ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: லண்டனில் விஜய் தூதர்களை சந்திக்கும் விஜயகாந்த் குடும்பம்! தேமுதிக- தவெக கூட்டணி?

Published On:

| By Minnambalam Desk

digital thinnai: will dmdk alliance with tvk vijay

வைஃபை ஆன் செய்ததும், “அங்கிட்டு இங்கிட்டு எங்கிட்டு” இதுக்கு எல்லாம் அர்த்தம் தெரியுமாப்பு? என ‘கள்ளழகர்’ சீமை மொழியில் ஒலித்த குரலை கேட்டபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். digital thinnai: will dmdk alliance with tvk vijay

“அங்கிட்டு இங்கிட்டு” என்றால் அங்கேயும் இங்கேயும் என்பது அர்த்தம்..

ADVERTISEMENT

ஓஹோ..

திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெறுவதற்காக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மூலம் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறது தேமுதிக.

ADVERTISEMENT

மாநிலங்களவை எம்பி பதவி விவகாரத்தில் அதிமுக மீது கடும் அதிருப்தியை காட்டியது தேமுதிக. இதனைத்தான் லாவகமாக திமுக தலைமை கையாண்டு வருகிறது. அமைச்சர் எ.வ.வேலு மூலமாக கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த தருணத்தில்தான், மதுரை திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நன்றி சொல்ல எல்லாம் ஒன்று கூடி வருவதாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

இதில் என்ன ட்விஸ்ட்?

இந்த சூழ்நிலையில்தான் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று ஜூலை 15-ந் தேதி இரவு லண்டனுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு ஒரு வாரம் தங்குகிறார் பிரேமலதா.

ADVERTISEMENT

லண்டன் பயணத்துக்கும் அரசியலுக்கும் என்னப்பா தொடர்பு?

லண்டனுக்கு மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரோடு செல்கிறார் பிரேமலதா. அரசியலில் கால் பதித்திருந்தாலும் விஜய பிரபாகரன், உலகப் புகழ்பெற்ற இசை கலைஞர்களுடன் இணைந்து இசைக் கச்சேரிகளை நடத்துகிறார்.

அண்மையில் மும்பையில் ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை விஜய பிரபாகரனின் நிறுவனம் நடத்தியது. இதேபோலத்தான் லண்டனிலும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் விஜய பிரபாகரன். அந்த நிகழ்ச்சியில்தான் பிரேமலதாவும் கலந்து கொள்கிறார்.

அத்துடன், போரூர் அருகே காட்டுப்பாக்கத்தில் பிரேமலதா மிகப் பிரம்மாண்டமான பங்களா ஒன்றை கட்டி வருகிறார். இந்த பங்களாவுக்காக அதிநவீன கருவிகள் சிலவற்றை லண்டனில் ‘கொள்முதல்’ செய்ய இருக்கிறதாம் விஜயகாந்த் குடும்பம்.

இதே கால கட்டத்தில் லண்டனில் மிக முக்கியமான ஒரு சந்திப்புக்கும் ஏற்பாடுகள் ஜரூராக நடக்கிறதாம்.

இது தொடர்பாக நாம் அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, திமுகவுடன் அமைச்சர் எ.வ.வேலு மூலமாக தேமுதிகவின் தலைமை கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இன்னொரு பக்கம், எப்போதுமே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தங்களது குடும்பத்தில் ஒருவர் என பேசுவதையும் வழக்கமாகவே வைத்திருக்கிறார் பிரேமலதா.

திமுகவுக்கு நட்புக்கரம் நீட்டிக் கொண்டே தவெகவுடனும் கை குலுக்க தேமுதிக தயார் என்பதற்கான சமிக்ஞைதான் இந்த பேச்சுகள் எல்லாம்.

தவெகவுடனான நட்புறவின் அடுத்த கட்டமாகத்தான் லண்டனில் தவெகவின் மிக முக்கியமான நிர்வாகிகளை- நடிகர் விஜய்யின் தூதர்களை பிரேமலதா சந்தித்து பேச இருக்கிறார். தேமுதிக- தவெக கூட்டணி குறித்து இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது.

லண்டனில் நடைபெறும் இந்த சந்திப்புகள், பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பியதும் அங்கிட்டு திமுகவா? இங்கிட்டு தவெகவா? என்ற ஒரு முடிவுக்கு வரும் தேமுதிக என்கின்றனர்.

அத்துடன் தேர்தல் சுற்றுப்பயணத்தையும் இதே ஜரூரில் பிரேமலதா தொடங்க இருக்கிறார். தமிழகத்தின் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆகஸ்ட் 3-ந் தேதி பயணத்தைத் தொடங்கும் பிரேமலதா, ஆகஸ்ட் 23-ந் தேதி செங்கல்பட்டில் முதல் கட்டத்தை நிறைவு செய்கிறார். இந்த பயணத்தின் போது யாருடன் கூட்டணி என்பதை லண்டன் பேச்சுவார்த்தை அடிப்படையில் போகிற போக்கில் மறைமுகமாக வெளிப்படுத்துவார் பிரேமலதா என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என டைப் செய்தபடியே ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share