். என்ன மகிழ்ச்சி தானே? மகிழ்ச்சியா இல்லையா?

அதேபோல் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில கல்லூரிக்குப் போகிற மாணவர்களுக்கு இப்போ மாதம் மாதம் 1,000 ரூபாய் வழங்கிட்டு வர்றோம். இனி அது 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

அதேபோல், காலை உணவுத் திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்த நாம் அறிவித்திருக்கிறோம். மேலும், 15 லட்சம் மாணவர்கள் அதனால் பயன்பெறப் போறாங்க. இன்னும் அதிகமான தாய்மார்கள் காலையில சீக்கிரம் எழுந்து சமையல் செய்கிற சுமை குறையப்போகுது.

அதேபோல், இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய இன்னொரு சூப்பர் டூப்பர் வாக்குறுதியும் கொடுத்திருக்கிறோம். இல்லத்தரசிகள் தங்களுடைய வீட்டுக்கு தேவையான வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிவி, கிரைண்டர், மிக்ஸி, மைக்ரோவேவ் அவன், இண்டக்ஷன் அடுப்பு போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் புதிதாக வாங்கவும் அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வர இத்தகைய பொருட்களைக் கொடுத்துட்டு அதுக்குப் பதிலா வேற வாங்கிக்கவும் ‘இல்லத்தரசி’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

அதுவும் நீங்க வசிக்கிற பகுதிகளில் உள்ள உங்களுக்கு பிடிச்ச கடையில உங்களுக்கு பிடிச்ச கம்பெனி உங்களுக்கு பிடிச்ச மாடலாப் பார்த்து இந்தப் பொருட்களை நீங்க வாங்கிக்கலாம். இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் எவ்வளவு ரூபாய் கூப்பன்? எவ்வளவு ரூபாய் கூப்பன்? தலா 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் கொடுத்திடப்போறோம்னு அறிவிச்சிருக்கோம்.

இன்னைக்கு தமிழ்நாடு முழுக்க இதைப் பத்திதான் ஒரே பேச்சா இருக்கு. நம்ம பெண்கள், நம்ம பெண்கள் ஒரு சேலை வாங்கினால் கூட அவங்களுக்குப் பிடிச்ச கடையில, அவங்களுக்குப் பிடிச்ச டிசைன்ல, அவங்களுக்குப் பிடிச்ச கலர்ல வாங்கணும்னு நினைப்பாங்க. அதை மனசுல வச்சுதான் இந்தத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம்.

‘இல்லத்தரசி’ திட்டத்தில் என்ன வாங்கணும், எப்படி வாங்கணும் எல்லாமே உங்க சாய்ஸ்தான்.

அதேபோல உலகுக்கே உணவளிக்கக்கூடிய உழவர்களை மதிக்கக்கூடிய அவர்களை மகிழ்விக்க ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். இலவச மின்சாரம் பெறக்கூடிய 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்பு செட்டுகள் வழங்கப்படும்.

எல்லாரும் பழைய பம்பு செட் வச்சிருக்கிறவங்க ஒருவேளை வச்சிருப்பீங்க. சிலது அடிக்கடி ரிப்பேர் ஆகும். அதிக கரண்ட் செலவாகும். அதிக விலை கொடுத்து வாங்க முடியாத நிலையில இருப்பீங்க. அதை நம்ம திராவிட மாடல் ஆட்சியில அரசே இனி வாங்கித் தரும்.

  • நெல் கொள்முதல் விலை: குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • கரும்பு கொள்முதல் விலை: டன் ஒன்றுக்கு 4,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • பால் கொள்முதல் விலை: லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
  • முதியோர் உதவித்தொகை: இனி மாதம் 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை: 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • மீன்பிடி தடைகால சிறப்பு நிவாரணத் தொகை: 8,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • மீன்பிடி குறைகால சிறப்பு நிவாரணத் தொகை: 6,000 ரூபாயிலிருந்து 9,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • மகளிர் சுயஉதவிக் குழு சகோதரிகள் நிறைய பேர் இங்க வந்திருக்கீங்க. யாராவது மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்தவர்கள் இருந்தால் கையை உயர்த்திக் காட்டுங்க பார்ப்போம். இதோ காட்டுறாங்க பாருங்க. மகளிர் சுயஉதவிக் குழு. நன்றி நன்றி.
  • உங்களை எல்லாம் ‘பிசினஸ் வுமனா’ முன்னேற்றுவதற்காக அதற்கேற்ற வகையில ஷூரிட்டி எதுவும் இல்லாமல் 5 லட்சம் ரூபாய் வரை மானியத்தோடு வங்கிக் கடன் வழங்கப்படும்.

பேரிடர் கால இழப்பீடுகளாக, இறவை பாசன பயிர்கள் மற்றும் நெற்பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றிற்கு 25,000 ரூபாயும், நீண்ட கால பயிர்களுக்கு 27,000 ரூபாயும், மானாவாரி பயிர்களுக்கு 12,000 ரூபாயும் வழங்கப்படும். உயர்கல்வி படிக்கிற 35 லட்சம் மாணவர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டிற்குள்ளாக லேப்டாப் வழங்கப்படும். அடுத்து ஐந்து ஆண்டுகள்ல 10,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டின் இதயமாக இருக்கிற இந்த டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சி திட்டம், இப்படி ஏராளமான வாக்குறுதிகளை நாம கொடுத்திருக்கிறோம். நாங்க சொன்னா செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம். நான் கலைஞரின் மகன். யாருடைய மகன்? கலைஞரின் மகன். சொன்ன வாக்குறுதிகளை மறக்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன்.

கடந்த 5 ஆண்டுகள்ல தமிழ்நாட்டினுடைய நிதி நிலையை சீராக்கி, ஒவ்வொன்னா நாங்க நிறைவேற்றிட்டு வர திட்டங்கள் அதற்கு சாட்சி.

அதிமுக- பாஜகவுக்கு தோல்வியை பரிசாக கொடுங்க

தன்னோட பத்தாண்டுகால ஆட்சியில தமிழ்நாட்டை எல்லா துறைகளிலும் படுகுழிக்கு தள்ளுன அதிமுகவும், இந்தியாவை வரலாற்று காணாத சரிவுக்கு கொண்டு போயிட்டு இருக்கிற பாஜகவும் சேர்ந்து அமைச்சிருக்க கூடிய கூட்டணிக்கு, இந்தத் தேர்தல்லயும் வழக்கம்போல படுதோல்வியை தான் நீங்க பரிசா தரணும். தயாராயிட்டீங்களா?

மக்களுக்கு நேரடியாக 8,000 ரூபாய்க்கான கூப்பனை தரப்போறோம். நம்முடைய இல்லத்தரசிகள் திட்டத்தை பார்த்து இன்னைக்கு வயிறெரிஞ்சு, அது ஊழலுக்கான திட்டம்ன்னு சொல்றாரு. யாரு? பழனிசாமி சொல்றாரு. எந்த பழனிசாமி? சம்மந்திக்கு கான்ட்ராக்ட் கொடுக்குறதுக்காகவே ஆட்சியை நடத்துன பழனிசாமி.

அன்றைய கலைஞர் டிவி

திமுக செய்கிற ஒவ்வொரு திட்டமும் தரமானதாக இருக்கும். எடுத்துக்காட்டுக்கு சொல்றேன், தலைவர் கலைஞர் அவர்கள் 2006 தேர்தலின் போது கலர் டிவி வழங்குவேன்னு சொன்னாரு. ஆட்சி பொறுப்புக்கு வந்த உடனே கலர் டிவியோட கொள்முதல் நேர்மையாகவும், தரமானதாகவும், யாரும் குறை சொல்ல முடியாத வகையில இருக்கணும்ன்னு முடிவு செஞ்சு, அதுக்கான டெண்டரை, ஒப்பந்தத்தை, ஒப்பந்ததாரரை முடிவு செய்ய அனைத்து கட்சிகள் கொண்ட, அதிமுகவும் சேர்த்து, எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுகவும் சேர்த்து, அனைத்து கட்சி உறுப்பினர்களை சேர்த்து ஒரு குழுவை அமைச்சார். 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே கலர் டிவி வழங்குகிற அந்த விழாவை தொடங்கி, ஒன்றரை கோடிக்கு அதிகமான நம்முடைய தமிழர்களோட வீடுகளுக்கு கலர் டிவியை வழங்கினோம். கிட்டத்தட்ட 20 வருஷம் ஆச்சு, இன்னைக்கும் பல வீடுகள்ல கலர் டிவியா மட்டுமல்ல, கலைஞர் டிவியா அது நிலைச்சு நிக்குது. இதுக்கு பேர்தான் குவாலிட்டி.

அதிமுக ஆட்சி மிக்சி, கிரைண்டர்

இதுவே அதிமுக ஆட்சியில மிக்ஸி கொடுத்தாங்க, கிரைண்டர், மின்விசிறின்னு கொடுத்தீங்களே என்னாச்சு? தாய்பாங்குல இருக்குது. இந்த லட்சணத்துல வாய் இருக்குன்னு என்ன வேணாலும் பேசலாம்ன்னு பேசிட்டு இருக்கார் நம்முடைய பழனிசாமி அவர்கள். ஏற்கனவே 2021 தேர்தல்ல மகளிர் உரிமைத் தொகையா நாங்க 1,000 ரூபாய் வழங்குவோம்ன்னு சொன்ன உடனே, அவசர அவசரமா வீட்ல இருக்கிற ஜெராக்ஸ் மெஷினை ஆன் பண்ணிட்டு 1,500 ரூபாய் தருவோம்ன்னு அறிக்கை வெளியிட்டார். பழனிசாமி வாய் சவடாலும், அவரோட அலங்கோல ஆட்சி நிர்வாகத்தோட ஊழலும், அந்தப் பவுஸும் தெரிஞ்சு மக்களாலான நீங்க அவரைப் புறக்கணிச்சீங்க. இப்பவும் மக்களுக்கு நல்லது நடக்கக்கூடாதுன்னு வயித்தெரிச்சல்ல தன்னைப் போலவே பிறரையும் நினைச்சு ஊழல் நடக்குதுன்னு பேசிட்டு இருக்கிறார்.

எடப்பாடியின் துரோகங்கள்

அண்மையில மதுரையில ஒரு சம்பவம் நடந்துச்சு. இவங்க ஆட்சிக்கு வந்தா என்ன நடக்கும் என்பதற்கு டிரைலர்தான் அது. மதுரையில நடைபெற்ற கூட்டத்தினுடைய நுழைவு வாயில் தந்தை பெரியார் படத்தை வைக்கக்கூடாதுன்னு பாஜக சொன்னதும், சுயமரியாதை இல்லாம அதை எடுக்கத் துணிந்தவர்தான் பழனிசாமி. மதுரை பாஜக ஆதரவு கூட்டத்துல தந்தை பெரியாரையும், அண்ணாவையும் கொச்சைப்படுத்துகிற மாதிரி காணொளி காட்சிகள் எல்லாம் வெளியிட்டாங்க.

அண்ணா திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 3 பேரு கொஞ்சம் கூட சுரணை இல்லாம அதைப் பார்த்துகிட்டு இருந்தாங்க. நான் கேக்குறேன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இருந்தா விட்டிருப்பாரா? அல்லது அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருந்தால்தான் விட்டிருப்பாரா? பேரறிஞர் அண்ணாவை இப்படி அசிங்கப்படுத்தினா பார்த்துட்டு சும்மா இருந்திருப்பாங்களா?

பழனிசாமியோட ஒரே சாதனை அண்ணா திமுக என்கிற கட்சியை அடிமைக் கூட்டமா சீரழிச்சிருக்கிறது தான் அவங்க சாதனை. திராவிடம் என்ற சொல்லும் அந்த கூட்டத்துல அவமானப்படுத்தப்படுது. அதிமுக முன்னணியினர் கூட அதைக் கூட தடுக்கல. திராவிடம்ன்னா என்னன்னே எனக்குத் தெரியாது, நான் புராணங்கள் எல்லாம் படிச்சதில்லைன்னு கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம சிரிச்சுக்கிட்டே சொன்னவர்தான் பழனிசாமி. இந்த துப்புக் கெட்ட பழனிசாமி யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, தன்னுடைய பதவியைக் காப்பாத்திக்கிட்டா போதும்ன்னு பாஜகவுடைய பாதம் தாங்கியா இருந்து கொண்டிருப்பவர்தான் பழனிசாமி.

சிறுபான்மை சமூகத்திற்கும் இலங்கை தமிழருக்கும் துரோகம் இழைக்கக்கூடிய வகையிலே குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்து அதை நிறைவேற துணை போன கட்சிதான் அதிமுக. ஏன், இவங்களோட சேர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸும் ஆதரவா வாக்களிச்சு துரோகம் செஞ்சார். இவங்களாலதான் சிறுபான்மையினருக்கு எதிரான அந்த சட்டமே மாநிலங்களவையில நிறைவேறிச்சு.

அதைத் தொடர்ந்து நடந்திருக்கக்கூடிய போராட்டங்கள்ல ஆயிரக்கணக்கான மக்கள் மேல தாக்குதல் எல்லாம் நடத்தப்பட்டுச்சு. சுமார் 70 பேர் கொல்லப்பட்டாங்க. இவங்களோட இரத்தக் கறை இன்றைக்கு அதிமுக கையிலதான் இருக்கு. இவ்வளவிற்கும் பிறகும் பழனிசாமி என்ன பேசினார்? ‘குடியுரிமை சட்டத்தால யாருக்கு எந்த பாதிப்பும் கிடையாது, எந்த முஸ்லிம் பாதிக்கப்பட்டார்ன்னு காட்டுங்க’ என்று சொன்னவர்தான் பழனிசாமி.

முழு சங்கியாக மாறிய எடப்பாடி பழனிசாமி

ஆனா சிறுபான்மையினர் வாக்குகள் வேணும்னு 2024 தேர்தல்ல தனியா நின்னு நாடகமாடுனப்போ, சிஏஏ சட்டத்தை கண்டிக்கிறதா பல்டி அடிச்சார் பழனிசாமி. ‘பாஜக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துறாங்க, சிஏஏ சட்டம் ஒரு வரலாற்று பிழை’ன்னு பிளேட்டை அப்படியே திருப்பிப் போட்டார் பழனிசாமி. நான் இப்ப கேட்கிறேன், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களே, நீங்க இப்போ அந்த சட்டத்தை ஆதரிக்கிறீங்களா எதிர்க்கிறீங்களா? தைரியம் இருந்தா வெளிப்படையா சொல்லுங்க.

பழனிசாமியோட துரோகப் பட்டியல் இதோடு நிக்கல. மூன்று வேளாண் சட்டங்களை பாஜக கொண்டு வந்தப்போ கண்ணை மூடிக்கிட்டு அதையும் ஆதரிச்சார் இந்த பழனிசாமி. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரா போராடுன எட்டு மாநில விவசாயிகளை புரோக்கர்னு வசைபாடி கொச்சைப்படுத்தினார். இப்படி பாஜகவோட கூட்டணி சேர்ந்து முழுசா சந்திரமுகியாவே மாறி இருக்கிறார் பழனிசாமி. அதாவது முழு சங்கியாகவே மாறிவிட்டார்.

அதிமுக- பாஜக கூட்டணி யார் தலைமை? யார் முதல்வர்?

ஊர் ஊரா போய் அதிமுக கூட்டணியில எந்த பிரச்சனையும் இல்லைன்னு பழனிசாமி சொல்லிக்கிட்டு இருக்காரு. பிரச்சனை இல்லைன்னா எதுக்காக அத்தனை தடவை டெல்லிக்கு போனீங்க? டெல்லிக்கு போய் அமித் ஷாவினுடைய அப்பாயிண்ட்மெண்ட்டுக்காக பல மணி நேரம் ஏன் காத்துக் கிடந்தீங்க? அதுவும் வேற வேற கார்ல மாறி மாறி போய் முகத்தையெல்லாம் மூடிக்கிட்டு ஏன் வெளியில வந்தார்?

சரி நான் கேட்கிறேன், கூட்டணிக்கு தலைமை அதிமுக தான் சொல்றாங்க. ஆனா எல்லா கட்சிகளும் பாஜக கிட்ட போய் ஏன் பேச்சுவார்த்தை நடத்துனாங்க? இது எப்படி தெரியுமா இருக்கு? ‘மாப்பிள்ளை அவர்தான் ஆனா அவர் போட்டுருக்க சட்டை என்னோடது’ன்னு நம்ம சூப்பர் ஸ்டார் நடிச்ச படையப்பா படத்துல வர்ற காமெடி மாதிரி இருக்கு.

நான் தெரியாம தான் கேட்கிறேன், கூட்டணிக்கு அதிமுக தான் தலைமைன்னா அதுல இருக்கக்கூடிய சிறிய கட்சிகள் எல்லாம் ஏன் அதிமுக சின்னத்துல போட்டியிடாம பாஜகவோட சின்னத்துல போட்டியிடுறாங்க? பழனிசாமியை முதலமைச்சராக்குவோம்னு பிரதமர் மோடி அவர்கள் இதுவரை சொல்லி இருக்கிறாரா? அதிமுக என்ற பெயரைக் கூட அவர் சொன்ன மாதிரி எனக்கு தெரியல. ‘என்டிஏ சர்க்கார், என்டிஏ சர்க்கார்’னு தான் திரும்பத் திரும்பச் சொல்றார்.

தமிழ்நாடு vs டெல்லி

ஆனா நாம ‘தமிழ்நாடு வெர்சஸ் என்டிஏ, தமிழ்நாடு வெர்சஸ் டெல்லி’ன்னு சொன்னா மட்டும் ‘இது என்ன டெல்லி தேர்தலா? ஏன் அப்படி சொல்றீங்க?’ன்னு பெரிய அறிவுக்கொழுந்து மாதிரி கேட்கிறார் பழனிசாமி. தன் மீதான ஊழல் புகார்கள், உறவினர் வீடுகள்ல நடந்த ரெய்டுகள்ல இருந்து தப்பிக்க மொத்த கட்சியையும் பாஜக கிட்ட பழனிசாமி அடகு வச்சிட்டார். மக்கள் வாக்களிக்காமலேயே எம்எல்ஏக்களை ஏலத்துல எடுத்து ஒருமுறை முதலமைச்சர் ஆயிட்டார். எப்படி? மக்கள் வாக்களிக்காமலேயே எம்எல்ஏக்களை ஏலத்துக்கு எடுத்து ஒருமுறை முதலமைச்சர் ஆயிட்டார்; கூவத்தூர் எல்லாம் உங்களுக்கு தெரியும். திரும்பவும் இவர்கிட்ட ஆட்சி போனா ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் டெல்லி கிட்ட அடகு வச்சிருவார்.

அதிமுகவின் ஓனர் பாஜக

அடகு என்ன மொத்தமா வித்திடுவாரு. இவருடைய ஓனரான பாஜாகவோட ஒரே நோக்கம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கிறது தான். நேரா வந்தா தமிழ்நாட்டு மக்கள் நோட்டாவுக்கு கீழ அனுப்பிச்சிடுவாங்க. அதனால்தான் கொத்தடிமை கூட்டமாக இருக்கக்கூடிய ஆதிமுகவை முகமூடி போட்டுக்கிட்டு வந்திருக்காங்க. கடந்த 11 ஆண்டுகாலத்தில் பாஜாக தமிழ்நாட்டுக்கு எதையும் செய்யல. நம்ம மக்களோட எந்த கோரிக்கையும் நிறைவேற்றல. 12 ஆண்டுகளா ஆட்சி செய்றாங்க. ஆனா தமிழ்நாட்டுக்கு இதுவரை சிறப்பு திட்டம் கூட கிடையாது.

மத்திய பாஜக அரசின் துரோகங்கள்

அறிவிச்ச மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இப்ப என்ன நிலைமைல இருக்குனு தெரியும் உங்களுக்கு, அதுவும் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. நமக்கு நியாயமா கிடைக்க வேண்டிய நிதியை கூட விடுவிக்க மறுக்கிறாங்க. மதுரை, கோவை, திருச்சி இந்த மாநகர எதிர்கால வளர்ச்சிக்காக மெட்ரோ ரயில் திட்டத்தை கேட்டோம், அதுவும் கொடுக்கல, முடியாதுன்னு சொல்லிட்டாங்க. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை ஒழுங்காகத் தராமல் இழுத்தடிக்கிறாங்க. ஓசூர் விமான நிலையத்துக்கும் அனுமதி தரல. பள்ளி குழந்தைகளுக்கான கல்வி நிதியையும் தருவது தடுக்கிறாங்க. குடிநீர் திட்டத்துக்கு நிதி கிடையாது.

தமிழகத்தில் மோடி

இவ்வளவு அநீதிகளையும் செஞ்சிட்டு தேர்தல் வந்துருச்சுன்னு தமிழ்நாட்டுக்கு கிளம்பி வர்றார் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள். கடந்த மாசம் கூட இதே திருச்சிக்கு பிரதமர் மோடி அவர்கள் வந்தார். அங்க கேட்கிறேன் அப்படி வந்தவர் இதெல்லாம் ஒன்றிய பாஜக அரசின் மூலமாக தமிழ்நாட்டுக்கு செஞ்சிருக்க கூடிய திட்டங்கள்னு எடுத்துக்காட்டினாரா சொன்னாரா? எங்களால தமிழ்நாட்டுக்கு இந்த நன்மைகள் எல்லாம் கிடைச்சிருக்குனு பட்டியல் போட்டு சொன்னாரா? இருந்தாதானே சொல்ல முடியும். சட்டியில் இருந்தாதானே அகப்பையில் வரும்.

இதுல திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லைனு பொத்தாம்பொதுவா சொல்லிட்டுப் போறாரு. என்னோட ஒவ்வொரு பேச்சிலும் ஒவ்வொரு சாதனைத் திட்டம் குறித்தும் புள்ளி விவரத்தோடு விளக்கி சொல்றேன். நம்ம அரசோட திட்டங்களால் பயனடைகிற பலரும் பயனடைஞ்சுகிட்டு இருக்கிற அந்த மக்களும் ஊடகங்களும் அதைத் தொடர்ந்து பதிவு செய்கிறார்கள். இன்னும் சொல்லணும்னா மக்களால கேட்டு இருந்தா கூட திராவிட மாடல் திட்டங்களை சொல்லிருப்பீங்கல்லையா? பரவால்ல. எப்பவும் டூர் மோடுலேயே இருக்கிற பிரதமருக்கு இதையெல்லாம் கேட்டு தெரிஞ்சுக்க நேரம் இருந்திருக்காது. அப்படி இல்லன்னா தமிழ்நாட்டை ஒழிக்கணும் என்ற எண்ணம் வந்திருக்காது.

1 வாரம் தங்கிட்டு போங்க மோடி

அவர்கிட்ட நான் கேட்கிறேன் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களே தமிழ்நாட்டுக்கு வாங்க. ஒரு வார காலம் இங்கேயே தங்கி இருந்து எங்க தமிழ்நாடு எப்படி தழைத்து சிறந்த தமிழ்நாடா இருக்குனு தெரிஞ்சுக்கோங்க. இந்தியாவிலேயே அதிக அளவு பெண்கள் வேலைக்கு போற மாநிலம் நம்முடைய தமிழ்நாடு தான். பாஜக ஆளுகிற மாநிலங்களில் நடக்கிற மாதிரி அட்டுழியங்கள் இங்கே கிடையாது. பெண்களை பாதுகாப்பாக வாழ வைப்போம்னு பிரதமர் சொல்ல வேண்டியது தமிழ்நாட்டில் இல்ல. பாஜக ஆளுகிற மாநிலங்களில் போய்தான் இதையெல்லாம் பேசணும்.

அதை விட்டுவிட்டு என்டிஏ கூட்டணியினர் தமிழ்நாட்டை பற்றி அவதூறா பேசிப் பேசுறது தமிழ்நாட்டை நாசப்படுத்தவும் தமிழ்நாட்டு வளர்ச்சியை கெடுக்கணுமுன்னுதான். தமிழ்நாட்டின் முன்னேற்றமும் வளர்ச்சியும் தொடரனும்னா ஏழாவது முறையும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையனும். திராவிட மாடல் தொடரணும். பாஜகவும் அதன் கொத்தடிமை கூட்டமும் அதோடு தீமைகள் நாம நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும். தமிழ்நாடு தமிழ்நாடாகத்தான் இருக்கணும்.

தமிழ்நாட்டு பெயரையே மாற்றிடுவாங்க..

உத்தரபிரதேசம் போல மணிப்பூர் போல வன்முறைக்காடா மாறக்கூடாது. இவங்க வந்தா தமிழ்நாட்டோட பெயரைக் கூட தட்சிண பிரதேஷ்னு கூட மாற்றவும் தயங்க மாட்டாங்க. இதைத் தடுக்கணும்னா ஒட்டுமொத்த தமிழ்நாடும் பாஜக அதிமுக கூட்டணிக்கு எதிரா ஓரணியில் இணையணும். நம்முடைய எதிரிகளையும் பாஜகவின் உதிரிகளையும் வீழ்த்தணும். நல்லா புரிஞ்சுக்கோங்க நாம போராடுறது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றிக்காக மட்டுமல்ல, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல தமிழ்நாட்டினுடைய வெற்றிக்காக. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

🔴LIVE: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் நேரலை | MKStalin Speech LIVE | Trichy
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share