டிஜிட்டல் திண்ணை: கலைஞர் பாணியில் ஸ்டாலின்.. மீண்டும் ” “இதயம் இனித்தது கண்கள் பனித்தன”- இணைந்த மாறன் சகோதரர்கள்!

Published On:

| By Minnambalam Desk

Maran Brothers

வைஃபை ஆன் செய்ததும், அன்று கோபாலபுரத்தில்.. இன்று சித்தரஞ்சன் சாலையிலா? என புன்முறுவலுடன் டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
Stalin Kalanidhi Maran Dayanidhi Maran
நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் கடந்த ஜூன் 20-ந் தேதி, “ஸ்டாலின் எச்சரிக்கையை மீறி கலாநிதிக்கு நோட்டீஸ் அனுப்பிய தயாநிதி மாறன் – உள்ளே வருமா ஈடி?” என்ற தலைப்பில் ‘மாறன் சகோதரர்களிடையே என்ன நடந்து கொண்டிருக்கிறது? கலைஞரைப் போல முதல்வர் ஸ்டாலின் கவனமுடன் இந்த விவகாரத்தை எப்படி கையாள்கிறார்? என எழுதி இருந்தோம்.

அந்த செய்தியின் முடிவில், “தயாநிதி மாறன் முன்வைத்த குற்றச்சாட்டுகளால் மத்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை உள்ளே நுழைவதற்கு முன்னரே முதல்வர் ஸ்டாலின் இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பதுதான் கலைஞர் குடும்பத்தின் நலன் விரும்பிகளின் எதிர்பார்ப்பு” எனவும் பதிவு செய்திருந்தோம்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய போது, கலாநிதி- தயாநிதி இடையேயான பிரச்சனை தனிப்பட்டதுதான்.. இருந்தாலும் நீங்களும் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டாராம்.

முதல்வர் ஸ்டாலினும், கலாநிதி மாறன்- தயாநிதி மாறன் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். தயாநிதி மாறனுடனும் முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் இந்து என். ராமை தொடர்பு கொண்டு, ‘தயாநிதி ரொம்ப பிடிவாதமாக இருக்கிறார்.. நீங்க பேசிப் பாருங்கள்’ என கேட்டுக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின். இதனையடுத்து இந்து என்.ராமும் தயாநிதி மாறனுடன் பேசியிருக்கிறார். இந்த பேச்சுவார்த்தைகளின் போது சன் குழுமத்துக்கு சொந்தமான தினகரன் அல்லது சுமங்கலி நிறுவனத்தை தமக்கு தர வேண்டும் என தயாநிதி மாறன் டிமாண்ட் செய்திருக்கிறார். ஆனால் கலாநிதி மாறன் இதனை ஏற்க மறுத்தார்.

அதே நேரத்தில் தயாநிதி மாறனுக்கு முன்னர் தாம் தருவதாக சொன்ன ‘பங்குத் தொகை’யை அதிகமாக தருவதாகவும் சொல்லி இருக்கிறார் கலாநிதி மாறன். இப்படியாக நீடித்த நீண்ட பேச்சுவார்த்தைகள் ஒருவழியாக முடிவடைந்து ‘செட்டிலாகிவிட்டதாம்’. இந்த தகவல் முதல்வர் ஸ்டாலினுக்கும் சொல்லப்பட்டுவிட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து கலாநிதி மாறன், தயாநிதி மாறன், அவர்களது சகோதரி அன்புக்கரசி ஆகிய மூவரும் நேற்று ஜூலை 6-ந் தேதி, ஒரே காரில் முதல்வர் ஸ்டாலினின் சித்தரஞ்சன் சாலை இல்லத்துக்கு சென்று சந்தித்தனர். அப்போது, கலாநிதி மாறன்- தயாநிதி மாறன் சகோதரர்களை ‘அன்பு’டன் கை குலுக்க வைத்து மகிழ்ந்தார் முதல்வர் ஸ்டாலின்.

கலைஞர் குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்பை மிகவும் கவனமாகவும் தமக்கே உரிய பொறுப்பை உணர்ந்தும் கையாண்ட முதல்வர் ஸ்டாலினை கலைஞர் குடும்பத்தின் நலன் விரும்பிகள் ரொம்பவே பாராட்டுகின்றனர்.

அன்று, இதே போல கலைஞர் குடும்பத்தில் பிளவு ஏற்பட்ட போது, அனைவரையும் அழைத்து உட்கார வைத்து பேசி பிரச்சனையை முடித்து வைத்தார் கலைஞர். அந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கோபாலபுரம் இல்லத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்த போது, “இதயம் இனித்தது, கண்கள் பனித்தன” என கூறினார் கலைஞர். அவரது வழியைப் பின்பற்றி அவரது பாணியிலேயே செயல்பட்டு தற்போது மாறன் சகோதரர்களிடையேயான சலசலப்பை முடிவுக்கு கொண்டு வரவைத்து இந்த முறை சித்தரஞ்சன் சாலையில் “இதயம் இனிக்க, கண்கள் பனிக்க வைத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின்” எனவும் நெகிழ்கின்றனர் கலைஞர் குடும்பத்தின் நலன் விரும்பிகள் என டைப் செய்துவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share